RSS

Category Archives: Uncategorized

இரண்டாம் முள்ளிவாய்க்கால்-06


ஒரு விடுதலைப்போராட்டத்தின் வரலாறு கணனி விசைப்பலகைகளில் தட்டுவதன் மூலமோ மை கொண்டு காகிதத்தில் எழுதுவதன் மூலமோ உருவாக்கப்படுவதில்லை.அது பல்லாயிரக்கணக்கான போராளிகளின் உயிராலும் இரத்தத்தாலும் பல இலட்சக்கணக்கான மக்களின் உழைப்பாலும் வியர்வையாலுமே எழுதப்படுகிறது. அந்த வரலாற்றை அதன் மகத்துவத்தை ஒருபோதும் எதிரிகளாலோ அவர்களது ஒத்தோடிகளாலோ புரிந்துகொள்ள முடியாது.
0000
தேசிய விடுதலைச் செயற்பாடுகளில் புதியவர்களை இணைப்பது பற்றி….
0000

ltteschool-495x335
ஒரு அரசியல் கட்சிக்கு அல்லது ஒரு சங்கத்திற்கு அல்லது ஒரு பொது அமைப்புக்கு ஆட்களை சேர்ப்பதற்கும் ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு ஆட்களை சேர்ப்பதற்கும் நிறைய வேற்றுமைகள் இருக்கின்றன.

ஓரு அரசியல் கட்சியில் ஒரு சங்கத்தில் அல்லது ஒரு பொது அமைப்பில் பொதுவாக ஒருவர் அங்கத்துவ படிவம் ஒன்றை நிரப்பிக் கொடுத்து அதற்குரிய அங்கத்துவ பணத்தை செலுத்துவதன் மூலம் அவற்றின் உறுப்பினராகலாம்.

ஆனால் ஒரு விடுதலை இயக்கத்துக்கு இதே முன்மாதிரியில் அங்கத்துவ படிவம் நிரப்பி அங்கத்துவ பணம் பெற்றுக்கொண்டு ஒருவரை அவ்வளவு சுலபமாக சேர்த்துவிட முடியாது.

ஒரு விடுதலைப்போராட்டமென்பது மூடிய அறைக்குள் நடத்தும் விவாதமோ ஒரு திறந்த வெளியில் நடத்தும் பொதுக்கூட்டமோ அல்லது ஒரு மைதானத்தில் நடக்கும் விளையாட்டுப் போட்டியையோ போன்றதல்ல.

அது இரத்தம் சிந்தி உயிரைக்கொடுத்து போராடும் களமுனைகளைக் கொண்டது.கரணம் தப்பினால் மரணம் என்று சொல்லக்கூடிய கரடுமுரடான ஆபத்தான பயணப்பாதை அது.

பணமும் பட்டங்களும் சமூக அந்தஸ்த்தும் பிரமுகர்களின் பரிந்துரைகளும் இந்தப்பயணத்துக்கு உதவாது.

‘போர்க்குணம்’ என்பது தான் இந்தப்பாதையில் பயணிப்பவனுக்கான முதல் அடிப்படை தகுதியாகும். எவனொருவன் தன்னைச்சுற்றி நடக்கும் அநீதியைக் கண்டு கோபம்கொள்கிறானோ,அதற்கெதிராக போராடத் துணிகிறானோ அவன் தான் போராளியாக இணைத்துக்கொள்ள அல்லது போராட்ட செயற்பாட்டாளனாக இணைத்துக்கொள்ளத் தகுதியானவன்.

பொதுவாக விடுதலை அமைப்புக்கள் தங்களுக்கான செயற்பாட்டாளர்களை அல்லது உறுப்பினர்களை மக்கள் மத்தியில் இருந்து தேர்ந்தெடுப்பதற்கு பொதுவான சில நடைமுறைகளை கையாழ்கின்றன.

ஒரு விடுதலை அமைப்பு தன்னுடைய உண்மையான ஆதரவுத்தளத்தை இனங்காண்பதற்கு தன்னைப்பற்றிய அவதூறு பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் தாமே முன்வைக்கவேண்டும்.

இந்த அவதூறு பிரச்சாரத்தை கண்டு யாரெல்லாம் கொதித் தெழுகிறார்களே யாரெல்லாம் இந்த அவதூறு பரப்புரையை முறியடிக்க எதிர் பரப்புரையை முன்னெடுக்கிறார்களோ அவர்களே தமது ஆதரவு தளம் என்பதை இனங்காணலாம்.

பின்னர் இந்த ஆதரவு தளத்தை சேர்ந்தவர்களை அணுகி அவர்களுக்கு இலகுவான சில வேலைத்திட்டங்களை கொடுக்க வேண்டும் அந்த வேலைத்திட்டங்களை செய்து முடிப்பதில் அவர்கள் காட்டும் வேகம் விவேகம், இரகசியம் காக்கும் தன்மை, தனிமனித ஒழுக்கம், ஆளுமை, தலைமைத்துவப் பண்பு, கூட்டுச் செயற்பாடு என்பவற்றை தொடர்ச்சியாக அவதானித்து அதன் பின்பு அவர்களை தீவிர ஆதரவாளர்கள் என்ற நிலைக்கு கொண்டுவரவேண்டும்.

அதன் பின்பு மேலும் பல அவதானிப்பு சோதனைகளை நடத்திய பின்பே அவர்களை செயற்பாட்டாளர்கள் அல்லது உறுப்பினர்கள் என்ற நிலைக்கு கொண்டு வரவேண்டும்;;.

மாறாக ஒரு விடுதலைப் போராட்டம் நெருக்கடிகளை சந்திக்கின்ற காலகட்டத்தில் திடீர் இட்டலி, திடீர் தோசை திடீர் இடியப்பம் என்கிற மாதிரி திடீர் புரட்சியாளர்கள் ‘தலைவர் வாழ்க ,போராட்டம் வாழ்க, எதிரிக்கு அடிப்போம் உதைப்போம் வெட்டுவோம் முறிப்போம்’ என்று விர வசனங்கள் பேசிக்கொண்டு புற்றீசல்கள் போல பலர் புறப்பட்டு வருவார்கள்.ஒரு விடுதலை அமைப்பு இவ்வாறானவர்களை எந்தவித கண்காணிப்பு உறுதிப்படுத்தல் நிலைக்கும் உட்படுத்தாமல் உள்வாங்குமாக இருந்தால் நிச்சயமாக அந்த விடுதலை இயக்கம் மிகப்பெரிய நெருக்கடியை எதிர் கொள்ளும்.எதிரி இந்த திடீர் புரட்சியாளர்கள் வேடத்தில் நிச்சயமாக தன்னுடைய உளவாளிகளையும் ஒத்தோடிகளையும் அந்த விடுதலை அமைப்புக்குள்; புகுத்தி மிகப் பெரிய பேரழிவை உண்டாக்குவான்.

புலத்தில் தமிழ் தேசிய செயற்பாட்டுத் தளத்தில் இன்று ஏற்பட்டிருக்கின்ற பிளவுகளும் குழப்பங்களும் சீரழிவுகளும் 2009 மே 18 முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்குப் பின்னர் தான் எற்பட்டது என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.இது தவறான ஒரு நினைப்பாகும்.

2007 பிற்பகுதிலே இதற்கான அடித்தளம் பிரான்சில் இடப்பட்டுவிட்டது.

2007 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரான்சில் இருந்த தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் 39 செயற்பாட்டாளர்கள் பிரான்சின் பயங்கரவாத தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிகழ்வு இடம்பெற்றது.

இது இங்குள்ள தேசிய செயற்பாட்டுத்தளத்தில் ஒரு பெரிய வெற்றிடத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தியது.இவ்வாறான ஒரு நெருக்கடியான நிலையில் உடனடியாக நெருக்கடிகளை சமாளித்து செயற்படுவதில் அனுபவமும் ஆற்றலும் உள்ள மூத்த செயற்பாட்டாளர்களை பொறுப்புக்குக் கொண்டு வந்து செயற்பாட்டுத் தளத்தை மட்டுப்படுத்தி வைத்துக்கொண்டு கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர்களை விடுவிப்பதற்கான சட்ட நடவடிக்கையை துரிதப்படுத்தி இருக்க வேண்டும்.

ஆனால் அதற்கு பதிலாக டென்மார்க்கில் இருந்து ஒரு புதிய பொறுப்பாளர் இங்கு நியமிக்கப்பட்டார்.இவர் தேசிய செயற்பாட்டில் நீண்ட அனுபவம் உள்ளவராக இருந்த போதிலும் இவருக்கு சிறீலங்கா அரசாங்கத்தின் அதி உச்ச ஊடுருவல் தளமாகவும் அதிகளவு ஒத்தோடிகளையும் கொண்டிருந்த பிரெஞ்சு மண்ணில் வேலை செய்வதற்குரிய அனுபவம் இருக்கவில்லை.

இவர் இங்கே பெறுப்பேற்க வந்த காலத்தில் திடீர் புரட்சியாளர்களையும் புதிய ஒத்தோடிகளையும் சிறீலங்கா புலனாய்வுதுறை முன்கூட்டியே இங்குள்ள செயற்பாட்டுத்தளத்துள் புகுத்திவிட்டது.

இவருடைய நியமனம் கூட இங்கிருந்து அனுப்பப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வன்னியில் ஏற்பட்டிருந்த யுத்த நெருக்கடியின் தேவை கருதி அவசரமாக செய்யப்பட்ட ஒன்றாகும்.

இவர் சில மூத்த செயற்;பாட்டாளர்களை இங்கு சந்தித்த போதும் அவர்களை இணைத்து இறுக்கமான தேசிய கட்டமைப்பு ஒன்றை உருவாக்க முடியாத அளவுக்கு சூழ்நிலை கைதியாக மாற்றப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர்களை விடுவிப்பதற்கும் அவர்கள் மீது சுமத்தப்பட்ட பயங்கரவாத குற்றச்சாட்டை உடைப்பதற்கும் இவருக்கு அனுபவமுள்ளவர்களின் ஆலோசனையும் ஒத்துழைப்பும் கிடைக்கவிடாமல் தடுக்கப்பட்டது.இவரை சுற்றியருந்த திடீர் புரட்சியாளர்கள் இவருக்கு தெரிந்தோ தெரியாமலோ இந்த வேலைகளை செய்தனர்.

இந்த செயற்பாட்டளர்களை விடுவிப்பதற்காக நியமிக்கப்பட்ட அனுபவம் மிக்க வழக்கறிஞர்களுக்கு பணங்கொடுக்க முடியாத அளவுக்கு நெருக்கடி ஏற்பட்டது.முன்னாள் போராளிகள் சிலர் தனிப்பட்ட முறையில் பணம் திரட்டி இந்த வழக்குச் செலவை கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் பின்னர் இந்த வழக்கறிஞர்கள் மாற்றப்பட்டனர்.அல்லது அவர்களாகவே இந்த வழக்குகளில் வதாடாமல் விலகிச் செல்லும் நிலை உருவாக்கப்பட்டது.

முடிவு ஒரு சிலர் பிறள்; சாட்சிகளாக மாறி முன்ணணி செயற்பாட்டாளர்கள் மீது பாரத்தைப் போட்டு தப்பிக்க அவர்களுக்கு சிறை தண்டனை கிடைத்ததுடன் தமிழர் ஒருங்கிணைப்பு குழு தடை செய்யப்பட்டது.

இது புலத்திலே சிறீலங்கா அரசால் திறக்கப்பட்ட இரண்டாம் முள்ளிவாய்க்காலுக்கான களமுனையில் அதற்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.

சிறீலங்கா அரசு ஏற்கனவே திட்டமிட்டபடி தனது அடுத்த நடவடிக்கையாக தமிழ் சோலை பாடசாலைகளை குறிவைத்தது.

பிரான்சிலே ஒவ்வொரு நகரத்திலும் ஒவ்வொரு தமிழ் சங்கங்கள் இருக்கின்றன.இந்த தமிழ் சங்கங்கள் அவை இருக்கும் நகரங்களின் பெயருடன் சேர்த்து பிராங்கோ தமிழ் சங்கங்கள் என்று அழைக்கப்பட்டன.
இந்தச் சங்கங்களுக்கு கீழே தமிழ் பாடசாலைகள் இயங்கின.இவை தமிழ் சோலைகள் என்று அழைக்கப்பட்டன.
இந்தத் தமிழ் சங்கங்களுக்கு என்று ஒரு நிர்வாகமும் தலைவரும், தமிழ் சோலைக்கென்று ஒரு நிர்வாகியும் இருப்பர்.பொதுவாக தமிழ் சங்க தலைவர்களுக்கும் தமிழ்சோலை நிர்வாகிகளுக்கும் இடையிலே அதிகார போட்டி இருந்து வந்தது. பல சங்கங்களிலே இவர்கள் பிள்ளைகள் முன்பு சண்டையிட்ட நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன.

நான் இந்த சங்கங்கங்கள் பாடசாலைகளுக்கு பொறுப்பாக இருந்த காலத்தில் அதாவது உப அமைப்புக்களின் ஒருங்கிணைப்பாளராக இருந்த காலத்தில் இந்த முரண்பாட்டை சிறீலங்கா அரசும் அதன் ஒத்தோடிகளும் பயன்படுத்திவிடக் கூடாது என்பற்காக இவற்றுக்கான யாப்பு ஒன்றை உருவாக்கி சங்கத் தலைவர்களுடைய அதிகாரம் என்ன? தமிழ்சோலை நிர்வாகிகளுடைய அதிகாரம் என்ன? ஒவ்வொருவருடைய செயற்பாட்டு எல்லைகள் என்ன? என்பதையெல்லாம் தெழிவாக வரையறுத்திருந்தேன்.

இந்த வரையறைக்குள் நின்று செயற்பாடாத நிர்வாகங்களும் நிர்வாகிகளும் மாற்றப்பட்டனர்.

ஒரு தமிழ் சங்கத்தில் நான் ஒரு சிக்கலான பிரச்சனையை எதிர்கொள்ள நேர்ந்தது.அந்த தமிழ் சங்கத்தின் கீழ் நடந்த பாடசாலையில் படித்த ஒரு மாணவனை அங்கு படிப்பித்த ஒரு ஆசிரியை மற்ற பிள்ளைகளுக்கு முன்னிலையில் அவனது சாதியை சொல்லி தரக்குறைவாக திட்டிவிட்டார்.அதை அந்த மாணவன் வீட்டில் சென்று முறையிட அவனது தந்தை அந்த பாடசாலைக்குச் சென்று அந்த ஆசிரியையை பிள்ளைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் முன்னிலையில் திட்டிவிட்டார்.தன்னை அவர் இப்படி திட்டியதால் தன்னிடம் படிக்கும் பிள்ளைகளும் அவர்களது பெற்றோரும் தன்னை மதிக்க மாட்டார்கள் என்று அந்த ஆசிரியை தமிழ் சங்க நிர்வாகத்திடம் முறையிட அவர்கள் அவர்கள் அந்த மாணவனை பாடசாலையில் இருந்து நீக்கிவிட்டார்கள். அந்த மாணவனின் தந்தை என்னை சந்தித்து ‘சிறீலங்கா அரசு தமிழ் மாணவர்களின் கல்வி உரிமையை பறித்ததால் தான் ஆயுதப்போராட்டமே தொடங்கியது.தமிழீழ தேசியத்தலைவரின் நிர்வாக கட்டமைப்பின் கீழ் நடக்கும் ஒரு பாடசாலையில் எனது பிள்ளைக்கு படிக்க இடம் இல்லை என்பது நியாயமா?’ என்று கேட்டார்.

நான் உடனடியாக அந்த சங்கத்தினுடைய பொதுக் கூட்டத்தை கூட்டி நடந்த சம்பவத்தை பற்றி விசாரித்த போது ‘அந்த மாணவனின் தந்தை ஒட்டுக்குழுவை சேர்ந்தவர் என்றும் பாடசாலை நிர்வாகத்தை குழப்புவதற்காகவே தன்னை அவர் அவமதித்ததாக’ அந்த அசிரியை குற்றம்சாட்டினார்.

‘அவர் ஒட்டுக்குழுவோ ஒட்டாத குழுவோ ஆனால் ஒரு பிள்ளையை தமிழ் தேசிய செயற்பாட்டுத்தளத்தில் இயங்கும் ஒரு பாடசாலையில் அதுவும் வகுப்பறையில் வைத்து ஒரு ஆசிரியை எப்படி சாதி சொல்லி திட்டலாம்?’ என்ற என்னுடைய கேள்விக்கு அந்த ஆசிரியையிடமோ அந்த நிர்வாகத்திடமோ எந்த பதிலும் இருக்கவில்லை.நான் உடனடியாக அந்த அந்த ஆசிரியையை  பணி நீக்கம் செய்ததுடன் அந்த நிர்வாகத்தை கூண்டோடு கலைத்துவிட்டு புது நிர்வாகத்தை தெரிவு செய்தேன்.பழைய நிர்வாகிகள் திரண்டு சென்று அப்போது பொறுப்பாக இருந்த பருதியிடம் முறையிட்டார்கள்.பரிதி ‘என்னுடைய முடிவு சரியான முடிவு’ என்று கறாராக சொல்லிவிட அவர்களுக்கு திரும்பிச் செல்வதை தவிர வேறு வழி இருக்கவில்லை.

நாங்கள் வேண்டியவர் வேண்டாதவர் என்று பார்க்காமல் உண்மையான நியாயத்தின் பக்கம் நின்று எடுத்த முடிவு இன்று அந்தப் பாடசாலையை சிறந்த பாடசாலையாக உருவாக வழிவகுத்திருக்கிறது.

பிரான்சின் 93 வது நிர்வாகப்பிரிவில் இன்னொரு பாடசாலையில் நீண்ட காலமாக நிர்வாக பிரச்சனை இருந்து வந்தது.அந்த சங்கத் தலைவருடைய மனைவி மொரிசியஸ் நாட்டை சேர்ந்தவர்.அவருக்கு அந்த நகர சபையில் நிறைய செல்வாக்கு இருந்தது.அந்த செல்வாக்கினூடாக அந்த நகர முதல்வரும் அந்த பகுதி அரசியல் பிரமுகர்களும் ஈழப்போராட்டம் பற்றியும் விடுதலைப்புலிகள் பற்றியும் உயர்வான எண்ணத்தை கொண்டிருந்தனர்.

இந்த புதிய பொறுப்பாளரின் காலத்தில் இந்த முரண்பாடு புதிய ஒத்தோடிகளால் ஊதிப் பெருக்கப்பட்டு தவறான முடிவுகள் எடுக்க வைக்கப்பட்டதால் அங்கு சிறீலங்கா அரசின் தலையிட்டுக்கு வழிவகுத்தது.அங்கு சிறீலங்கா அரசின் பாடத்திட்டத்தில் இயங்கும் பாடசாலை ஒன்று புதிதாக உருவாக்கப்பட்டது. தமிழ் தேசியத்துக்கு ஆதரவாக இருந்த அந்த நகரசபை சிறீலங்கா அரசின் செயற்பாட்டை நியாயப்படுத்தும் நகரசபையாக மாற்றப்பட்டது. இது சிறீலங்கா அரசாங்கத்துக்கு புலத்து களமுனையில் கிடைத்த இரண்டாவது வெற்றியாகும்.
(தொடரும்)

 

இரண்டாம் முள்ளிவாய்க்கால் -05


‘ஒரு விடுதலைப் போராட்டத்துக்கு உயிரைக் கொடுக்கத் துணிந்தவனையும் உழைப்பை கொடுப்பவனையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கக் கூடாது.உயிரைக் கொடுக்கத்துணிந்தவன் தன்னுடைய செயற்பாட்டுக்கான வெகுமதியை எதிர்பார்க்க மாட்டான்.அவனுடைய எதிர்பார்ப்பு ஆகக் கூடிய பட்சம் தன்னுடைய செயற்பாட்டுக்கான அங்கீகாரம் என்ற அளவில் தான் இருக்கும். ஆனால் உழைப்பை கொடுப்பவன் அப்படியல்ல.அவனுடைய எதிர்பார்ப்பு அங்கீகாரம் என்ற அளவைத்தாண்டி பட்டம் பதவி புகழ் என்று நீண்டதாக இருக்கும்.’
0000
புலத்தில் திறக்கப்பட்ட இரண்டாம் முள்ளிவாய்க்காலுக்கான களமுனை
0000
war 2முள்ளிவாய்க்காலுக்கான களமுனைகளை 26.07.2006 லே திருகோணமலை மாவிலாற்றிலும் 10.07.2007 லே மன்னார் பண்டிவிரிச்சானிலும் சிறீலங்கா அரசாங்கம் திறந்தது அனைவருக்கும் தெரியும்.அவற்றின் நகர்வுகள் மற்றும் அவற்றின் முடிகள் அனைத்துமே அனைவருக்கும் தெரியும்.

ஆனால் சத்தமின்றி யுத்தமின்றி 28.06.2007 லே பாரிசிலே விடுதலைப்புலிகளுக்கு எதிரான ஒரு களமுனை ஒன்று மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தால் திறக்கப்பட்டது பலருக்குத் தெரியாது.

மகிந்த ராஜபக்ஷவுக்கு முன் சிறீலங்காவில் ஆட்சியில் இருந்த சந்திரிகா குமாரதுங்காவின் அரசாங்கம் லக்ஸ்மன் கதிர்காமரை முன்நிறுத்தி இராஜந்திர போர்முனை ஒன்றை திறந்து விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாக்கி வெற்றிகண்டது.ஆனால் இந்த வெற்றி விடுதலைப்புலிகளின் வளர்ச்சியையோ புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் இருந்த அவர்களது ஆதரவுத்தளத்தையோ எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.

1995 ல் விடுதலைப்புலிகளுக்கு யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஏற்பட்ட தோல்விகளும்,யாழ்ப்பாண இடப் பெயர்வும் புலம் பெயர்ந்த நாடுகளிலுள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவுத்தளத்தை சிதைக்கும் என்று சந்திரிகா அரசாங்கம் எதிர்பார்த்தது.ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கு மாறாக மக்கள் தங்களது ஆமோக ஆதரவை விடுதலைப்புலிகளுக்கு தந்தார்கள்.

‘விடுதலைப்புலிகள் கொலைகாரர்கள். பணம் பறிப்பவர்கள். பிள்ளை பிடிப்பவர்கள் பாசிஸ்டுகள்’ என்று ஒத்தோடிகளை வைத்து கூவி கூவி சிறீலங்கா அரசாங்கம் பிரச்சாங்களை செய்த போதிலும் அவற்றை மக்கள் செவி மடுக்கவில்லை.

‘விடுதலைப்புலிகளின் இருப்பும் அவர்களது பலமும் தான் பௌத்த சிங்கள பேரினவாதிகளை அச்சப்பட வைத்ததுடன்,அவர்களது இனச்சுத்திரிப்பு இன ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு தடையாகவும் இருந்தது’ என்ற உண்மையை நூற்றுக்கு 80 விதமான புலம் பெயர்ந்த மக்கள் உணர்ந்திருந்தார்கள். அதனால் சந்திரிகா அரசாங்கத்தால் அவர்கள் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியவில்லை.

சந்திரிகாவும் மகிந்தவும் ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் என்றாலும் இரண்டு பேருக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் இருந்தன.சந்திரிகா தனது தந்தையினதும் தாயினதும் ரஷ்ய சீன சார்பு பாரிம்பரியத்துக்கு மாறாக மேற்குலக சார்பாளராக இருந்தார்.

ஆனால் மகிந்தவோ தன்னை உண்மையான சிறீலங்கா சுதந்திரக் கட்சி பாரம்பரியத்தில் வந்த சீன ரஷ்ய ஆதரவாளராக காட்டிக்கொண்டார். ஆனால் அமெரிக்காவினதும் இந்தியாவினதும் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் முகவராக அவர் செயற்பட்டார் .அவர் ஒரு நல்ல நடிகர்.’விடுதலைப் புலிகளை ஒழிக்க எந்தச் சாத்தானுடனும் நான் கூட்டுச் சேருவேன்’ என்று சொன்ன ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அதாவது ஐக்கிய தேசியக் கட்சியின் உண்மையான வாரிசு அவர்தான்.

சீனா தன்னுடைய ஆபிரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைக்கான கடல்வழிப் போக்குவரத்துக்கு விடுதலைப்புலிகள் அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்று கருதியது.அமெரிக்கா இந்து சமூத்திர பிராந்தியத்தின் மீதான தனது ஆளுமைக்கு அச்சுறுத்தலான அமைப்பாக அவர்களைப் பார்த்தது.இந்தியா தனது பிராந்தியமேலாதிக்க கொள்கைக்கு தடையாக இருக்கும் அமைப்பாகவும் தன்னுடைய போலித் தேசியவாத கொள்கைக்கு ஆப்பு வைக்கக் கூடிய அமைப்பாகவும் விடுதலைப்புலிகளை கருதியது.உலக பெருமுதலாளித்துவ சக்திகள் இந்தியாவையும் சீனாவையும் உள்ளடக்கிய தங்களுடைய பெரும் சந்தைக்கு விடுதலைப்புலிகளின் வளர்ச்சி சிக்கலை தோற்றுவிக்கும் என்று கணிப்பிட்டன. மொத்தத்தில் உலக பெரு முதலாளித்துவ அதிகார வர்க்கம் ஒன்று சேர்ந்து மகிந்தவை முன்நிறுத்தி தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை நடத்தி முடித்து.

இந்த யுத்தததை திட்டமிட்டதும் வழிநடத்தியதும் உலக உளவு அமைப்புக்களும் உலக பெருமுதலாளித்துவ அமைப்புக்களின் பொருளாதா இராணுவ கொள்கை வகுப்பு மற்றும் திட்டமிடல் அமைப்புக்களும் ஆகும்.

இதனாலேயே மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் முன்னைய ஆட்சிக்காலங்களில் இருந்து வேறுபட்ட விதத்தில் புதிய நிழல் யுத்த களமுனையொன்று பாரிசில் திறக்கப்பட்டது.பாரிஸ் தான் நீண்ட காலமாக விடுதலைப்புலிகளின் புலம் பெயர்ந்த ஆதரவு தளத்தை நிர்வகிக்கும் தலைமை இடமாக இருந்ததால் இந்த களமுனை இங்கு திறக்கப்பட்டது.சந்திரிகா அரசு விடுதலைப்புலிகளுக்கு எதிரான தனது இராஜதந்திர போரை சர்வதேச நாடுகளை குறிவைத்து நடத்தியது. ஆனால் மகிந்த அரசோ புலம் பெயர்ந்த தமிழ் மக்களை குறிவைத்து இந்தப் போரை நடத்தியது.paris_france_october_2012_metroscenes.com_33

28.06.2007 அன்று பாரிசின் 8 வது நிர்வாகப் பிரிவிலுள்ள பிரபலமான 5 நட்சத்திர தங்கும் விடுதி ஒன்றில் இந்த களமுனையை திறப்பதற்கான ஒரு நாள் சந்திப்பு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின் பேசு பொருள் அல்லது தலைப்பு ‘பங்கரவாதிகளின் சர்வதேச வலையமைப்பை இல்லாதொழிப்பதற்கான திட்டமிடலும் சவால்களும்’.

இந்தச் சந்திப்பில் சிறீலங்கா தரப்பில் 2 அமைச்சர்கள் 2 அதிகாரிகள் (இதில் ஒருவர் பிரித்தானியாவை சேர்ந்த சர்வதேச கொள்கை வகுப்பு மூலோபாய அமைப்பொன்றின் உறுப்பினர்) 2 இராஜதந்திரிகள் உட்பட 6 பேரும் புலம் பெயர்ந்த சிங்கள அமைப்புகளின் சார்பில் 4 பேரும் (இதில் ஒருவர் முன்னாள் ஜேவிபி உறுப்பினர்) தமிழ் ஒத்தோடிகள் 5 பேரும் கலந்து கொண்டனர்.

காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணிவரை நடைபெற்ற இந்த சந்திப்பில் முதலில் விடுதலைப்புலிகளை அழித்தொழிக்க வேண்டிய தேவை,அதற்கு சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் பற்றிய விளக்கம் என்பன வந்திருந்தவர்களுக்கு கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் விடுதலைப்புலிகளின் புலம் பெயர்ந்த கட்டமைப்புகள் அவற்றின் செயற்பாடுகள் பற்றியும் அவற்றிக்கு தலைமை தாங்குபவர்கள் பற்றியும் விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பாக தடை செய்த பின்பும் அவர்களால் எப்படி செயற்பட முடிகிறது என்பவை பற்றியும் ஆராயப்பட்டது.

மதிய உணவுக்குப் பின்பு விடுதலைப்புலிகளின் ஆதரவு தளத்தை சிதைப்பதற்கு வகுக்கப்பட வேண்டிய திட்டங்கள் மற்றும் அவற்றை செயற்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

1. விடுதலைப்புலிகளுக்கொன்று புலம்பெயர்ந்த நாடுகள் ஒவ்வான்றிலும் மக்களை அணி திரட்டுவதிலும் அவர்களிடமிருந்து நிதியாதாரத்தை பெறுவதிலும் நீண்ட அனுபவமும் ஆற்றலும் உள்ள பல மூத்த செயற்பாட்டாளர்கள் இருக்கிறார்கள்
2. விடுதலைப்புலிகளின் அனைத்து செயற்பாட்டாளர்களிடமும் தங்களது சக செயற்பாட்டாளரைப் பற்றி பொது இடத்தில் குறைகூறும் விமர்சிக்கும் பழக்கம் கிடையாது.விடுதலைப்புலிகளுக்கு பாதகத்தை உண்டாக்கும் எந்தக் கருத்தையும் அவர்கள் எந்த இடத்திலும் தெரிவிக்க மாட்டார்கள்.அது போன்ற எந்தச் செயற்பாடுகளிலும் அவர்கள் ஈடுபடமாட்டார்கள்;.
3. விடுதலைப் புலிகளின் ஆதரவுததளம் என்பது தமிழ் சங்கங்கள் தமிழ்சோலை மற்றும் தமிழாலயம் முதலான பாடசாலைகள்,விளையாட்டுக்கழகங்கள்,ஊடக கட்டமைப்பு என்பவற்றிலேயே தங்கியிருக்கிறது.
4. ஐரோப்பாவில் உள்ள விடுதலைப்புலிகளின் இராஜதந்திர செயற்பாடுகள் ஜெனிவாவை தளங்கொண்டே இயங்குகின்றன.

என்கின்ற விடயங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டு இவற்றை எப்படி உடைப்பது அல்லது மாற்றி அமைப்பது என்று ஆராயப்பட்டது.

tamil-protest-geneva

1. மூத்த செயற்பாட்டளார்களை மக்களிடம் இருந்து அந்நியப் படுத்தி மக்கள் அவர்களை வெறுக்கும் அல்லது அவர்களுடன் தொடர்பு கொள்ள அஞ்சும் சூழ்நிலையை உருவாக்குவது.இதன் மூலம் மக்களை அணிதிரட்டும் நிதிமூலங்களை திரட்டும் விடுதலைப் புலிகளின் ஆற்றலை கணிசமாக குறைக்கலாம் அல்லது மட்டுப்படுத்தலாம் என்று கூறப்பட்டது.இதற்கு இந்த மூத்த செயற்பாட்டாளர்கள் மீது தொடர்சியாக பலமுனைகளில் பொய்யான தகவல்களை உள்ளடக்கிய அவதூறு பரப்பரை மேற்கொள்வது.
2. முதல் செயற்பாட்டின் தொடர்ச்சியாக விடுதலைப்புலிகள் இயக்க செயற்பாட்டாளர்கள் தங்களது சக செயற்பாட்டாளர்களை அல்லது முன்னாள் செயற்பாட்டாளர்களை மக்கள் மத்தியில் குறிப்பாக பொது வெளியில் விமர்சிப்பது தூற்றுவது போன்ற செயற்பாட்டை செய்யும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைப்பது- இதை தியாகி துரோகி என்ற ஒரு நீண்ட அரசியல் செயல் திட்டமாக நடைமுறைப்படுத்துவது. இதன் மூலம் விடுதலைப்புலிகள் பற்றி மக்கள் மத்தியில் இருக்கும் ஒழுக்கமானவர்கள் கட்டுப்பாடானவர்கள் என்ற பிம்பத்தை உடைப்பது.
3. உப அமைப்புக்கள் என்று விடுதலைப்புலிகளால் அழைக்கப்படும் தமிழ் பாடசாலைகள் தமிழ் சங்கங்கள் விளையாட்டுக்கழகங்கள் என்பவற்றுக்குள் ‘தலைவர் வாழ்க போராட்டம் வாழ்க’ என்று அதி தீவிர தேசியம் பேசிக்கொண்டு ஊடவி அவற்றுக்குள் தியாகி துரோகி அரசியலை புகுத்துவது.குறிப்பாக தமிழ் பாடசாலைகளில் கல்வி கற்கும் இளவயதினர் மற்றும் குழந்தைகளின் மனங்களில் இந்த தியாகி துரோகி அரசியலை படிப்படியாக திணிப்பது. இதன் மூலம் தமிழ் தேசிய செயற்பாடுகளில் இளைய தலைமுறையின் ஒன்று பட்ட துடிப்பான செயற்பாடுகளை பிளவு படுத்தி திசைதிருப்பி வலுவிழக்கச் செய்வது.
4. சுவிசில் மக்களின் வலுவான ஆதரவுடன் இடம்பெற்று வந்த விடுதலைப்புலிகளின் இராஜதந்திர செயற்பாட்டுத் தளத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவைப் பெறுவதற்கு சுவிசில் வேலை செய்து ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி,பெல்ஜியத் தலைநகருக்கு அந்த தளத்தை மாற்றுமாறு ஆலோசனை வழங்குவது.தமிழ் மக்கள் குறைவாக வாழும் அந்த நாட்டில் இந்தச் செயற்பாடுகளை முடக்குவதற்கான வேலைகளை செய்வது.
5. இந்த நான்கு வேலைத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு சமூக வலைத்தளங்களையும் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் பத்தி எழுத்தாளர்களையும் இனங்கண்டு பயன்படுத்துவது.
ஆகிய முடிவுகளுடன் இந்த ஒரு நாள் சந்திப்பு நிறைவுற்றது.

மகிந்தவுக்கு எதிரான புலம்பெர்ந்த சிங்கள ஊடகவியலாளர்கள் மூலமாக பெறப்பட்ட இந்தத் தகவல்கள் ஒன்றுக்கு இரண்டு தடவை வெவ்வேறு தரப்புகள் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டு தகுந்த ஆதாரங்களுடன் ஒரு அறிக்கையாக தொகுக்கப்பட்டு 15.07.2007 அன்று தேசியத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

17.07.2007 அன்று இந்த அறிக்கை வன்னிக்கு கிடைத்ததாகவும் அதை தேசியத்தலைவரிடம் சேர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதை பெற்றுக்கொண்டவர்கள் அதை அனுப்பியவர்களுக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.
(தொடரும்)

 

இரண்டாம் முள்ளிவாய்க்கால்-04


ஒரு விடுதலைப் போராட்டத்தில் வெற்றிகளும்; தோல்விகளும்; ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களை போன்றவை. விடுதலை என்ற இலக்கை அடையும் வரை இவை இரண்டும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். உண்மையான விடுதலைப் போராளிகள் வெற்றிகளை கண்டு மமதையடையவோ  தோல்விகளை கண்டு  சோர்ந்து போகவோமாட்டார்கள்’
000
விடுதலை அமைப்பை மீள ஒருங்கிணைப்பது தொடர்பாக….
0000
ஒரு விடுதலைப்போராட்டம் மிகப் பெரிய தோல்வியை சந்திக்கின்ற போது அந்த விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த இயக்கம் எதிர் கொள்கின்ற மிகப்பெரிய நெருக்கடி அதன் கட்டமைப்புகள் சிதைந்து போவதாகும்;.

அதிலும் இவ்வாறான நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் தலைமைத்துவ  வழிகாட்டல் இல்லாமல் போகும் போது அந்த அமைப்பை மீள ஒருங்கிணைப்பது,தோல்விக்கான காரணங்களை ஆராய்வது,அந்தத் தோல்வியில் இருந்து படிப்பினைகளைப் பெற்றுக் கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி போராட்டத்தை நகர்த்தவது என்பவற்றை யார் செய்வது என்பதில் பிரச்சனை ஏற்படும். சந்தர்பவாதம் பிழைப்புவாதம் இரட்டை உளவாளிகளின் பிரச்சைனை என்று ஒரே நேரத்தில் பல நெருக்கடிகளை அந்த விடுதலை இயக்கம் சந்திக்கும்.

இது உலகம் பல்வேறு பகுதிகளிலும் தமது மக்களின் விடுதலைக்காக போரிட்ட பல்வேறு விடுதலை இயக்கங்கள் எதிர் கொண்ட பொதுவான பிரச்சனை தான்.குறிப்பிடத் தக்க அளவில் ஒவ்வாரு விடுதலை இயக்கங்களும் தமக்கென சில தனித்துவங்களையும் தனியான பிரச்சனைகளையும் கொண்டிருந்தாலும் அமைப்பு ரீதியான நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் விடயத்தில் சில நடைமுறைகள் இருக்கின்றன.இந்த நடை முறைகள் பல்வேறு விடுதலை இயக்கங்களில் அனுபவ பாடங்களில் இருந்து பெறப்பட்டவையாகும்.

ஓரு விடுதலை இயக்கம் ஒரு விடுதலைப் போரை நடத்துகின்ற பொழுது அது தளப்பிரதேசம் (களம்) பின்தளப் பிரதேசம் (புலம்) செல்வாக்குப் பிரதேசம் என்ற மூன்று தளங்களில் தனது செயற்பாட்டை கொண்டிருக்கும.;
(தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வடக்கு கிழக்கு தளப்பிரதேசமாகவும் 1987 வரை தமிழகமும் 1990 களில் இருந்து புலம் பெயர்ந்த நாடுகளும்; பின்தள பிரதேசங்களாகவும் 1992 க்குப் பின்னர் தமிழகமும் செல்வாக்குப் பிரதேசமாகவும் இருந்தது.)
அதேபோல ஒரு விடுதலை இயக்கம் தனக்கான உறுப்பினர்களை கொண்டிருக்கும் அதேநேரத்தில், தனக்கென செயற்பாட்டாளர்களையும்(தொண்டர்களையும்) பணியாளர்களையும்(ஊதியம் பெறுபவர்கள்) கொண்டிருக்கும்.உறுப்பினர்கள் அநேகமாக போராளிகளாகவும் ஒரு சிலர் புரட்சிகர அரசியல் செயற்பாட்டாளர்களாகவும் இருப்பார்கள்.இவர்கள் அநேகமாக களத்திலேயே இருப்பார்கள்.ஒரு சிலர் மட்டும் சில பொறுப்புகளுக்காக பின் தளம் மற்றும் செல்வாக்கு பிரதேசத்துக்கு அனுப்பப்படுவார்கள்.அவர்களுக்கென்று எப்போதும் இயக்கப் பெயரும் அவர்களுக்கான (தகட்டு)இலக்கமும் இருக்கும்.

அடுத்து செயற்பாட்டாளர்கள் என்ற வரையறைக்குள் அடக்கப்படுபவர்கள் இயக்க உறுப்பினர்கள் அல்ல. இவர்கள் இயக்கத்தினுடைய தீவிரமான ஆதரவாளர்கள் என்ற நிலையில் வைத்தே பார்க்கப்படுவார்கள்.இயக்கம் இவர்களை தனது வேலைத்திட்டங்களில் பயன்படுத்திக் கொள்ளும்.இவர்கள் பெரும்பாலும் தங்களது சொந்த வேலைகளை பார்த்துக்கொண்டே இயக்க செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள்.விதி விலக்காக ஒரு சிலர் முழுநேர செயற்பாட்டாளராக செயற்படும் போது இயக்கம் அவருக்கு பயிற்சி கொடுத்து அவரை தமது உறுப்பினராக இணைத்துக்கொள்ளும். இயக்கம் ஒருபோதும் செயற்பாட்டாளர்களுக்கு இயக்கப்பெயரோ, தகட்டு இலக்கமோ வழங்குவதில்லை.இவர்கள் இயக்கத்தை கட்டுப்படுத்தவோ இயக்க உறுப்பினர்களுக்கு உத்தரவிடவோ அல்லது அவர்களை ஆதிகாரம் செய்யவோ முடியாது.இவர்களுக்கு இயக்கம் ஒரு நிர்வாக பொறுப்பை வழங்கி அந்த நிர்வாகத்தில் பணிபுரியுமாறு சில போராளிகளை அனுப்பிவைத்தால் அவர்களுக்கு இவர்கள் உத்தரவிடலாம்.ஆனால் அவர்களை இவர்கள் தண்டிக்க முடியாது.அவர்கள் விட்ட தவறை இயக்கத்துக்க அறிவிக்க வேண்டும்.

இயக்கம் தனக்கான சில வேலைகளை செய்விப்பதற்காக சம்பளம் வழங்கி பணிக்கமர்த்தப்படுபவர்கள் ‘இயக்கப்பணியார்கள்’ என அழைக்கப்படுகின்றனர்.இவர்களும் இயக்கத்தின் ஆதரவாளர்கள் தான். ஆனால் இவர்களுக்கும் இயக்கத்தின் மீது அதிகாரம் செலுத்தம் எந்த உரிமையும் இல்லை.

பொதுவாக ஒரு விடுதலை இயக்கம் மிகப் பெரிய தோல்வியை சந்தித்து தனது தளப்பிரதேசங்களை இழக்கின்ற போது அது உடனடியாக தனது நிர்வாகக் கட்டமைப்பை பின்தளப்பிரதேசத்துக்கு மாற்றும்.இந்த காலகட்டத்தில் தலைமையின் வழிகாட்டல் இல்லாது போனால் உடனடியாக போரில் உயிர் தப்பிய மூத்த உறுப்பினர்களை உள்ளடக்கிய இடைக்கால நிர்வாக அமைப்பு ஒன்று உருவாக்கப்படும்.இந்த அமைப்பில் தளப்பிரதேசத்தில் இருந்து வந்த இயக்க உறுப்பினர்கள் ஏற்கனவே பின்தள மற்றும் செல்வாக்கு பிரதேச வேலைகளுக்காக அனுப்பப்பட்ட இயக்க உறுப்பினர்கள் அங்கம் வகிப்பார்கள்.
இவர்களில் இருந்து 3 அல்லது 5 பேர் கொண்ட இடைக்கால உயர்மட்ட செயற்பாட்டு குழு ஒன்று அமைக்கப்படும்;.இந்த மூன்று அல்லது 5 பேருமே இயக்கம் பழைய நிலைக்கு வரும் வரை அதனை வழிநடத்துவார்கள்.இவர்களது வழி நடத்தலை ஏற்று இயக்க செயற்பாட்டாளர்கள் பணியாளர்கள் செயற்பட வேண்டும்.எந்தக் காரணத்தைக் கொண்டும் இயக்கத்தின் நெருக்கடியான சூழ்நிலையை பயன்படுத்தி இயக்க உறுப்பினர்கள் அல்லாதவர்கள் இயக்கத்தை வழி நடத்தவும் இயக்க உறுப்பினர்களை கட்டுப்படுத்தவும் அனுமதிக்கப்படுவதில்லை.

பொதுவாக ஒரு அமைப்பின் உறுப்பினரல்லாத ஒருவர் அந்த அமைப்பின் செயற்பாட்டை தீர்மானிக்க முடியாது என்பது இதற்கான பொது விதியாக இருந்தாலும் பெரும்பாலும் புலம் பெர்ந்த நாடுகளிலும் செல்வாக்கும் பிரதேசங்களிலும் இருக்கும் ஒரு விடுதலை இயக்கத்தின் செயற்பாட்டு தளத்துக்குள்ளும் ஆதரவு தளத்துக்குள்ளும் எதிரி சுலபமாக ஊடுருவுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதிலும் ஒரு போராட்டம் பெரும் தோல்வியை சந்திக்கும் போது இது அதிகமாக நடக்கும். அதை எதிர் கொண்டு  முறிடிப்பதற்காகவே போராளிகள் இயக்க உறுப்பினர்கள் அல்லாதவர்களையும் புதியவர்களையும் உடனடியாக நிர்வாக அமைப்பில் இணைத்துக் கொள்வதையும் அவர்களுக்கு பொறுப்புக்களை கொடுப்பதையும் நெருக்கடி காலகட்டத்தில் செய்யக் கூடாத ஒரு செயலாக விடுதலை இயக்கங்கள் கருதுகின்றன

abdullah_oecalan1999ம் ஆண்டு பிகேகே எனப்படும் குர்திஷ்தான் விடுதலை இயக்கத்தின் தலைவர் அப்துல்லா ஒச்சலான் கென்யாவில் வைத்து இஸ்ரேலிய உளவு படையான மொசாட்டின் உதவியுடன் துருக்கி கொமாண்டே படையினரால் கைது செய்யப்பட்ட போதும் 1992 ம் ஆண்டு பெருவின் சைனிங் பாத் எனப்படும் ஒளிரும் பாதை விடுதலை இயக்கத்தின் தலைவர் அபிமல் குஸ்மான் பெரு அரசபடைகளால் கைது செய்யப்பட்ட போதும் அந்த விடுதலை இயக்கங்கள் நாம் இன்று எதிர் கொள்ளும் நெருக்கடிகளை போல பா220px-Abinaelரிய நெருக்கடிகளை சந்தித்தன.

உடனடியாக இந்த விடுதலை இயக்கங்கள் மேலே குறிப்பிட்டதைப் போன்ற இடைக்கால புரட்சி குழு ஒன்றை அமைத்து இந்த நெருக்கடியில் இருந்து மீண்டன.

இதிலே குர்திஷ்தான் விடுதலைப் போராட்டத்துக்கும் நமக்கும் இடையே சில ஒற்றுமைகள் இருக்கின்றன. அவர்களது தற்போதைய நிலைமையில் இருந்து சில பாடங்களை நாங்கள் கற்றுக் கொள்ளலாம்.

தமிழ் மக்களைப் போலவே குர்திஷ் மக்கள் நீண்ட வரலாற்றையும் தங்களுக்கான வரலாற்று தாயகம் என்று சொல்லக் கூடிய மிகப் பெரிய நிலப்பரப்பையும் கொண்டிருந்தவர்கள்.

இந்த நிலப்பரப்பு இன்றைய துருக்கி, ஆர்மேனியா, ஈராக், ஈரான்,சிரியா ஆகிய நாடுகளின் கணிசமான பகுதிகளை உள்ளடக்கிய பெரும் நிலப்பரப்பாக இருந்தது.முதலில் துருக்கியின் ஒட்டமான் சாம்ராட்சியம் குர்தியர்களை அடிமைப்படுத்தியது.அதன் வீழ்ச்சிக்குப் பின்னர் அந்த இடத்தை கைப்பற்றிய பிரித்தானிய மற்றும் பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியார்கள் குர்திஷ் இனம் ஒரு பெரும் தேசிய இனமாகவும் அவர்களது தாயக நிலப்பரப்பு ஒரு பெரும் தேசமாகவும் உருவாகமாதல் திட்டமிட்டு தடுத்து அவர்களை துருக்கி, ஆர்மேனியா, ஈராக், ஈரான்,சிரியா ஆகிய நாடுகளுக்குள் ஏனைய பெரும்பான்மை சமூகத்தின் அதிகாரத்தின் கீழ் வாழும் சிறுபான்மையினராக ஆக்கிவிட்டார்கள்.

முதலாம் உலகயுதத்தத்தின் பின்னர் துருக்கியில் ஆட்சிக்கு வந்த முஸத்தபா கமல் அட்டாதுர்க் என்ற முன்னாள் இராணுவ அதிகாரியின் தலைமையிலான அரசாங்கம் ஆர்மேனிய மக்களை இனப்படுகொலை செய்ததைப் போல குர்திஷ் மக்களையும் மிகக் கொடுமையாக ஒடுக்கியது.

குர்திஷ் மக்களுடைய குர்து மொழி தடை செய்யப்பட்டது.குர்திஷ் மக்கள் துருக்கி அரசின் ஆட்சிக்குட்பட்ட நிலப்பரப்பின் எந்தப் பகுதியையும் தங்களது “மரபு வழித்தாயகம்” என்று அழைப்பது தேசத்துரோக குற்றமாக பிரகடனப்படுத்தப்பட்டது.குர்திஷ் மக்களின் தாயக கோட்பாட்டை சிதைப்பதற்காக அவர்கள் அவர்களது பாரம்பரிய கிராமங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு சுமார் ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு அப்பால் ஈராக்கிய எல்லையிலுள்ள மிகவும் பின் தங்கிய மலைப்பகுதியில் குடியேறுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.அங்கும் அவர்கள் தங்களை குர்தியர்கள் என்று அழைக்கமாமல் மலைநாட்டு துருக்கியர்கள் என்றே அழைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.குர்திஷ் மொழி பாடசாலைகளுக்கு தடை விதிக்கப்பட்டதுடன் துருக்கி மொழியிலேயே அவர்களின் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
மறு புறத்திலே ஈராக்கிலும் ஈரானிலும் கூட குர்திஷ் மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டார்கள்.ஈரானில் வாழ்ந்த குர்தியர்கள் தங்கள் மொழியை இழந்து ஈரானின் பெர்சி மொழியை பேசுபவர்களாக மாற்றப்பட்டுவிட்டார்கள்.
100 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்த இந்த ஒடுக்குமுறை மற்றும் இனஓதுக்கல் கொள்கைக்கு எதிராகவும் தங்களது அடையாளத்தையும் சுய நிர்ணய உரிமையையும் நிலைநாட்டுவதற்காகவும் 1960 களில் குர்திஷ் விடுதலை இயக்கங்கள் உருவாக ஆரம்பித்தன.ஆனால் இந்த இயக்கங்களில் மத அடிப்படைவாதம் ஆணாதிக்க சிந்தனை முதலானவை தலை தூக்கியதால் அவற்றால் குர்திஷ் மக்களை ஒற்றுமைப் படுத்தவோ அவர்களது விடுதலையை வென்றெடுக்கவோ முடியவில்லை.
இந்த நிலையில் 1970 ம் ஆன்டு குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (பிகேகே) என்ற புரட்சிகர இயக்கம் உருவாகியது.

auchalan 2

இந்த இயக்கம் குர்தியர்களின் தாயகம் தேசியம் தன்னாட்சி உரிமையுடன் அவர்களது சமூக விடுதலையையும் வலியுறுத்தியது.குர்திஷ் மக்களுடைய மரபுவழி தாயகத்தை மீட்டு சுதந்திர குர்திய அரசை நிறுவதே தமது குறிக்கோள் என்று பிரகடனப்படுத்தியது.1980 ல் துருக்கிய இராணுவ அடக்குமுறைக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தையும் கெரில்லா தாக்குதல் முறையையும் அந்த இயக்கம் ஆரம்பித்தது.பல்லாயிரக் கணக்கான இளவயதினர் ஆண்களும் பெண்களும் இந்த இயக்கத்தில் வந்து இணைந்தனர்.குர்திஸ் மக்கள் மத்தியில் இந்த இயக்கம் அமோக ஆதரவை பெற்றது.இந்த இயக்கத்தின் தலைவர் அப்;துல்லா ஒச்சலான் குர்திஷ் மக்களால் அதிகம் நேசிக்கப்பட்டார்.

குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் இந்த வளர்ச்சி துருக்கிக்கு அச்சத்தை கொடுத்தது.மக்களின் செல்வாக்குடன் இலட்சிய உறுதிமிக்க புரட்சிப்படையை கொண்டிருந்த இந்த அமைப்பை வெற்றிகொள்வது துருக்கிக்கு முடியாத விடயமாக இருந்தது.இதனால் அது அமெரிக்கா மற்றும் மேற்குலகின் நேட்டோ எனப்படும் வட அத்திலாந்திக் பாதுகாப்பு அமைப்பில் உறுப்பினராக இருப்பதை பயன்படுத்தி பிகேகேயை ஒடுக்குவதற்கு அமெரிக்காவினதும் மேற்குலகினதும் உதவியை நாடியது.சதாம் ஹுசேனின் ஆட்சிக்காலத்தில் ஈராக்கிய எல்லைக்குள் இருந்த குர்திஸ் போராளிகளின் தளப்பிரதேசங்களை துருக்கியால் ஒன்றும் செய்ய முடியவில்லை.pkk 1
‘அகண்ட குர்திஸ்தான் என்ற நாட்டின் உருவாக்கம் தனது நாட்டுக்கும் நலனுக்கும் அச்சுறுத்தலாக அமையும்’ என்று கருதிய அப்போதைய ஈராக்கிய அரசுத்தலைவர் சதாம் ஹுசேனை அணுகிய அமெரிக்கா துருக்கிய எல்லப்பகுதியில் ஈராக்குக்குள் இருந்த குர்தியர்களின் தளப்பிரதேசங்கள் மீது ஈராக் படைகளைக் கொண்டு கொடூரமான இனஅழிப்பு தாக்குதலை நடத்திவித்தது.அப்போது சதாம் ஹுசேன் அமெரிக்க விசுவாசியாக இருந்தது குறிப்பிட வேண்டிய ஒன்று.1992 ல் அவர் அமெரிக்க விரோதியாக மாறிய பின்பு அவருக்கு எதிரான போர் குற்றங்களில் ஒன்றாக குர்தியர்களுக்கு எதிராக அவர் நடத்திய இந்தத் தாக்குதல்களை அமெரிக்கா முதன்மை படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து அமெரிக்காவாலும் மேற்குலகாலும் குர்திஷ்தான் தொழிலாளர்கட்சி பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்பட்டது.
இது பிகேகே அமைப்புக்கு நெருக்கடியை கொடுத்தது.அதேநேரம் ஈராக்கில் இடம்பெற்ற அமெரிக்கா ஈராணுவத்தலையீடும் சதாம் ஹுசேனின் வீழச்சியும் துருக்கிய படைகள் தங்கு தடையின்றி ஈராக்கிலுள்ள குர்தியர்களின் தளப்பிரதேசங்களுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த வழிவகுத்தது.

இதனால் முன்னாள் சோவியத் ஒன்றிய ஆதரவு நாடும் தற்போதைய ரஷ்ய ஆதரவு நாடுமான சிரியாவுக்கு பிகேயின் தளப்பிரதேசங்கள் மாற்றப்பட்டன.அப்துல்லா ஒச்சலானும் தனது இருப்பிடத்தை சிரியாவுக்கு மாற்றிக் கொண்டார்.

துருக்கி அமெரிக்காவின் உதவியுடன் சிரியாவிலுள்ள அப்துல்லா ஒச்சலானை கைது செய்ய முயன்றது.பயங்கரவாதி என்று தங்களால் அடையாளப்படுத்தப்பட்ட ஒச்சலானை சிரியா கைது செய்து துருக்கியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அமெரிக்கா சிரியாவை நிர்ப்பந்தித்தது. ஆனால் சிரிய அதிபர் ஆசாத் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அமெரிக்காவும் விடாமல் ஈராக்கை போல சிரியா மீதும் படையெடுக்க ஒச்சலான் காரணமாக இருப்பார் என்று மிரட்டியது.ஏற்கனவே அமெரிக்காவாலும் மேற்குலகாலும் தூண்டிவிடப்பட்ட உள்நாட்டு கலவரங்களால் நெருக்கடியை எதிர்கொண்டிருந்த சிரிய அதிபர் ஆசாத் ஒச்சலானை தனது நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொண்டார்.

வேறு வழியின்றி ஒச்சலான் சிரியாவை விட்டு வெளியேறி இத்தாலிக்குச் சென்றார். அங்கிருந்தும் அவர் வெளியேற நிர்பந்திக்கப்பட்டார். .இந்தப் பின்ணியில் தான் அவர் கென்யாவில் வைத்து துருக்கிய கொமாண்டோகளால் கைது செய்யப்பட்டு துருக்கிக்கு கொண்டு வரப்பட்டு தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.துருக்கி நீதி மன்றம் முதலில் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.பின்னர் அது சிறையை விட்டு வெளியே வரமுடியாத ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.அத்துடன் ஐரோப்பிய நீதி மன்றம் பிகேகேயை பயங்கரவாத பட்டியலில் இட்டது தவறென்று தீர்பளித்ததுடன் ஒச்சலானின் மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்கவும் ஒப்புக்கொண்டுள்ளது.

ஓச்சலானின் கைது குர்திஷ் மக்களிடையே அதிர்வலைகளை தோற்வித்தது.இந்தக் கைதை அடுத்து பிகேகேயின் எஞ்சியிருந்த இராணு தளங்கள் மீது துருக்கி தனது இராணுவ தாக்குதல்களை தீவிரப்படுத்தியது.

இந்த நெருக்கடியான சூழ்நிலையில் பிகேகே இடைக்கால புரட்சிசபை ஒன்றை உருவாக்கி போராட்டத்தை தொய்வின்றி வழி நடத்தியது.மக்கள் முன்னரை விட அதிகமாக எழுச்சி கொள்ள ஆரம்பித்தனர்.

இதை சற்றும் எதிர்பார்க்காத துருக்கியின் ரெசெப் தஹீப் எர்கேடன் தலைமையிலான அரசு தந்திரோபாய அடிப்படையிலான புதிய திட்டம் ஒன்றை உருவாக்கி அதை தன்னுடைய ஒத்தோடிகளான குர்திய குழுவொன்றை கொண்டு நடைமுறைப்படுத்தியது.

இந்தக் குழு குர்திஷ்தான் விடுதலைப் பற்றி உணர்ச்சி ததும்ப பேசியது. இது தொடர்பாக ஏராளமான கட்டுரைகளை பல்வேறு புனை பெயர்களில் எழுதியது.குர்திஷ் மக்கள் மத்தியில் தங்களை மிகப் பெரிய தேசிய உணர்வாளர்களாக காட்டிக்கொண்டது.அதன் பின் ஒச்சலான் துருக்கியிடம் பிடிபட்டு சிறையில் இருப்பதை காரணம் காட்டி பிகேகே தளபதிகள் முன்னணி போராளிகள் எல்லாம் துருக்கி அரசுக்கு விலை போனவர்கள் துரோகிகள் என்று பரப்புரை செய்தது. முன்னணி போராளிகள் மற்றும் தளதிகளின் இருப்பிடங்களை கண்டுபிடித்து காட்டிக் கொடுக்கும் வேலைகளை தங்களால் திட்டமிட்டு பரப்பப்பட்ட போலி உணர்வலைக்கு மயங்கி தங்களுடன் இணையும் புதியவர்களை வைத்து செய்வித்தது.

இதன் விளைவு குர்திஷ் மக்களின் மாபெரும் சத்தியாக இருந்த பி.கே.கே. இன்று மூன்றாக பிரிந்து விட்டது.

இதில் ஒரு குழு துருக்கி இராணுவத்தின் துணைப்படையாக இயங்கி வருகின்றது. இந்தக் குழுவே தியாகி துரோகி அரசியலையும் அதீத குர்திஷ் தேசியம் பேசும் உணர்ச்சி அரசியலையும் முன்னெடுத்த முன்னைய இரகசியக் குழுவாகும்

ஒச்சலானுக்கு ஆதரவான பிரிவு, ஈராக் குர்திஸ்தானில், காண்டில் மலைப்பகுதியில் முகாம்களை அமைத்து அங்கிருந்து துருக்கிக்கும் இப்போது ஐஸ்.ஐஸ் அமைப்புக்கு எதிராகவும் போராடிவருகிறது.

இன்னொரு பிரிவு சிரியாவில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்தப்பிரிவினரும் அங்கிருந்த படி, துருக்கி இராணுத்தின் மீது தாக்குதல்களை தொடுத்து வருகின்றனார்.

இதில் ஈராக் பிரிவிற்கு ஒச்சலானின் சகோதரனும், மற்ற பிரிவுக்கு அந்த முன்னணி தளபதி ஒருவரும் தலைமை தாங்குகின்றனர். இந்த இரண்டு குழுக்களும் ஒன்றை மற்றொன்று ‘துரோகக் குழு’ என்று குற்றம் சுமத்தி வருகின்றன. இவற்றைவிட சுயேட்சையாக இயங்கும் இரண்டு சிறு பிரிவுகளும் உள்ளன. இந்க் குழக்களுக்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆயுதம் வழங்கி ஐஸ்.ஐஸ் அமைப்புக்கு எதிராக போராட வைத்திருக்கின்றன.
(தொடரும்)

 
 

மறந்துபோன மனிதர்கள் இவர்கள்…!


maranth1

போர் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையில், மோதலின் போது நிரந்தர காயங்களுக்கு உள்ளான தமிழ் மக்கள் இன்னும் உடல் ரீதியாக, உள ரீதியாக, பொருளாதார ரீதியாக கடுமையான போராட்டத்தை எதிர்நோக்கி வருகின்றனர். போரில் காயமடைந்த இராணுவச் சிப்பாய்களுக்கு தொடர்ந்து சம்பளம், மருத்துவ வசதி, காயங்களுக்கேற்ப தொழில், அவர்களுக்கென்று பராமரிப்பு நிலையங்கள் என அரசினால் சலுகைகள் வழங்கப்படுகின்ற போதிலும், இவர்கள் காயமடைந்த அதே களத்தில் நிரந்தர காயங்களுக்கு உள்ளான தமிழ் மக்கள், முன்னாள் விடுதலைப் போராளிகளுக்கு எதுவித உதவியும் அரசால் வழங்கப்படுவதில்லை.

கடந்த செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேவையின் ஆணையாளரால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், போர் நடவடிக்கையின்போது காணாமல் போனோரின், உயிரிழந்தவர்களின் உறவுகளுக்கு, காயமடைந்தவர்களுக்கு நீதி வழங்கப்படவேண்டும் என்றும் – அவர்களுக்கு நஷ்டஈடு கொடுக்கப்படவேண்டும் என்றும் – குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், குறிப்பாக போரால் நிரந்தர காயங்களுக்கு உள்ளான சிவில் மக்கள் குறித்தோ அல்லது முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் குறித்தோ எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

சமூக சேவைகள் திணைக்களத்தின் படி வட மாகாணத்தில் நிரந்த காயங்களுக்கு உள்ளானவர்கள் 19,826 பேர் வாழ்ந்துவருகின்றனர். 19,826 பேர்தான் வட மாகாணத்தில் இருக்கின்றனர் என திணைக்களம் தெரிவித்தாலும், இது இருமடங்காக இருக்கலாம் என்கிறது வவுனியாவில் இயங்கும் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனம். “கிட்டத்தட்ட நிரந்தர காயத்திற்குள்ளான 40,000 பேர் வட மாகாணத்தில் இருக்கின்ற அதேவேளை, அதில் 80 வீதமானோர் போரினால் காயத்திற்குள்ளானர்வர்கள்” என்று கூறுகிறார் வவுனியா வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் தலைவர் வெள்ளையன் சுப்ரமணியம்.

1990ஆம் ஆண்டு இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் ஒன்றில் வெள்ளையன் சுப்ரமணியம் கண்பார்வையை இழந்திருக்கிறார். போர் முடிவடைந்த காலப்பகுதியில் அதிகப்படியான உதவிகள் கிடைத்த போதிலும் இப்போது சொல்லிக்கொள்ளும் படி அவ்வாறு கிடைப்பதில்லை என்கிறார் வெள்ளையன். இருந்தாலும் தங்களுக்கு கிடைக்கும் பணத்தை, பொருட்களைக் கொண்டு நேர்மையான முறையில் சேவை செய்து வருவதாகவும் கூறுகிறார் அவர்.

இருப்பினும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, யாழ்ப்பாணத்தில் இருக்கும் நிரந்தர காயத்திற்கு உள்ளானவர்கள் ஒருவேளை உணவுக்கே வழியில்லாம் கஷ்டப்பட்டுவருகின்றனர். ஒரு சிலர் வசதியோடு வாழ்ந்தாலும் அவர்கள் உளவியல் ரீதியாக மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இன்னும் சிலர், நல்லுள்ளம் கொண்டவர்களால் ஒரு தொகை பணம் செலுத்தி வாங்கிக்கொடுக்கப்பட்ட முச்சக்கரவண்டியின் மாதாந்த தவணைப் பணத்தை செலுத்த முடியாமல் செய்வதறியாது தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்.

மேmaranthuலும் சிலர், தாங்கள் வருடக்கணக்கில் தங்கியிருக்கும் உறவினர்கள் வீடுகளில் இருந்து விரட்டியடிக்கப்படும் தருவாயில் இருக்கின்றனர். முன்னாள் போராளியான ஒருவர் – இடுப்புக்குக் கீழ் இயங்காதவர் – புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்டவர், 5 வருடங்களுப் பின் ‘மாற்றம்’ அரசின் கீழ் இயங்கும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருக்கிறார். இன்னுமொரு முன்னாள் பெண் போராளி, அவருக்கும் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டுள்ளதால் இடுப்புகுக் கீழ் இயங்காது. தடுப்பிலிருந்து விடுதலையாகி வெளிநாட்டுக்குச் சென்றுள்ள கணவரின் தொலைப்பேசி இலக்கத்தைக் கேட்டு, அங்கவீனமானவர் என்று பார்க்காமல் இனந்தெரியாத மூவரால் தாக்கப்பட்டிருக்கிறார்.

ஆகவே, தெற்கில் போரில் காயமடைந்த இராணுவச் சிப்பாய்களுக்கு அனைத்து வசதிகளும் உரிமைகளும் வழங்கப்படுகின்றபோது, அதே போரில் காயமடைந்த தமிழ் மக்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை? அவர்களும் இந்நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில் அவர்களது உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும்; தேவைகளும் பூர்த்திசெய்யப்பட வேண்டும். மனித உரிமைகள் தினத்தை (டிசம்பர் மாதம் 10) முன்னிட்டு ‘மாற்றம்’ தளம் போரில் நிரந்தர காயங்களுக்கு உள்ளான சிலரின் குரல்களை இங்கு பதிவு செய்கிறது

பதவியா, பொரளை, குருணாகல், மீண்டும் பதவியா, கண்டி, வவுனியா, கொழும்பு காசல், மீண்டும் பொரளைக்கு, ராகம… சுமார் 3 வருடங்கள் மதிவாணன் தயாகினி சிகிச்சைக்காக இடம்பெயர்ந்த வைத்தியசாலைகளே மேல் குறிப்பிடப்பட்டிருக்கும் இடங்கள். 2009ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்று கொண்டிருக்கும்போது தயாகினியின் கழுத்துப் பகுதியை துப்பாகி ரவை துளைத்துச் சென்றுள்ளது. அப்போது அவர் கர்ப்பமாக இருந்துள்ளார். பின்னர் மேல் குறிப்பிடப்பட்டுள்ள வைத்தியசாலைகளுக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக வரிசையாக அனுப்பப்பட்டிருக்கிறார்.

சிகிச்சைகள் முடிந்து திருகோணமலையிலும் பின்னர் யாழ்ப்பாணத்திலும் தயாகினி தனது கணவர் மதிவாணனுடன் குடியேறியிருக்கிறார். யாழ்ப்பாணம் சென்ற பின்னர்தான் பதிவு நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறார். “இன்டக்கு வரைக்கும் எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கல்ல. வீட்டுத்திட்டமோ, அரச உதவிகளோ அல்லது தனியார் நிறுவன உதவிகளோ எதுவும் கிடைக்கல்ல. போய் கேட்டா, யாழ்ப்பாணத்தில யுத்தம் நடக்கேல்ல, அதனால உதவிகள் செய்ய ஏழாது என்டு சொல்லினம்” என்று கூறுகிறார் தயாகினி.

 

“ஆனால், இந்த அரசாங்கம் மாறுனதிலிருந்து மருத்துவ கொடுப்பனவு என்டு சொல்லி மாதம் மூவாயிரம் டி.எஸ். ஒபிஸால தருவினம். அதவிட சமுர்த்தி முத்திரையும் இந்த வருஷம்தான் தந்தவ” என்கிறார் தயாகினி. தயாகினியால் அவருடைய வேலைகளையே செய்துகொள்ள முடியாத நிலை. கணவன் மதிவாணன்தான் அவருடைய, மகனுடைய அனைத்து வேலைகளையும் செய்கிறார்.

“தொடர்ந்து என்னைப் பராமரிக்க வீட்டிலேயே ஒரு ஆள் தேவை. அவர் வெளி வேலை ஒன்டுக்கும் போறதில்ல. வயரின் வேலையும் செய்தவர். இப்ப வெளியால போக ஏலாத நிலமையால போறதில்ல. அப்படி வேலைக்குப் போனாலும் முழு நேரமும் இருந்து வேலை செய்ய முடியாது. காலையில எங்கட வேலைய முடிச்சி, மதியம் சாப்பாடு தாரத்துக்கு திருப்பி வரனும். திருப்பி இரவுக்கு வரனும். அதால வெளி வேலைக்கு ஒன்னும் போறதில்ல. என்ன விட்டுட்டும் போக ஏலாது. அதால போறதில்ல” என்று உருக்கமாக கூறுகிறார்.

 

“நாங்க இப்ப எங்கட அக்காட வீட்டுல ஒரு ரூம்லதான் இருக்கிறம். எங்களுக்குச் சொந்தமா வீடு இல்ல. காணியிருந்தும் வீடு கட்ட முடியாம இருக்கிறம். தற்காலிக வீடு கூட எங்களுக்குத் தரேல்ல. எங்களுக்கு இப்போதைக்கு டொய்லட் வசதியோட வீடொன்டுதான் அவசரமா தேவைப்படுது” என்று கூறுகிறார் தயாகினி.

பக்கத்து காணியில் அடுத்த வருடம் ஜனவரிக்கு குடியேறுவதற்காக நான்கு மரங்களை நாட்டி தகரங்கள் போட்டுள்ள கொட்டிலொன்றை மதிவாணன் காட்டுகிறார். தொடர்ந்து வீட்டாருக்கு கஷ்டத்தை கொடுக்காமல் தனியாகச் சென்று வாழ இருவரும் முடிவெடுத்து விட்டனர். “எங்கள மாதிரி யாழ். மாவட்டத்தில நிறைய பேர் இருக்கினம். எனக்குத் தெரிய 18, 19 பேர் இருக்கினம். அவைகளுக்கு இப்படி உதவியென்டு எதுவும் கிடைக்கிறதில்ல. அவைகளுக்கும் உதவி கிடைச்சா நல்லா இருக்கும்” – என்கிறார் தயாகினி.

 

நான்: காலையில என்ன சாப்பாடு?

நவீந்திரன்: மரவள்ளி,

நான்: மத்தியானம்?

நவிந்திரன்: ஒன்டுமில்ல…

இடம்: வட்டக்கச்சி, சம்புக்குளம்

முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு இடுப்புக்குக் கீழ் இயங்காத நிலையில் கட்டிலில் படுத்திருந்த நவீந்திரனுக்கும் எனக்குமான உரையாடலே மேலிருப்பது.

அனேகமானோரின் நிலை இதுதான்.

வைத்தியர் ஒருவரின் மூலமாக இரண்டு பிள்ளைகளின் தந்தையான நவீந்திரனுக்கு தவணை முறையில் செலுத்தக்கூடிய வகையில் ஆட்டோ ஒன்று கிடைத்திருக்கிறது. முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கென்று பிரத்தியேகமான முறையில் – கைகளைக் கொண்டு இயக்கக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட ஆட்டோவே இது. அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான் குடும்பத்தைக் கொண்டுநடத்துகிறார் நவீந்திரன். ஆனால், கடன் கொடுக்க வேண்டியிருந்ததாலும், தொடர்ந்து தனக்கு ஏற்பட்ட காய்ச்சலினாலும் ஆட்டோவுக்கான புத்தகத்தை அடகுவைத்துள்ளார் நவீந்திரன். மாதம் 13,000 கட்ட வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் தற்போது இருக்கிறார் அவர்.

25

“மாதம் 13,000 கட்டனும். இப்போ அரியஸா 60,000 கிட்ட வந்திருக்கு. சிலநேரம் அரியஸ்னால தூக்கினமோ தெரியாது. ஆட்டோ கைவிட்டுப் போயிருச்சென்டா வாழ்க்கையே சரி… அது இருக்கிறதாலதான் ஹொஸ்பிட்டலுக்கு எல்லாம் பொய்ட்டு வாறன். திருப்பி எடுக்கக்கூடிய வல்லமையும் எங்ககிட்ட இல்ல. சாப்பாடு இல்லையென்டா பிச்சை எடுத்தாவது சாப்பிடலாம். வருத்தமென்டா கிளிநொச்சிக்குதான் போகனும். ஆட்டோ இல்லாம கஷ்டம்” – என்று கூறுகிறார் நவீந்திரன்.

நவீந்திரனின் மனைவி, 6ஆம் தரத்தில் படிக்கும் மூத்த மகளுடன் உதவி பெறுவதற்காக உறவினர் வீடொன்றுக்கு சென்றிருப்பதாகக் கூறுகிறார் நவீந்திரன்

“கோழியும் வளர்த்து பார்த்தனான்…. அடுத்தடுத்து விடக்கூடிய மாதிரி காசு இல்லதானே. ரெண்டு செட் வளர்த்தன். அதில வந்த காச கடனுக்கும், ஆட்டோ லீசிங்கிங்கும் கொடுத்து முடிஞ்சிருச்சி. கோழி வாங்கித்தந்தா வீட்டோட இருந்து பார்த்துக்கலாம்” என்கிறார் அவர். 4ஆம் தரத்தில் படிக்கும் இளையவன் நவீந்திரனினுடன் அவருக்கு உதவியாக, துணையாக அருகிலேயே அமர்ந்திருக்கிறான்.

கிளிநொச்சியில் பிள்ளைகள் இருவருடன் இடுப்புக்குக் கீழ் இயங்காத நிலையில் சக்கர நாற்காலியின் துணையுடன் வாழ்ந்துவரும் முன்னாள் இளம் பெண் போராளி ஒருவரை சந்திக்கச் சென்றேன். 2000ஆம் ஆண்டு முகமாலையில் இராணுவத்தினருடன் இடம்பெற்ற மோதலின்போது ஷெல் தாக்குதலுக்கு இலக்காகி இடது காலை இழந்தவர் இவர். அத்தோடு, முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டதால் இடுப்புக்குக்கீழ் இயங்காத நிலையில் சக்கர நாற்காலியிலேயே நிரந்தரமாக உட்கார்ந்து விட்டார்.

“தலையில் இருந்து உள்ளங்கால் வரை பீஸ் (இரும்புத் துண்டுகள்) இருக்கிறது. அதனால், மழை என்றாலும் வெயில் என்றாலும் அடிக்கடி உடல் ரீதியான பிரச்சினைகள். தலைவலி தொடங்கினால் கை, கால்கள் எல்லாம் வீங்கத் தொடங்கும். 6 வருஷமா படுக்கைப் புண் இருக்குது” என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த முன்னாள் போராளி. கணவனுடன் இருக்கும் படங்கள் டிவியின் மேலும், உடைந்த சுவர்களிலும் தொங்கிக் கொண்டிருக்கிறது. கணவர் வீட்டில் இல்லையா என்று கேட்டேன்?

“அவர் வௌியில இருக்கார். அவரும் என்னைப் போல முன்னாள் போராளி ஒருவர்தான். இயக்கத்தில இருந்து விலத்தி வந்துதான் என்னைத் திருமணம் செய்தவர். இடம்பெயர்ந்து முகாமுக்கு வந்தபோது கணவர பிடிச்சுக்கொண்டு பொயிட்டினம். பிறகு சித்திரவதை செய்த பிறகுதான் விட்டினம். ஒரு நாள் அவர் வேலைக்குப் போய் திரும்பி வரல்ல. திடீரென்று காணாமல்போயிட்டார். அவரைத் தேடாத இடமில்ல. சில மாதங்களுக்குப் பிறகுதான் ஒஸ்ரேலியாவில இருக்கிறதா கோல் பண்ணார். பிறகு அங்கயும் கஷ்டமென்டு ப்ரெண்ட் ஒருத்தர்ட உதவியோட பிரான்ஸ் போயிட்டார். அங்க இதுவர அவருக்கு ‘கார்ட்’ கிடைக்கல்ல. இடைக்கிட காசு அனுப்புவார். அதுக்குப் பிறகு நானும் பிள்ளைகளும் அம்மாவும்தான் வாழ்ந்து வந்தோம். அம்மா இரத்தப் புற்றுநோய் வந்து 2012 மோசம் போயிட்டா. இப்ப நாங்க மூன்று பேருதான் இருக்கிறம்”. கண்களில் கண்ணீர் வலியவில்லை. குரலில் நடுகமும் இல்லை. திடமாகப் பேசுகிறார்.

“2014.6.3ஆம் திகதி இனந்தெரியாத 3 பேர் வந்து கணவர்ட போன் நம்பர கேட்டு என்ன அடிச்சதோட, வீல் செயாரயும் வெளியில தள்ளிவிட்டு பொயிட்டினம். தலையில, கையில, கால்ல காயமென்டதால ஒரு மாசமா ஹொஸ்பிட்டல்ல இருந்தன். பொலிஸில, மனித உரிமைகள் ஆணைக்குழுவுல என்ரி போட்டனான். ஆனா இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கல்ல. இனந்தெரியாத ஆக்கள் என்டதால கண்டுபிடிக்க முடியாது என்று பொலிஸால சொல்லினம்”.

மகளை அழைத்து டிவியின் கீழ் இருக்கும் பையொன்றை எடுத்துவருமாறு கூறுகிறார். தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்த வெளியான பத்திரிகை, இணையத்தள செய்திகளின் பிரதிகள் அடங்கிய பை அது. 5, 6 தாள்களைத் தந்தார். இணையதளங்கள் முந்திக்கொண்டு செய்தி வெளியிட்டிருந்தன, “முன்னாள் பெண் போராளி மீது இனந்தெரியாதோர் தாக்குதல்”. காயப்பட்ட நாளில் இருந்து அரசாங்கம் உதவி எதுவும் செய்யவில்லையா என்று கேட்க?

“நான் காயப்பட்டு 15 வருஷமாகிட்டு. அரசாங்கமோ, இல்ல வேறு யாரோ எந்த உதவியும் செய்யல்ல. இருந்த சமுர்த்தியையும் புதுசா வந்த அரசாங்கம் வெட்டிட்டது. வட மாகாண சபையால மாதத்துக்கு 1,500 ரூபா கொடுக்குறாங்க. அந்தக் காச மட்டும்தான் எடுத்துக் கொண்டு இருக்கிறன். “நாங்க ஏழாத ஆக்கள் என்டு யாரும் வந்து பார்க்கிறதில்ல. இவைக்கு கொமட் வசதி இருக்குதா? பாத்ரூம் வசதி இருக்குதா? கிணறு இருக்குதா? இருக்க வீடு இருக்குதா? என்டு யாரும் வந்து பார்க்கிறதில்ல. எந்த நிறுவனமும் வந்து பார்க்கல்ல. ஒரே ஒரு நாள் ஜி.எஸ். வந்தார். அதுவும், நாங்கள் என்ன மரக்கன்று வச்சிருக்கம், எவ்வளவு வருமானம் என்டு கேட்டுப் போனார். அவ்வளவுதான்”.

“நாங்களா உழைச்சாதான் சாப்பிடலாம். ஏழாதென்டு சொல்லி எந்த நிறுவனமும், எந்த அரசாங்கமும் உதவ வராது. கட்டில் கூட நான்தான் காசு குடுத்து வாங்கினன்”. தான் யாரையும் நம்பியிருக்கவில்லை என்பது அவரது வார்த்தைகளால் தெரிகிறது. இடையிடையே வந்துபோகும் அம்மாவின், தந்தையின் உதவியுடன் அன்றாட தேவைக்கென்று தோட்டம் செய்வதாகக் கூறுகிறார் அவர். நான் சென்றிருந்த அன்றும் வயதான ஒருவர் அரைக் காற்சட்டையுடன் மண்வெட்டியுடன் தோட்டத்தில் நின்றிருந்ததைக் கண்டேன்.

தற்போது தான் பயன்படுத்திக் கொண்டிருக்கும் சக்கர நாற்காலியின் ஆயுட்காலம் முடிவடையும் தருவாயில் உள்ளதாகவும், அதன் பின்னர் தான் என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளார் என்றும் அவர் கூறுகிறார். “நான் தனியாத்தான் வீட்டு வேலைகள செய்றன், அதோட டவுனுக்குப் போகனும், ஹொஸ்பிட்டல் போகனும். உடுப்பு கழுவனும்… இதெல்லாம் இந்த வீல் செயார்ல இருந்து கொண்டுதான் செய்றன். இதுக்கும் காலம் சரி. ஒரு வருஷமாகப் போகுது. இதுதான் கடைசியென்டு தந்தவங்க. நானும் கிறீஸ் எல்லாம் போட்டு, ரேஸர் மாத்தி பாவிச்சிக் கொண்டுதான் இருக்கிறன். இது பழுதாப் போனா அடுத்தக்கட்டமா இன்னொரு வீல்செயார் கிடைக்குமா கிடைக்காதா என்டு கூட தெரியாது” என்கிறார் அவர்.

Fotor122123020

“நான் மருத்துவத்திலதான் தங்கியிருக்கிறன். அடிக்கடி ஹொஸ்பிட்டலுக்குப் போகனும். மினரல் வோட்டரதான் குடிக்கச் சொல்றாங்க. ஆனா அந்த வசதி ஒன்டும் எங்ளிட்ட இல்ல” என்கிறார் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு இடுப்புக்குக்கீழ் செயலிழந்த யோகராஜன். புதுக்குடியிருப்பைச் சேர்ந்த யோகராஜனுக்கு பாடசாலை செல்லும் வயதில் மூன்று பெண் பிள்ளைகள். முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கென்று பிரத்தியேகமான முறையில் – கைகளைக் கொண்டு இயக்கக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட ஆட்டோவை இவர் செலுத்தி வருகிறார். ஆட்டோ செலுத்தி அதில் கிடைக்கும் கொஞ்ச பணத்தைக் கொண்டு வாழ்ந்து வருகிறார்.

“2009 யுத்தம் நடந்த காலப்பகுதியில்தான் எனக்கு காயம் ஏற்பட்டது. முள்ளந்தண்டில் இன்னும் பீஸ் இருக்குது. அத எடுத்தா இன்னும் பாதிப்பு என்டு எடுக்காமல் இருக்கன். இது இருக்கிறதால நிறைய பிரச்சின. உடம்பு வலிக்கும், வீங்கும்” என்கிறார் யோகராஜன். அவரது மூன்று மகள்களும் வந்து என் பின்னால் நின்று சிரிக்க, யோகராஜன் பார்வையாலேயே அதட்டுகிறார்.

 

“வாழ்வாதார உதவியாக அரசாங்கம் 36,000 தந்தது. அத எவ்வளவு காலத்துக்குத்தான் வச்சுக் கொண்டு இருக்கிறது. அதோட, சித்திர மாதத்தில் இருந்து 3,000 கொடுப்பனவு தாராங்க. முதல்ல 4 மாதத்தையும் சேர்த்து தந்தாங்க. பிறகு ஒரு மாதத்துக்கான கொடுப்பனவ தந்தாங்க. மீதிய இன்னம் தரல்ல. ஆனா போய் சைன் வச்சிக்கொண்டுதான் இருக்கிறம்” என்று கூறுகிறார் அவர்.

அது கிடைக்கும் என்ற நம்பிக்கை அவரது வார்த்தைகளில் காணமுடியவில்லை. மூன்று மாதங்களாக அந்த உதவித் தொகை இல்லாமல் சமாளித்துவிட்டோம், இனி வந்தாலென்ன, வராவிட்டாலென்ன, சமாளித்துவிடலாம் என்று அவர் எண்ணுவது போல எனக்குத் தோன்றியது. “நிரந்தரமாக ஒரு தொழில் இல்ல. ஓட்டோ ஓடுறன். கச்சான் விக்கிறன். அதுவும் சீஸனுக்குத்தான் விக்கலாம்” என்கிறார் எதிர்காலம் குறித்து நிச்சயமில்லாமல்.

 

“சீவல் தவிர, வேற தொழில் என்டா இவர் செய்யமாட்டார். கண்பார்வை தெரியாதுதானே” என்கிறார் முன்னாள் பெண் போராளியான நகுலேஷ்வரன் அருள்மீரா. 1997ஆம் ஆண்டும் இடம்பெற்ற மோதலின்போது இடது கையை இழந்துள்ள அருள்மீரா 2009ஆம் ஆண்டு இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வின் பின்னரே விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.

பிறவியிலேயே கண்பார்வையை இழந்த நகுலேஷ்வரனை அருள்மீரா திருமணம் செய்திருக்கிறார். இருவரும் 2014ஆம் ஆண்டு முதல் முள்ளியவலையில் உறவினர் ஒருவரின் வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள். “வீட்டுத்திட்டத்திற்கான காணி தந்திருக்கினம். வீடு கட்டித் தருவினம் என்டு சொல்லியிருக்கினம். ஆனா இன்னும் கிடைக்கல்ல. கிடைக்கும் என்டு நம்பிக்கொண்டிருக்கிறம்” என்கிறார் அருள்மீரா.

 

வாழ்கைய கொண்டு நடத்த என்ன செய்றீங்க என்று கேட்டேன், “பாக்கு சீவி கொடுக்கிறோம்” என்றார் நகுலேஷ்வரன். யார் சீவுவது? “நான்தான்” என்றார் அவர். கண்பார்வை தெரியாதவர் எப்படி என்று திகைத்துப் போனேன். நான் உட்கார்ந்திருந்த அறையின் ஓரத்தில் பெரிய பாக்கு வெட்டியொன்று பொருத்தப்பட்டிருந்த மேசையொன்று இருந்தது. அருள்மீராவைப் பார்த்து, “ரெண்டு பாக்கு எடுத்திட்டு வா” என்று கூறியவாறு சுவரை தடவிக்கொண்டு பாக்கு வெட்டி மேசையை நோக்கி நகர்ந்தார். கண் பார்வை உள்ள எங்களால் கூட அவ்வாறு பாக்கை சீவ முடியாது. அவ்வளவு நேர்த்தி. இந்தத் தொழிலை எப்படி ஆரம்பித்தீர்கள் என்று அருள்மீராவிடம் கேட்டேன்?

“வெளிநாட்டில இருந்து ஒருத்தர் நாற்பதாயிரம் காசு தந்து உதவினார். அத கொண்டுதான் சின்னதா பாக்கு சீவல் வேலைய தொடங்கினம். பாக்கு சீவி ஒரு கிலோ குடுத்தா 40 ரூபா கிடைக்கும். இன்னும் கொஞ்சம் காசு உதவி கிடைச்சா இந்தத் தொழில நல்லா செய்துகொண்டு போகலாம்” என்கிறார் அருள்மீரா.

 

“அரசாங்கம் இதுவர எந்த உதவியும் செய்யல்ல. கூலி வேலையோ, கடற்தொழில் வேலையோ இவரால செய்ய முடியாது. சீவல தவிர இவரால வேற எதுவும் செய்யமுடியாது. வீட்டுலயே இருந்து இந்தத் தொழிலதான் செய்யலாம். இந்தத் தொழில செஞ்சு கொண்டு போக உதவினா நல்லா இருக்கும்” என்று உதவிகோருகிறார் அருள்மீரா.

Fotor1221231227

“2009இல நான் அனுபவப்பட்ட மாதிரி வேறு யாரும் அனுபவப்பட்டிருக்க மாட்டாங்க. அப்படியொரு இக்கட்டான சூழ்நிலை. எங்க பார்த்தாலும் மனிதப் பிணங்கள். கொத்துக் கொத்தாக சனம் கொல்லப்பட்ட கிடந்தாங்க. அதையும் கடந்து வரும்போதுதான் எனக்கு துப்பாக்கிச் சூடு பட்டது. 2009.2.4ஆம் திகதிதான் நான் காயப்பட்டன்”. இவ்வாறு கூறுகிறார் வட்டக்கச்சியைச் சேர்ந்த பிரபாகரன். பிரபாகரனுக்கு முள்ளந்தண்டில் பாதிப்பு ஏற்பட்டதால் நிரந்தரமாக சக்கர நாற்காலியில் உட்காரவேண்டி ஏற்பட்டுவிட்டது.

இருப்பினும், மன உறுதி மிக்கவர். தானாக அத்தனை வேலைகளையும் செய்துகொள்கிறார். “ஒரு கால் இல்லாதவர் எப்படியும் சமாளித்துக் கொள்வார். ஆனால், ஸ்பெஷலா முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட என்னைப் போன்றவர்கள் வீல் செயாரில் இருப்பதால் நிறைய கஷ்டத்த எதிர்கொள்றம். எங்களுக்கு இன்னொருத்தர்ட உதவி கட்டாயமா தேவைப்படுது. அரச கட்டடங்கள்ல, பஸ்ல எல்லாம் இன்னொருத்தர்ட உதவியோட ஏறவேண்டியிருக்கு. இது எனக்கு மனக்கஷ்டத்த தரக்கூடியதா இருக்கு. உளவியல் ரீதியாக பிரபாகரன் பாதிக்கப்பட்டுள்ளதை உணர முடிகிறது. தனக்கு யாரிடமும் கையேந்த விருப்பமில்லை என்ற வார்த்தை அடிக்கடி அவர் வாயிலிருந்து வந்து கொண்டே இருந்தது.

Fotor1221231418

“சாதாரணமான கூலி வேலைக்குப் போய் 1,000 ரூபா உழைக்கிறவர் கிட்ட கேட்டா, கஷ்டமென்டுதான் சொல்வார். 24 மணித்தியாலமும் இதுல இருக்கிற எங்களுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும். வாழ்வாதார ரீதியா முற்றுமுழுதா பாதிக்கப்படுறம்” என்று கூற எம்மிடம் பதில் இல்லை. தான் போன்றவர்களுக்கு இருக்கும் திறமையை பரீட்சித்து தொழில் வழங்க அரசாங்கம் முன்வரவேண்டும் என்று கூறும் பிரபாகரன், ஆனால், தன்னை விட தகுதி குறைந்தவர்கள் அரச, தனியார் நிறுவனங்களில் கடமையாற்றுவதாகக் குற்றம் சாட்டுகிறார்.

“கொம்பியூட்டர் பக்கம் எல்லாம் நான் செய்வன். ஹார்ட்வெயார் புல்லா செய்வன், சொப்ட்வெயார் இன்ஸ்டொலேஷன் எல்லாம் செய்வன். எனக்கு உள்ள திறமைய செக் பண்ணலாம். வேலை செய்யாத கொம்யூட்டர தந்திட்டு திருத்தித் தரச்சொன்னா இரண்டு நிமிஷத்தில என்ன பிரச்சின என்டு கண்டுபிடிப்பன்” – ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் அவர்.

 

“இந்த அரசாங்கம் மாறியும் எந்தவித பயனும் எங்களுக்கு இல்லை. 2016ஆம் ஆண்டு வரவு-செலவு திட்டத்தில எங்களுக்கென்று ஏன் காசு ஒதுக்க முடியாது? வட மாகாண சபையால 1,500 ரூபா தாராங்க. அத வச்சிக்கொண்டு என்னத்த செய்யலாம்? அதக்கொண்டு சந்தைக்குப் போனா 100 ரூபா காசுதான் மிஞ்சும். ஏன் எங்கள மாதிரி ஆக்களுக்கு அரசாங்கத்தால உதவி செய்ய முடியாதா?”

“சாராரணமாக படை வீரர்களுக்கு 55,000 சம்பளம் கொடுக்குறாங்க. அதுக்காக அத அப்படியே எங்களுக்கு தா என்டு கேக்கல்ல. எங்களயும் இந்த நாட்டின் பிரஜைகளாக கருத்தில் கொண்டு வாழவிடுங்க” – பிரபாகரனின் இந்தக் கருத்தை ‘மாற்றம்’ அரசு செவிமடுக்குமா?

“எனக்கு மகன படிக்க வைக்கோனும் என்டு ஆசை இருக்குது. படிப்பென்டா சும்மா இல்லதானே, நிறைய செலவு வரும். எப்படியாவது கஷ்டப்பட்டு பிள்ளைய படிக்க வச்சி நல்ல உத்தியோகம் எடுத்துக் கொடுக்கோனும் என்பதுதான் என்ட ஆசை” முள்ளியவலையைச் சேர்ந்த நகுலேஸ்வரி தனது மகனின் எதிர்காலம் குறித்த தனது கனவை இவ்வாறு குறிப்பிடுகிறார். முன்னாள் போராளியான நகுலேஸ்வரி ஆயுதப் பயிற்சியின்போது தவறுதலாக இடம்பெற்ற வெடிவிபத்தில் இரண்டு கைகளையும் இழந்தவர்.

2009ஆம் ஆண்டு இராணுவத்தினரிடம் சரணடைந்து, புனர்வாழ்வின் பின் விடுதலையாகி 2011ஆம் திருமணம் செய்துள்ளார். ஒரு மகனுடன் வாழ்ந்துவரும் இவர்களுக்கு ஒரு சில உதவிகள் கிடைத்திருக்கின்றன. இருப்பினும் அவை முழுமையாக கிடைக்கப் பெறாததால் இக்கட்டான நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

Fotor1221231917

“மூன்று குடும்பங்கள் சேர்ந்து இந்த ஓட்டோவ வாங்கித் தந்தவ. உடனே நாங்க அறுபதினாயிரம் கட்டினனாங்கள். அதுக்குப் பிறகு மாதம் மாதம் ஏழாயிரம் கட்டிக் கொண்டிருக்கிறம். ஓட்டம் பெரிசா வாரதில்ல. பார்க்ல நிறுத்த பத்தாயிரம் வேணும். சாப்பிடறமோ இல்லையோ காசு கட்டியே ஆகனும். வீடும் கட்டி குறையாதான் இருக்கு” என்கிறார் நகுலேஸ்வரி. நகுலேஸ்வரியால் ஒருவேலையும் செய்ய முடியாததால் அவருடைய கணவர்தான் அத்தனை வேலைகளையும் செய்து வருகிறார்.

“இவரு கூலி வேலை செஞ்சிதான் என்னயும் பிள்ளயையும் பார்த்து வரார். காலையில எழும்பி முற்றத்த கூட்டி, சட்டி பானை கழுவி, காலை – பகல் சாப்பாடு செஞ்சி வச்ச பிறகுதான் வேலைக்குப் போரார். ஒவ்வொரு நாளும் வேலைக்குப் போறதில்ல. சந்தர்ப்பம் கிடைக்காது. எங்களுக்கு எல்லா வேலையும் செய்து முடியும்போதே நேரம் போயிடும். இப்ப மழைக்காலம் என்டதால இன்னும் கஷ்டமாக இருக்கு” என்று கூறுகிறார் அவர்.

என்ன உதவி எதிர்பார்க்குறீங்க என்று கேட்டதற்கு?

“பசு மாடு எடுத்துத் தந்தா பால் கறந்து விக்கலாம். கோழி வாங்கித் தந்தா வளர்க்கலாம்” என்கிறார் நகுலேஸ்வரி.

மகன் படிக்கிறாரா என்று கேட்டேன்?

“எனக்கு மகன படிக்க வைக்ககோனும் என்டு ஆசை இருக்குது; ஒரு உத்தியோகம் செய்யவைக்க ஆசையா இருக்குது. இங்கிலீஸ் எல்லாம் படிக்க வைக்க ஆசை. எனக்கும் கூட இங்கிலீஸ் படிக்க, பேச ஆசை. எனக்கு இன்னும் படிக்க விருப்பம். ஆனா முடியாது. அதனால என்ட மகன இங்கிலீஸ் படிக்கவைக்கனும். படிப்பென்டா சும்மா இல்லதானே, நிறைய செலவு வரும். எப்படியாவது கஷ்டப்பட்டு பிள்ளைய படிக்க வச்சி நல்ல உத்தியோகம் எடுத்துக் கொடுக்கோனும் என்பதுதான் என்ட ஆசை” – நகுலேஸ்வரியின் கனவு கனவாக இல்லாமல் நனவாகட்டும்.

Nanry  மாற்றம்

 

 
2 பின்னூட்டங்கள்

Posted by மேல் ஜனவரி 18, 2016 in Uncategorized

 

இரண்டாம் முள்ளிவாய்க்கால்…03


 

‘தனது விடுதலைக்காக போராடும் ஒரு இனத்தின் மீது எதிரி ஆயுதங்களைக் கொண்டு நடத்துகின்ற யுத்தம் அந்த இனத்திற்கு உடனடி பேரழிவுகளையும் பின்னடைவுகளையும் ஏற்படுத்தக் கூடும்.ஆனால் அது நிரந்தரமானதல்ல.அந்த இனத்தால் அதிலிருந்து மீள முடியும்.ஆனால் அந்த யுத்தத்தின் பின்னர் அந்த இனத்தின் கலாச்சார தளத்திலே எதிரி ஒத்தோடிகளைக் கொண்டு நடத்துகின்ற நிழல் யுத்தம் மிகவும் ஆபத்தானது.இந்த கலாச்சார ஆக்கிரமிப்பு யுத்தத்தை தனது விடுதலைக்காக போராடிய ஒரு இனம் முறியடித்து வெற்றிகொள்ளவில்லை என்றால் அந்த இனம் நிரந்தரமாக தோற்றுப்போய்விடும். அதனால் மீளெழுச்சி கொள்ளவே முடியாது.’
0000
நிழல் யுத்தத்தின் ஆபத்தை புரிந்து கொள்வது தொடர்பாக….

ஒரு விடுதலைப் போராட்டம் தோல்வியடைகின்ற போது எதிரி உடனடியாக மேற்கொள்ளுகின்ற அடுத்த கட்ட நடவடிக்கை அந்த இனத்தின் கலாச்சாரத் தளத்தை குறிவைத்து நடத்துகின்ற நிழல்(கலாச்சார) யுத்தமாகும்.
இந்த யுத்தம்
1. போராட்ட கலாச்சாரத்தை இல்லா தொழிப்பது.
2. இன(தேசிய)அடையாளத்தை சிதைப்பது.
3. தாயக கோட்பாட்டை சாத்தியமற்றதாக்குவது
என்ற மூன்று இலக்குகளை குறிவைத்து நடத்தப்படுகிறது.
போராட்ட கலாச்சாரம் என்று சொல்கிறபோது சிலர் அதை ஆயுத கலாச்சாரம்,வன்முறை கலாச்சாரம் பாசிச கலாச்சாரம் என்ற தங்கள் பார்வை கோளாறுக்கு எற்ற கண்ணாடிகளை அணிந்து அதற்கு பொழிப்புரை விளக்கவுரை என்று பல்வேறு வியாக்கியானங்களை செய்யக் கூடும்.
நாம் அவற்றை ஒரு பக்கமாக ஒதுக்கி வைத்துவிட்டு இந்தப் போராட்டக் கலாச்சாரம் அல்லது புரட்சிக் கலாச்சாரம் என்றால் என்ன? அது எதை சாதித்தது என்பவை பற்றிப் பார்க்கலாம்;.

இந்தக் கலாச்சாரத்தை நாங்கள் புரிந்து கொள்வதற்கு முதலில் முரண்பாடுகள் பற்றிய புரிதல் நமக்கு அவசியமாகும்.

நாம் வாழுகின்ற இந்தப் பிரஞ்சமும் அதன் ஒரு அங்கமான இந்த உலகமும் இந்த உலகத்தில் வாழும் நாமும் முரண்பாடுகளின் அடிப்படையிலே இயங்கிக் கொண்டிருக்கிறோம்.

கூட்டலும்;-கழித்தலும்;, பெருக்கலும்;- பிரித்தலும்;,வினையும்- எதிர்வினையும்,பிரிதலும்;-சேர்தலும்;,கொந்தளிப்பும்-அமைதியும், வெப்பமும் குளிரும் ,போரும்- சமாதானமும் என்று இப்படி எண்ணற்ற முரண்பாடுகளை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம்.

முரண்பாடு என்பது ஒன்றுக்கு ஒன்று எதிராக இருக்கும் அதே நேரத்தில் அது ஒன்றில் ஒன்று தங்கியிருப்பதுடன் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டதாகவும் கூட இருக்கும்.உதாரணமாக யுத்தமும் சமாதானமும் என்ற முரண்பாட்டை எடுத்துக்கொண்டால் யுத்தம் நடந்தால் தான் சமாதானம் என்பதற்கான தேவை வரும்.சமாதானம் குலைந்து போனால் தான் மறுபடி யுத்தம் வரும். எந்த இடத்திலும் யுத்தம் என்ற ஒன்று நடைபெறாமல் சமாதானம் வந்தது என்று சொல்லமுடியாது.அதாவது யுத்தம் என்ற செயல் தான் சமாதானம் சொல்லுக்கு அர்த்தமும் வடிவமும் கொடுக்கிறது.

இன்னொரு உதாரணமாக தொழிலாளி முதலாளி என்ற முரண்பாட்டை எடுத்துக்கொண்டால் தொழிலாளிகளின் உழைப்பினால்தான் முதலாளி முதலாளியாக இருக்கிறான்.மறுபுறத்தில் முதலாளி முலதனம் போட்டு தொழில் நடத்துவதால் தான் தொழிலாளிக்கு வேலை கிடைக்கிறது.அதன் மூலம் அவனுக்கு கிடைக்கும் ஊதியத்தை வைத்துக்கொண்டு தான் அவன் உயிர்வாழ்கிறான்.ஆனால் அவன் பெறும் அந்த ஊதியம் முதலாளி போட்ட முலதனத்தில் இருந்து எடுக்கப்படவில்லை.அவனது அதாவது தொழிலாளியின் உழைப்பால் கிடைக்கும் உபரியில் (இலாபத்தில்) இருந்தது தான் அவனுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் அந்த உழைப்பால் வந்த உபரியின்(இலாபத்தின்) பெரும்பகுதியை முதலாளி தனதாக்கிக் கொள்கிறான்.தொழிலாளியின் உழைப்பு முதலாளி முதலாளியாக இருக்க உதவுகிறது.முதலாளியின் முதலீடும் இலாப வேட்டையும் தொழிலாளி தொழிலாளியாக இருக்க வைக்கிறது.

ஒன்றில் ஒன்று தங்கியும் ஒன்றை விட மற்றது வேறுபாட்டுடனும்
இருக்கும் இந்த முரண்பாடுகளின் ஐக்கியமும் போராட்டமும்; தான் வளர்ச்சி அல்லது மாற்றம் என்று நாங்கள் குறிப்பிடுகின்ற சொற்களுக்கு அடித்தளமாக இருக்கிறது.

ஓரு இனம் அல்லது சமூகம் என்று பார்த்தால் ஓவ்வொன்றும் தனக்குள்ளும் தனக்கு வெளியிலும் முரண்பாடுகளை கொண்டதாக இருக்கும்.

உதாரமாக தமிழீழத்தமிழர்களான எம்மை எடுத்துக்கொண்டால் பௌத்த சிங்கள பேரினவாதத்துக்கும் எமக்கும் இடையே ஆளமான முரண்பாடு இருக்கிறது. இந்த முரண்பாடு எமக்குரிய புற (வெளி) முரண்பாடாகும்.இது ஒரு பகை முரண்பாடும் கூட.

அதேநேரம் எமக்குள்ளே சாதிய முரண்பாடு, ஊர் முரண்பாடு, பிரதேச முரண்பாடு மதமுரண்பாடு என்று எண்ணற்ற முரண்பாடுகள் இருக்கின்றன.இவை எம்முடைய உள் முரண்பாடுகளாகும்.

இவற்றை விட உலகெங்கிலும்  உள்ள  அனைத்து சமூகங்களிலும் இருக்கக் கூடிய அடிப்படை முரண்பாடான வர்க்க முரண்பாடு தமிழீழத்தமிழர்களிடமும் இருக்கிறது.ஆனால் இதை உழைக்கும் வர்க்கம் எதிர் ஆளும் வர்க்கம் என்ற பொதுவான வரையறையை கொண்டு மதிப்பிட முடியாது.தமிழீழ சமூகம் ஏனைய ஐரோப்பிய சமூகங்களைப் போல் படிமுறை வளர்ச்சியைக் கொண்ட சமூக அமைப்பை கொண்டதல்ல.அது இன்னமும் தாய் வழி சமூக அமைப்பு, அடிமை சமூக அமைப்பு, நிலபிரபுத்துவ சமூக அமைப்பு ஆகியவற்றின் எச்சங்களை கட்டிக்காத்துக்கொண்டு அவற்றை இன்றைய உலக பெருமுதலாளித்துவ சமூக அமைப்புக்கு எற்றாற்போல மறு நிர்மாணம் செய்து கொண்டு வாழுகின்ற தனித.தவமான சில குணாம்சங்களைக் கொண்ட ஒரு சமூக அமைப்பாகும்.இந்த சமூக அமைப்பை நாம் பொதுவான அரசியல் சித்தாந்த கோட்பாடுகளுக்குள் அடக்க முடியாது.

1970 களிலே தமிழீழ தமிழ் சமூகத்துக்கான புறமுரண்பாடான இனமுரண்பாடு கூர்மையடைந்த போது இயங்கியல் விதிகளின் படி அதன் உள்முரண்பாடுகள் தீர்ந்திருக்கவேண்டும் அல்லது நீர்த்துப் போயிருக்க வேண்டும்.

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.பிழைப்புவாத வாக்குச் சீட்டு அரசியல் வாதிகள் தமிழ் மக்கள் ஒற்றுபட்டு நிற்கிறார்கள் என்று மேடைகளில் நீட்டி முழங்கினாலும் யதார்தத்தில் போரினால் இடம்பெயர்ந்த போதும் சாதியையும் துணைக்கு அழைத்துக்கொண்டு இடம் பெயர்ந்ததும் குடி தண்ணீர் கிணறுகளில் நஞ்சு கலந்ததும் பிரதேச வேறுபாடுகள் பார்த்ததும் ஊர் வேறுபாடுகள் பார்த்ததும் தொடர்ந்தன.

இதை ஒழிக்க வேண்டிய தேவை அனைத்து விடுதலை இயக்கங்களுக்கும் ஏற்பட்டது.இதை கட்டிக்காத்துவந்த சீரழிவு கலாச்சாரத்துக்கு பதிலாக புரட்சிக் கலாச்சாரம் அல்லது போர் கலாச்சாரம் ஒன்றை அறிமுகம் செய்ய வேண்டிய தேவை போராட்ட அமைப்புக்களுக்கு ஏற்பட்டது.

உதாரணமாக நாம் நாளாந்தம் பயன்படுத்தும் மின்சாரத்திலே நேர் மின்சாரம் எதிர் மின்சாரம் என்று எதிர் முரண்பாடுகள் கொண்ட 2 பிரிவுகள் இருக்கின்றன. இந்த இரண்டும் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டால் தீப்பிடித்தக்கொள்ளும். ஆனால் அந்த தீயை வெளிச்சமாகவே அல்லது வேறு தேவைகளுக்கோ பயன்படுத்த முடியாது.அனால் இந்த இரண்டையும் ஒரு மின் விளக்கில் இணைத்தால் நாங்கள் வெளிச்சத்தை பெறமுடியும்.அல்லது வேறு மின் சாதனத்தில் இணைத்தால் அந்த சாதனத்தை இயக்க முடியும்.அதே போலத்தான் ஒரு விடுதலைப் போராட்ட சூழலிலே ; ஒரு புரட்சிகர காலாச்சாரத்தை முன் வைப்பதன் மூலம் தான் ஒரு விடுதலை அமைப்பு அக-புற முரண்பாடுகளை சரியாகக் கையாண்டு தனது இலக்கை அடைய முடியும்;. புற முரண்பாடும் அக முரண்பாகளும் ஒரேநேரத்தில் ஒரே கொதிநிலையோடு கூர்மையாக இருந்தால் எதிரியை வெற்றிகொள்ள முடியாது.

இதில் அனைத்து இயக்கங்களும் தங்களது கௌ;ளவுக்கு ஏற்ப இந்த புதிய போர் கலாச்சாரத்தை நடைமுறைப்படுத்த முயன்றாலும் இதில் ஒரளவுக்கு வெற்றியடைந்தது விடுதலைப்புலிகள் மட்டுமே.
சமூகத்தின் சரி அரைவாசிப் பேராக இருக்கும் பெண்களை அவர்களுக்கு காலா காலமாக இடப்பட்ட சமூகத் தழைகளில் இருந்து விடுவிக்காமல் இனவிடுதலை சாத்தியமில்லை என்பதை உணர்ந்த அவர்கள் அதை நடைமுறையில் செய்து காட்டினார்கள்.பெண் என்பவள் ஆணின் மூலதனம் (சீதணம் வழங்குபவள்) அவனது பாலியல் அடிமை,குழந்தை பெறும் இயந்திரம் என்ற மரபு வழி சிந்தனையை மாற்றி பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துகாட்டியவர்கள் அவர்கள்.விடுதலைப்புலிகளால் கொண்டு வரப்பட்ட மணக் கொடை தடைச் சட்டம் இதில் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும்.
சாதி மறுப்புத் திருமணம்…
மக்களுக்காக மரணித்தவர்களை நினைவு கூர்தல்…
தமிழ் தேசிய ஊடக கருத்தியல்….
இளையேரின் ஆளுமை,தலைமைத்துவ பண்பு கூட்டுச் செயற்பாடு என்பவற்றை ஊக்குவிக்கின்ற கல்விமுறையை நடைமுறைப்படுத்தல்.
கிராமிய மற்றும் பாராம்பரய கலை வடிவங்களை பாதுகாத்தல்….
முதியோரை பாதுகாத்தல்….
இயற்கையை சுற்றுப்புற சூழலை பாதுகாத்தல்…
மொழியை பாதுகாத்தல் என்று விடுதலைப்புலிகளின் போர் கலாச்சாரத்தில் அடங்கியிருந்த எண்ணற்ற நல்ல விடையங்களை பட்டியலிட்டுக்கொண்டு செல்லலாம்.
பார்வையற்ற ஒருவன் யானையின் வாலை பிடித்துப்பார்த்துவிட்டு யானை என்றால் அதனுடைய வாலின் அளவில் தான் இருக்கும் என்று சொல்வதைப் போன்ற புலி எதிர்ப்பு அரச ஒத்தோடிகளின் ‘புலிகள் பாசிஸ்டுகள், அவர்களது போர்; கலாச்சாரம் வன்முறை கலாச்சாரம் ‘ என்ற ஒற்றை விமர்சனத்தக்கு அப்பால் யதார்தத்தில் ஒரு புரட்சி கலாச்சாரம் அங்கே நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆனால் இன்றைக்கு முள்ளிவாய்க்காலின் பின்னர் இதற்கு முற்றிலும் எதிரான கலாச்சார யுத்தம் ஒன்று களத்திலும் புலத்திலும் எதிரியால் திட்டமிட்டு கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது.

இன்று தமிழர் தாயகப்பகுதியிலே சர்வ சாதாரணமாக நடந்துவரும் போதைப் பொருள் வியாபாரம் இந்த கலாச்சார யுத்தத்தின் ஒரு அங்கமாகும் .அதுவும் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் இந்தப் போதைப்பொருள் வியாபாரம் இளையோரின் ஆளுமை,தலைமைத்துவப் பண்பு மற்றும் கூட்டுச் செயற்பாடு என்பற்றை அழிக்கும் நோக்கத்தை கொண்டது.

அடுத்து தாயகத்தில் இன்றைக்கு என்றுமில்லாத அளவுக்கு அதிகரித்திருக்கும் முறைகேடான பாலியல் உறவுகள் சிறுமிகள் கர்ப்பமாதல் மணமுறிவுகள் என்பனவும் இந்த கலாச்சரா யுத்தத்தின் மற்றொரு பகுதியாகும்.இது குடும்ப உறவுகளை சிதைத்;து ஆரோக்கியமற்ற சிரழிவு கலாச்சாரத்தை பின்பற்றும் ஒரு சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது.

சிங்கள இராணுவத்தினரைக்கொண்டு சிறுமிகளையும் பெண்களையும் போதைக்கும் பாலியல் இச்சைக்கும் அடிமையாக்கி கர்ப்பமாக்கிவிட்டு உங்கள் உடலில் சிங்கள இரத்தம் கலந்துவிட்டது என்று செல்லுவது,அல்லது தமிழ் பெண்களை அவர்களது இன அடையாளத்தை அழிக்கும் நோக்கத்துடன் திருமணம் செய்வது என்பவையும் இந்தக் கலாச்சார யுத்தத்தின் மிக முக்கியமான பகுதியாகும்.

உளவுத்துறையினரையும் ஒத்தோடிகளையும் வைத்து சாதிய பெருமைகளை பேசியும் சாதிய ஒடுக்குமுறையை அதிகார பலத்துடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் திணித்தும் சாதிய முரண்பாடுகளை தூண்டிவிடுவது.வன்முறைக்குழுக்களை வளர்த்துவிடுவது குழு மோதல்களை உருவாக்குவது.ஊர் சண்டைகளை தோற்றுவிப்பது என்பன இந்த கலாச்சார யுத்தத்தின் மற்றொரு அங்கமாகும்;.

இவற்றை விட பெண் போராளிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அவர்களுக்கு தொடர்ச்சியான அச்சுறுத்தலை கொடுத்து அவர்கள் ஒழுக்கக் கேடானவர்கள் சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட வேண்டியவர்கள் என்ற கருத்தை உருவாக்கி அதை திட்டமிட்டு மக்கள் மத்தியிலே பரப்புவது.இதன் மூலம் பெண் என்பவள் ஒரு போராளியாக இருக்க முடியாது இருக்கவும் கூடாது என்ற செய்தியை மக்களுக்கு செல்வதும் இந்த கலாச்சார யுத்த நிகழ்சி நிரலுக்குள் அடங்கும் ஒரு செயற்திட்டமாகும்;

தாயகத்திலே எதிரியால் இந்த முனைகளிலே நடத்தப்படும் இந்த கலாச்சார யுத்தம் புலத்திலே இதே செயற்திட்டங்களின் அச்சொட்டான பிரதியாக அல்லாமல் வேறு வடிவத்தில் நடத்தப்படுகிறது.

புலம் என்பது எதிரியின் கட்டுப்பாட்டு பிரதேசம் அல்ல. இங்கே அவனால் புலம் பெயர்ந்த சமூகத்தின் மத்தியில் போதைப் போருள் பாவனை,பாலியல் சிரழிவு நடவடிக்கைகள் கட்டாய திருமணம் போன்ற எதையும் நேரடியாக செய்ய முடியாது.அந்த வடிவத்திலும் இங்கு செய்ய முடியாது.

புலத்திலே இருக்கக் கூடிய மக்களுக்கும் களத்திலே இருக்கக் கூடிய மக்களுக்குமான முரண்பாடுகள் வேறுபட்ட தன்மையை கொண்டவை.புலத்தில் இருக்கக் கூடிய மக்களுக்கு வேற்றுமொழி வேற்றுக் கலாச்சார சூழலிலே ஏற்படுகின்ற அந்;நியமாதல் ஒரு பெரிய முரண்பாடாகும்.அவர்கள் இந்த அந்தியமாதலில் இருந்து விடுபடுவதற்கு தமது தாயகத்திலே போராடும் அமைப்பால் முன்வைக்கப்படும் புரட்சிக் கலாச்சாரத்தால் அதிகளவுக்கு ஈர்க்கப்படுவார்கள்.இந்த ஈர்ப்புத்தான் அவர்களை போராட்டத்துக்கு பங்களிப்பு செய்ய வைக்கும். போராட்ட நிகழ்வுகளில் பங்குபற்றத் தூண்டும்.

எனவே பின் போர் சூழலில் புலத்தில் எதிரியின் முழு வேலைத்திட்டமும், புரட்சிக் கலாச்சாரத்தை முறியடிப்பதை நோக்கமாக கொண்டிருக்கும்.
இதன் முதல் படி புலம்பெயர்ந்த மக்களை நெகிழ்வுத்தனையுடன் கூடிய வரையறைக்குள் நாட்டுக்குள் வர அனுமதிப்பது,நாட்டில் திருவிழாக்கள் கழியாட்டங்கள் கொண்டாட்டங்களை பிரமாண்டமாக நடத்த அனுமதிப்பது,
புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து வருபவர்கள் இந்த விழாக்களை மட்டுமல்லாமல் கடல் மலை ஆறு என்று போர் நடந்த காலத்தில் தமிழ் மக்கள் செல்வதற்கும் படம் எடுப்பதற்கும் அனுமதிக்கப்படாத இடங்களுக்கு செல்லவும் விதம்விதமா படம் எடுக்கவும் அனுமதிக்கப்படும்,
அவர்கள் மீண்டும் புலத்துக்கு திரும்பியதும் தாங்கள் அங்கு விதம் விதமாக எடுத்த கண்கவர் படங்களை எல்லாம் தங்களது சமூகவலைத் தளங்களிவே பதிவேற்றி வேண்டியவர்களுக்கு பகிர்ந்து மகிழ்வார்கள்.இதை பார்த்ததும் மற்றவர்களுக்கும் அங்கு சென்று திரும்ப வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றும்.

இதன் அடுத்த கட்டமாக நாட்டுக்கு வரும் யாராவது ஒரு போராட்ட செயற்பாட்டாளர் அல்லது ஆதரவாளர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்படுவார்.இந்தச் செய்தி அதிக முக்கியத்துவம் கொடுத்து பரப்பப்படும்.

அதேநேரம் இங்கே புலத்திலே சில ஊடகங்களையும் பத்தி எழுத்தாளர்களையும் விலைக்கு வாங்கி தியாகி துரோகி வரலாறுகள் எழுதப்படும் பேராட்டத்துக்கு வேலைசெய்தவர்கள் புலம் பெயர்ந்து வந்த போராளிகள் பெயர் குறிப்பிடப்பட்டு இனங்காட்டப்படுவார்கள்.விடுதலை இயக்க பொறுப்பாளர்கள் தளபதிகளுடைய மின்னஞ்சல் உடைக்கப்பட்டு அவர்களுடன் தொடர்பு கொண்டவர்களுடைய விபரங்கள் பகிரங்கப்படுத்தப்படும்.

இந்த இனங்காட்டல்கள்; பகிரங்கப்படுத்தல்கள் அதில் சம்பந்தப்பட்டவர்களை அச்சுறுத்துவதற்காக மட்டும் நடப்பதில்லை.’நீங்கள் போராட்டத்துக்கு உதவிசெய்தால் அல்லது வேலை செய்தால் கண்டிப்பாக எங்களுக்கு தெரியவரும் என்றாவது ஒரு நாள் நீங்கள் இனங்காட்டப்படுவீர்கள்’ என்ற செய்தியை மக்களுக்கு சொல்வதாகும்.

இந்த இனங்காட்டல்கள்; பகிரங்கப்படுத்தல்களை உள்வாங்கிக் கொள்ளும் மக்கள் ‘இவர்கள் துரோகிகள் அவர்கள் தியாகிகள்’ என்று முடிவெடுத்துக்கொண்டு போராட்ட செயற்பாடுகளில் அதி தீவிரமாக பங்கெடுக்கப்போவதோ அல்லது பங்களிப்பு செய்யப் போவதே இல்லை.மாறாக ‘ஐயையோ நாங்கள் நாட்டுக்கு போய் வரவேண்டும் எங்கள் வீட்டை பார்க்க வேண்டும் காணியை பார்க்க வேண்டும்.நல்லூர் சந்நிதி வல்லிபுரக்கோவில் வற்றப்பளை மாமாங்கேஸ்வரர் கோணேஸ்வரர் கோவில் திருவிழாக்களுக்கு செல்ல வேண்டும். இயக்கதோடு தொடர்பு வைத்தால் போகமுடியாது. ஆளை விட்டால் போதும்உங்களுடைய சண்டைகளை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் ‘ என்று ஓதுங்கிப் போய்விவார்கள்.

எதிரியின் தேவை என்பது இது தான்.புலத்திலே அவன் நடத்தும் கலாச்சார யுத்தத்தின் முக்கியமான அம்சமும் இதுதான்.

(தொடரும்)

குறிப்பு  இந்த தொடரை  நான் புதினப்பலகை இணையத்துக் காகவே  எழுதுகிறேன்

இதை மறு பிரசுரம் செய்பவர்கள்  புதினப்பலகைக்கு நன்றி என்று குறிப்பிடவும்

 

இரண்டாம் முள்ளிவாய்க்கால் 2


ஒரு விடுதலை இயக்கம் சுலோக அரசியல் நடத்தும் வாக்குச் சீட்டு அரசியல் கட்சியை போன்றதல்ல.அதன் உறுப்பினர்களான போராளிகள் தேர்தல் காலங்களில் கிளர்ந்தெழுந்து வாழ்க வீழ்க கோசம் போட்டு வாக்குச் சேகரிக்கும் தொண்டர்களல்ல.அவர்கள் தாங்கள் கொண்ட இலட்சியத்துக்காக தொடர்ச்சியாக தங்களை ஒறுத்து தங்களை வருத்தி உயிரைக்கொடுத்து உதிரத்தை கொடுத்து உடல் அவயங்களை கொடுத்து வரலாற்றை படைத்தவர்கள்.நாங்கள் பணம் திரட்டித்தருகிறோம் நீங்கள் போராடுங்கள் என்று சொல்வதற்கு அவர்கள் ஒன்றும் கூலிப்படைகள் அல்ல.’

00000
போராளிகளின் துயரங்களை புரிந்துகொள்வது பற்றி…..

ஒரு விடுதலைப் போராட்டம் ஒரு மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் போது விடுதலைக்கு போராடிய இனம் அல்லது சமூகம் சந்திக்கின்ற மிகப் பெரிய ஆபத்து மக்களையும் போராளிகளையும் பிரிப்பதற்கு அனைத்து தளங்களிலும்; எதிரி மேற்கொள்ளும் வேலைத்திட்டங்களாகும்.

இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டியது எந்த மக்களுக்காக அந்தப் போராளிகள் பேராடினார்களோ அந்த மக்களைக் கொண்டே அவர்களை வெறுக்கவைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளைப்பற்றியதாகும்.

எந்த மக்கள் அவர்களை வீரர்கள் இனத்தின் சமூகத்தின் விடிவெள்ளிகள் என்று போற்றிக் கொண்டாடினார்களோ அதே மக்களைக் கொண்டே அவர்களை துரோகிகள் கொலைகாரர்கள் பயங்கரவாதிகள் என்று வசைபாடி வெறுக்கசெய்வதற்கு மேற்கொள்ளப்படும் சூழ்சித்திட்டங்களை பற்றியதாகும்

ஓரு போராட்டத்தில் போராளிகளுக்கும் மக்களுக்குமான உறவென்பது ஒரு பெரிய குளத்தில் இருக்கும் தண்ணீருக்கும் அதில் வாழும் மீன்களுக்குமான உறவைப் போன்றது.

மீன்களை  ஒழிப்பதற்கு தண்ணீரை விட்டு அவற்றை  பிரிக்க வேண்டும்.தூண்டில் போட்டும் வலை வீசியும் மீன்களை பிடித்து தரையில் போடுவதன்தன் மூலம் தன்ணீரைவிட்டு அவற்றை பிரித்து கொல்லலாம்.ஆனால் ஒரு மாபெரும் குளத்தில் உள்ள அனைத்து மீன்களையும் இந்த முறையில் பிடிக்க முடியாது.பெரிய மீன்களை பிடித்தாலும் அந்த குளத்தில் இருக்கும் சிறிய மீன்களும் மீன் குஞ்சுகளும் வலையிலும் தூண்டிலும் அகப்படாமல் தப்பித்துக் கொள்ளும்; பின்னர் அவை வளர்ந்து பெரிய மீன்களாகிவிடும். இது ஒரு தொடர்கதையாக நடந்து கொண்டே இருக்கும். அதே போல மீன்களை ஒழிப்பதற்கு ஒரு மாபெரும் குளத்தை ஒரேயடியாக வற்ற வைக்க முடியாது. ஓரு குறிப்பிட்ட மட்டத்துக்கு இறைக்க இறைக்க தண்ணீர் ஊறிக்கெண்டே இருக்கும்.தண்ணிர் ஊற ஊற மீன்களும் மீன் குஞ்சுகளும் அதில் வாழ்ந்து கொண்டே இருக்கும். ஆனால் அந்த குளத்து நீரில் தேவையான அளவு நஞ்சை கலந்துவிட்டால் பெரிய மீன் சின்ன மீன் குஞ்சு குருமன் என்று அனைத்தும் அழிந்துவிடும்.

அதே போலத்தான் ஓரு விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்படுகின்ற போது மக்களையும் போராளிகளையும் பிரிப்பதற்கும் உயிர் தப்பிய போராளிகள் மக்கள் மத்தியில் இருந்து புதிய போராளிகளை உருவாக்கமல் இருப்பதற்கும் தன்னால் ஆக்கிரமிக்கப்பட்ட பேரடிய தரப்பின் தாயகத்தில் நேரடியாக தனது படையினர் மூலமாக மக்களை அச்சுறுத்தியும் அதற்கு வெளியே உள்ள பின்தளம் மற்றும் செல்வாக்கு பிரதேசங்களில் வாழும் மக்களுடைய கருத்தியல் தளத்திலே எதிரி கனகச்சிதமாக நச்சுக்கருத்தக்களை விதைப்பான். இந்தக் கருத்துக்கள் பேராளிகளை கொச்சைப்படுத்தி சிறுமைப்படுத்தி மக்களுக்கும் அவர்களுக்கும் இடையிலான பிணைப்பை உடைக்கும் வேலைத் திட்டத்தை கொண்டதாக இருக்கும்.

இந்தத் திட்டம் இரண்டு தளங்களில் நடைபெறும்.

முதலாவது ஏற்கனவே போராட்டத்தின் எதிர்தரப்பு என்று தங்களை அடையாளப்படுத்திக்கொண்ட ‘அரச ஒத்தோடிகள்’மூலமாக பேராட்ட வழிமுறை தவறானது போராட்டத்தை வழிநடத்திய தலைமை தவறானது, போராளிகள் தவறானவர்கள் அவரை கொன்றார்கள், இவரை கொன்றார்கள் ,அவர் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்கும் இவர் இருந்திருந்தால் அப்படி நடந்திருக்கும் சிறுவர்களை படையில் இணைந்து பலி கொடுத்துவிட்டார்கள் மக்களுடைய பேரவலத்தும் இழப்புகளுக்கும் எல்லாம் இவர்கள் தான் காரணம்.இவர்கள் பாசிஸ்டுகள் மக்கள் விரோதிகள் அரசாங்கமும் அரசபடைகளும் நல்லவர்கள் வல்லவர்கள். மக்களுக்கு தீங்கே இழைக்காதவர்கள் ;’ என்ற மாதிரி இவர்களது பிரச்சாரம் நடத்தப்படும். இது விடுதலைப் போராட்டம் நடந்த காலத்தில் நடந்த ஒன்று தான் என்றாலும் பின் போர் சூழலில் இது தீவிரப்படுத்தப்படும்

இரண்டாவது முகமூடி அணிந்த புதிய ஒத்தோடிகள் மூலமாக இந்த கருத்தியல் நச்சுக்கலப்பு நடக்கும்.

இந்த புதிய ஒத்தோடிகள் போராட்டத்தை குறை கொல்லமாட்டார்கள். போராட்ட அமைப்பை குறை சொல்ல மாட்டார்கள். போராட்டத்துக்கு தலைமை தாங்கிய தலைமையை குறை சொல்ல மாட்டார்கள்.ஆனால் அரச கட்டப்பாட்டுக்குள் இருந்து தப்பி வந்த இறுதிப் போரில் உயிர் தப்பிய போராளிகள் எல்லோரும் துரோகிகள் தவறானவர்கள் இவர்கள் போர் களத்திலேயே மடிந்திருக்க வேண்டும் என்று பேராளிகளை இலக்கு வைத்து இவர்கள் சேறடிப்பு பரப்புரை நடத்துவர்கள் .இவர்களது இந்தப் பரப்புரையை அறிவு பூர்வமாக அனுகி கட்டுடைத்தால் அது போராட்டத்தையும் போராடிய அமைப்பையும்; அதன் தலைமையை கொச்சைப் படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் பரப்புரை என்பதையும் மக்களுக்கு போராளிகள் என்றால் நேர்மையற்றவர்கள் தாங்கள் நினைத்ததை போல இவர்கள் விடுதலைக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்கள் அல்ல இவர்கள் எல்லாம் சுயநலவாதிகள் திருடர்கள் என்ற எண்ணத்தை உருவாக்கி அவர்களை சலிப்படைய வைத்து போராளிகள் என்ற சொல்லே வெறுப்புக்குரிய அவமானத்துக்குரிய சொல் என்று அவர்கள் நினைக்கும் படி செய்யவேண்டும் என்பதையும் நோக்கமாகக் கொண்டது என்பதை புரிந்து கொள்ளலாம்.

போராளிகள் அவதார புருசர்களாக வானத்தில் இருந்து குதித்து வருவதில்லை.அவர்கள் மக்களில் இருந்துதான்உருவாகிறார்கள். மக்களுக்கு எதிரியால் இழைக்கப்படும் அநீதிகள்  அல்லது ஒடுக்குமுறைகள் தான் சமானிய மனிதர்களை போராடத் தூண்டுகிறது.ஒரு விடுதலை அமைப்பும் அதன் தலைமையும் தான் அவர்களை போராளிகளாக ஒருங்கிணைத்து உருவாக்குகிறது.

பிள்ளைகளுடைய உருவாக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் பெற்றோர் எப்படிப் பொறுப்பானவர்களோ அப்படியே போராளிகளது உருவாக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் ஆளுமைக்கும் அவர்களை உருவாக்கிய அமைப்பும் அதன் தலைமையும் தான் பொறுப்பாகும்;.

இந்த இடத்திலே போர்களத்தில் உயிர் தப்பிய பேராளிகள் எல்லாம் தவறானவர்கள் என்றால் அரச கட்டுப்பாட்டு பகுதிக்கூடாக புலம் பெயர்ந்த போராளிகள் எல்லாம் துரோகிகள் என்றால் அதாவது போராளிகளில் பெரும்பாலானவர்கள் துரோகிகள் என்றால் அவர்கள் போர்களத்தில் மடிந்திருக்க வேண்டுமல்லவா? ஏன் உயிர்தப்பி வந்தார்கள் என்றால் அவர்களை உருவாக்கிய விடுதலை அமைப்பும் அதன் தலைமையும் அல்லவா தவறென்றாகவிடும். இந்தக் கருத்தை மறைமுகமாக மக்களின் மனங்களிலே விதைப்பது தான் இந்த புதிய ஒத்தோடிகளின் நோக்கமாகும்;

இதைத்தான் பழைய ஒத்தோடிகள் ‘பேராளிகளின் தலைவர் ஒரு பாசிஸட்.அவரால் உருவாக்கப்பட்ட அமைப்பு ஒரு பாசிச அமைப்பு அதன் உறுப்பினர்கள் எல்லோரும் பாசிட்டுகள், அவர்கள் விடுதலைப் போராளிகள் அல்ல, அவர்கள் மக்கள் விரோதிகள்’ என்று திரும்பத் திரும்ப செல்லி வருகிறார்கள்.

இந்த விடயத்தை உணர்வுபூர்வமாக அல்லாமல் அறிவு பூர்வமாக சிந்தித்து ஒப்பிட்டு பார்த்தால் இந்த இரண்டு தரப்பினருக்கும் இடையில் உள்ள ஒற்றுமை புரியும்.

பழைய ஒத்தோடிகள் புலம் பெயர்ந்த நாடுகளின் காவல்துறைக்கு கடந்த காலங்களில் செய்த முறைப்பாடுகளையும் இப்போது இந்த புதிய ஒத்தோடிகள் செய்த- செய்து வரும் முறைபாடுகளையும் ஒப்பிட்டுப்பார்த்தால் இதற்கு பின்னால் இருக்கும் நோக்கத்தில் ஆள அகலம் நன்கு புரியும்.

இதே நிலை அதாவது மக்களைவிட்டு போராளிகளை பிரிக்கும் தந்திரோபாயம் எமது விடுதலைப் போராட்டத்தில் தான் நடந்தது, நடந்து வருகிறது என்று நினைத்துவிடக் கூடாது.இந்தியாவின் நக்சல் பாரி போராட்டம் பிலிப்பைன்ஸ் செம்படைகளின் போரட்டம் பெருவில் நடந்த இடதுசாரி புரட்சிகர அமைப்பின் ஒளிரும் பாதை போராட்டம் கிழக்கு தீமோர் விடுதலைப் போராட்டம் தென்சூடான் விடுதலைப் போராட்டம் பலஸ்தீன விடுதலைப் போராட்டம் என்று உலகின் பல் வேறு பகுதிகளிலும் இது காலங்காலமாக நடந்திருக்கிறது. இன்றும் நடந்துவருகிறது.

உதாரணமாக 1967 லே பலஸ்தீன விடுதலைப் போரட்டத்தில் காசா மற்றும் மேற்கு கரையில் இருந்த பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தளப்பிரதேசங்களை இஸ்ரேலும் லெபனானில் இருந்த பின்தளப் பிரதேசங்களை லெபனானும் கைப்பற்றி விட பலஸ்தீன விடுதலை இயக்கம் மிகப்பெரிய தோல்வியையும் பின்னடைவையும் சந்தித்தது.அதன் முக்கிய தளபதிகள் ஏராளமான பேராளிகள் எல்லாம் கொல்லப்பட எஞ்சியிருந்தோர் சிரியா ஈராக் மற்றும் மேற்குலகிற்கு புலம் பெயர்ந்தார்கள். அந்தக் காலகட்டத்தில் பலஸ்தீன விடுதலைப் போராட்டம் பாலஸ்த்தீன தேசியம் பலஸ்தீன மக்களின் விடுதலை என்ற இலக்கில் தான் பயணித்துக்கொண்டிருந்தது.மதம் அந்த விடுதலைப் போராட்டத்தில் குறுக்கிடவில்லை.பிறப்பால் கிறிஸ்தவரும் இடதுசாரி தலைவருமான ஜேர்ஜ் ஹபாஷ் (பலஸ்தீன மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்) பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் முக்கிய தலைவராக இருந்தார்.பலஸ்தீன விடுதலை இயக்கம் அரபாத்தின் அல்பத்தா பலஸ்தீன மக்கள் விடுதலை முன்னணி மற்றும் பலஸ்தீன ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி  என்று பல்வேறு அமைப்புகளின் கூட்டமைப்பாக இருந்தது.

இந்தத் தோல்விக்கு பின்னர் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் புதிய ஒத்தோடிகளை களம் இறக்கி போராளிகள் மீதும் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய தளபதிகள் மீதும், தலைவர்கள் மீதும் மார்க்க (இஸ்லாம்) விரோதிகள் இஸ்லாமிய ஒழுக்க விதிகளை பேராளிகள் கடைப்பிடிக்கவில்லை என்றெல்லாம் வகைதெகையின்றி அவதூறு மற்றும் சேறடிப்பு பிரச்சாரங்கள் மேற்கொண்ணடது..அதுவும் ‘உண்மையான பலஸ்தீன விடுதலைக்காக’ என்று கூறிக்கொண்டு தான் இந்தப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.விளைவு பல உண்மையான போராளிகள் இஸ்லாமிய விரோதிகள் துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்பட்டார்கள்.பலர் கொலை செய்யப்பட்டார்கள். பலஸ்தீன விடுதலைக்காக ஒன்றுதிரண்டு நின்ற மக்கள் சலிப்படைந்து சிதைந்து போனார்கள்.அல்லது ஒதுங்கிப் போனார்கள்..இஸ்ரேல் தனது திட்டப்படி பலஸ்த்தீனியர்களுடைய தாயக நிலங்களை ஆக்கிரமித்து யூதக் குடியேற்றங்களை உருவாக்கியது.பலஸ்தீன விடுதலைப் போராட்டம் இஸ்லாமிய மத குடுவைக்குள் அடைக்கப்பட்டு அந்த மதத்தின் சன்னி சியா பிரிவு முரண்பாடுகளுக்குள் சிக்கி இன்று வரை மக்களின் உண்மையான விடுதலை என்ற இலக்கை அடையாமல் திக்கித் திணறிக்கொண்டிருக்கிறது.

இது நாங்கள் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டிய ஒரு பாடமாகும்.

இந்த ஆபத்தான மிக மிக நெருக்கடியான சூழ் நிலையை போராளிகள் எப்படி எதிர்கொள்வது மற்றும் அதை எப்படி கையாள்வது என்பது மிகவும் சிக்கலான ஒரு விடயமாகும்.

ஏனென்றால் பழைய ஒத்தோடிகள் வெளிப்படையானவர்கள்.போராட்ட அமைப்பு ,அதன் தலைமை மற்றும் போராளிகள் அவர்களின் போராட்ட வடிவங்கள் தங்களது அரச சார்பு நிலைப்பாடு இவற்றை சொல்வதற்கு அவர்கள் முகமூடி அணிந்து வருவதில்லை.தங்களது பேச்சு எழுத்து சந்திப்பு என்று எல்லா தளங்களிலும் தாங்கள் யார் என்பதை அவர்கள் நேர்மையாக வெளிக்காட்டியே வந்திருக்கிறார்கள்.அவர்களை ஆதரிப்பவர்களின் தொகை என்பது சிறியது, மட்டுப்படுத்தப்பட்டது.

ஆனால் இந்தப் புதிய ஒத்தோடிகள் மறைமுகமானவர்கள்.மக்கள் முன்னால் வந்து திட்டமிட்டு நடிப்பவர்கள்.பேராட்டம் சரியானது தலைமை சரியானது பேராளிகள் தான் சரியில்லை என்று இவர்கள் மக்கள் மத்தியில் செல்லும் போது மக்கள் குழம்பிப் போவார்கள்.ஏற்கனவே போராட்டத்தை வைத்து தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட போர் பிரபுக்களான இவர்கள் மக்களுக்கு அறிமுகமானவர்கள்.இவர்கள் சொல்வதை உணர்வு நிலையில் இருந்து சிந்திக்கும் மக்கள் உடனே நம்பிவிடுவார்கள். ஆனால் மக்களின் இந்த உணர்வு நிலை அறிவு பூர்வமாக சிந்திக்கும் நிலையாக மாறும் போது இவர்களின் மூக மூடிகள் கழன்று இவர்கள் அம்பலப்பட்டு போவார்கள்.

அதனால் உண்மையான விடுதலையை நேசிக்கும் சக்திகள் குறிப்பாக போராளிகள் இவர்களை கணக்கிலேயே எடுக்காமல் கடந்து செல்லவேண்டும். இவர்கள் என்னதான் அவதூறாக பேசிலும் எழுதினாலும் பொய்யும் புரட்டையும் சொல்லியும் எழுதியும் போராளிகளை களங்கப்படுத்தினாலும் அவர்கள் மௌனமாக அவற்றை கணக்கில் எடுக்காமல் கடந்து செல்ல வேண்டும். போராளிகளுடைய மௌனமும் அவர்கள் இவர்களை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்ற செய்தியும் தான் இவர்களுடைய தோல்வியாகும்.மாறாக இவர்களுடைய பரப்புரைக்கு உடனே போராளிகள் எதிர்பரப்புரை செய்ய முற்பாட்டால் அல்லது அவர்களை எச்சரிக்க அல்லது அவர்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்டால் அதுவே அவர்களுக்கு கிடைத்த வெற்றியாகவும் போராளிகளுக்கு கிடைத்த தோல்வியாகவும் இருக்கும்.

இந்த புதிய ஒத்தோடிகளின்  முழு நோக்கமுமே பேராளிகளை ஆத்திரப்படவைத்து நிதானமிழக்க வைத்து வன்முறையில் ஈடுபடவைப்பதாகும்.

பின்னர் மக்கள் மத்தியில் இதை காரணம் காட்டி பேராட்டத்துக்கான கட்டமைப்புக்களை இவர்கள் சிதைக்கிறார்கள்.போராட்டுத்துக்கான வளங்களை பாழ்படுத்துகிறார்கள் என்று பரப்புரை செய்து தங்களை நியாயவான்களாகவும் போராளிகளை தூரோகிகளாகவும் காட்டி மக்களிடம் இருந்து அவர்களை பிரித்து எதிரி அவர்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதாமாக செய்து முடிப்பார்கள்.

மறுபுறத்திலே உணர்சிவசப்பட்ட நிலையில் போராளிகளால் மேற்கொள்ளப்படும் ஒரு சிறு வன்முறையை கூட இவர்கள் கொலை முயற்சி ஆட்கடத்தல் பணப்பறிப்பு முயற்சி என்று புலம் பெயர் நாட்டு அரசாங்கங்களுக்கு முறைப்பாடு செய்து அதுவும் தங்களை  புலம் பெயர் நாட்டு ஜனநாயக செயற்பாட்டாளர்களாகவும் நாட்டிலிருந்து வந்த இயக்கப் போராளிகளை வன்முறையாளர்களாகவும் ஜனநாயக விரோதிகளாகவும் காட்டி ஏற்கனவே போராட்டத்தின் மீதும் போராட்ட அமைப்பின் மீதும் சுமத்தப்பட்டுள்ள பாய்கரவாத முத்திரையை இன்னும் வலுப்படுத்தம் எதிரியின் திட்டத்தை நிறைவேற்றுவார்கள்.

இந்த இடத்திலே இதை படிப்பவர்களுக்கு இந்த புதிய ஒத்தோடிகள் சொல்வதைப் போல சிறீலங்கா அரசால் அனுப்பப்பட்ட போராளிகள் போராட்டத்தையும் போராட்டஅமைப்பையும் பயங்கரவாதிகளாக காட்ட ஏன் இவற்றை திட்டமிட்டு செய்யக் கூடாது என்று சந்தேகம் வரலாம்.

இந்த சந்தேகத்தை இரண்டு விதங்களில் தீர்க்கலாம்.

முதலாவது ஒரு போராளி என்பவன் தன்னுடைய மக்களுக்கு இளைக்கப்பட்ட அநீதிகளையும் கொடுமைகளையும் கண்டு மனம் கொதித்து அவற்றை நிறுத்தவதற்கு அதற்கு தீர்வுகாணப் புறப்பட்டவன்.அவனது நெருக்கடி நிறைந்த நீண்ட போராட்ட வாழ்க்கை அவனுக்கு எதிரியார் நண்பன் யார் என்பதை ஆளமாகவே அவனது மனதில் பதிய வைக்கும். தன்னுடைய சொந்த மக்களை தன் கண்முன்னாலேயே வகை தொகையின்றி கொன்று குவிக்கும் துடைத்தழிக்கும் எதிரியை நண்பனாக ஏற்றுக் கொள்ளவும் அவனுக்காக வேலை செய்யவும் உண்மையான போராளியின் மனம் ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது.

எந்த எதிரிக்கு எதிராக ஒரு போராளி தீரத்துடன் போரிட்டானோ அந்த எதிரியிடம் மண்டியிட்டு கைதியாகவும் நிலை ஒரு போராளிக்கு ஏற்பட்டால் அதைவிட உச்சபட்ச துன்பமும் கொடுமையும் அவனுக்கு வேறு இருக்கமுடியாது.

எதிரியின் அடிகளும் உதைகளும் வதைகளும் இன்னும் அவனை பக்குவப்படுத்தி இன்னும் உத்வேகத்துடன் போராடத்தூண்டுமே தவிர கோழையாக எதிரியின் இரண்டாம் படையாக அவனை மாற்றாது.ஒரு சிலர் இதற்கு விதிவிலக்காக இருக்கலாம்.அதுவும் மிக சொற்பமானவர்களாகத்தான் இருப்பார்கள்.

இன்றைக்கு புலம் பெயர்ந்து வந்திருக்கக் கூடிய போராளிகள் தானுண்டு தன்குடும்பம் உண்டு என்று இருக்காது முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து மீண்டெழுவதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பதற்கும் செயற்படுவதற்கும் இது தான் அடிப்படையாகும்.

அடுத்து உண்மையில் சிறீலங்கா அரசால் அனுப்பப்பட்ட ஒருவன் அல்லது ஒரு குழுவினர் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக தொடர்ந்து வைத்திருக்க வன்முறையில் ஈடுபட்டால் அவர்களை ‘தனிநபர்கள் தனிப்பட்ட வன்முறைக் குழுவினர்’ என்றுதானே காவல்துறையில் முறைப்பாடு செய்ய வேண்டும்.ஆனால் ஆயுதம் தூக்கிய போராளிகள் நாட்டில் இருந்து வந்தவர்கள் பணப்பறிப்பு ஆட்கடத்தல் கொலை முயற்சி என்பவற்றில் ஈடுபடுகிறார்கள் என்றல்வா அதுவும் சிறீலங்கா அரசுக்கு சாதகமான விதத்தில் அல்லவா முறைப்பாடுகள் செய்யப்படுகின்றன.
இதுவே இவர்கள் புதிய ஒத்தோடிகள் என்பதற்கு வலுவான ஆதாரம் அல்லவா?

(தொடரும்)

 

இரண்டாம் முள்ளிவாய்க்கால்


இந்தத் தொடர் எவரையும் எந்த அமைப்பையும் நியாயப்படுத்துவதற்கோ எவர்மீதும் எந்த அமைப்பின் மீதும் தனிப்பட்ட முறையில் குற்றச்சாட்டுவதற்கோ எழுதப்படுவதல்ல.
இது முள்ளிவாய்க்காலின் பின்னரான பின்போர் சூழலில் நடந்துவரும் பிழைப்பவாத அரசியலை கட்டுடைப்பதை நோக்கமாகக் கொண்டது.

இந்த தொடரை நான் நடுநிலை என்ற போலியான பொய்யான கருத்தியில் வெளிப்பாட்டு முறையில் நின்று எழுதவில்லை. நடுநிலை என்று ஒன்று இந்த உலகத்தில் இருக்க முடியாது என்று உறுதியாக நம்புவன் நான்.

ஓரு கருத்தின் கருத்தியல் பெறுமதியை தான் வாழும் சமூகத் தளத்தில் அதிலும் எப்போதும் ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படும் பரந்துபட்ட மக்கள் தளத்தில் இருந்து பார்க்கவேண்டும், அந்த சமூகத்தின்-மக்களின் குரலை அந்த கருத்து அந்த எழுத்து பிரதிபலிக்க வேண்டும் என்கின்ற சமூக பிரதிபலிப்பு முறையை பின்பற்றுபவன் நான்.

எனது இந்தத் தொடர் முழுவதையும் அந்த முறையிலேயே அதாவது பௌத்த சிங்கள பேரினவாத ஒடுக்குமுறைக்குள்ளான எமது மக்களின் தளத்தில் இருந்தே எழுதுகிறேன்.

இந்த தொடரை காய்தல் உவர்த்தல் இன்றி படிப்பவர்களை அறிதல் தெழிதல் வினையாற்றல் என்ற மூன்று செயற்பாட்டு தளத்துக்கு ஆது கொண்டு செல்லும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

ஈழத்தமிழர்களாகிய நாம் முதலில் வாழ்வதற்காக போராடுவேம்…
பின்னர் போராடுவதற்காக வாழ்வோம்….

கடந்த கால தவறுகளை திருத்துவதற்காக ஆக்கபூர்வமாக விமர்சிப்போம்..

எதிர்காலத்தில் தவறுகள் நிகழாமல் தடுப்பதற்காக உண்மையான சுயவிமர்சனத்தை முன்வைப்போம்.

நன்றி

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 1,337 other followers