RSS

பாலு மகேந்திராவின் படைப்புகள்… ஒரு பார்வை

14 பிப்

35 ஆண்டுகள் சினிமாவில் இயக்குநராகப் பணியாற்றிய பாலு மகேந்திரா இயக்கியுள்ள படங்களின் எண்ணிக்கை 22! தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் சேர்த்துதான் இந்த எண்ணிக்கை. அவர் ஒளிப்பதிவாளராக மட்டும் பணியாற்றிய படங்கள் தனி. பாலுமகேந்திராவின் படைப்புகள் பற்றிய ஒரு பார்வை இங்கே… 

கோகிலா

1977-ல் கறுப்பு வெள்ளையில் பாலு மகேந்திரா இயக்கிய முதல் படம் கோகிலா. பாலு மகேந்திராவுக்கு மிகப் பிடித்த கலைஞரான கமல்தான் ஹீரோ. ஷோபா நாயகியாக நடித்தார். இந்தப் படத்தில்தான் மோகனை அறிமுகப்படுத்தினார் பாலு. பல ஆண்டுகள் கோகிலா மோகனாக இருந்தவர், பின்னாளில் மைக் மோகன் என்று அறியப்பட்டார். கன்னடத்தில் வெளியான இந்தப் படம், கன்னடத்தில் மட்டுமல்ல, தமிழிலும் டப் செய்யப்படாமலேயே 100 நாட்களைக் கடந்து ஓடியது குறிப்பிடத்தக்கது.

அழியாத கோலங்கள்

தமிழ் சினிமாவின் காவியப் படங்களில் ஒன்றாகத் திகழும் அழியாத கோலங்கள்தான் பாலு மகேந்திராவின் முதல் தமிழ்ப் படம். இந்தப் படத்துக்கு சலீல் சவுத்ரி இசையமைத்திருந்தார். இந்தப் படத்துக்குப் பிறகு தன் அத்தனைப் படங்களுக்கும் இளையராஜாதான் இசை என்பதில் உறுதியாக இருந்தார் பாலு மகேந்திரா. சிறு பிராயத்திலிருந்து வாலிபத்துக்கு மாறும் மூன்றுபேரின் நினைவுகள்தான் இந்தப் படத்தின் கதை. அதுவரை பார்த்திராத ஒளிப்பதிவு, படமாக்கம் என அத்தனை பசுமையான படம். இன்றும் இந்தப் படத்தின் ‘நான் எண்ணும் பொழுது..’ பாடலைக் கேட்கும்போது மனசு முழுக்க பழைய நினைவுகள் தளும்புவதை உணரலாம்!

மூடுபனி

ஹிட்ச்காக்கின் சைக்கோ படத்தின் பாதிப்பு காரணமாக பாலுமகேந்திரா இயக்கிய முதல் த்ரில்லர் படம் மூடுபனி. இதில்தான் அவர் முதல் முறையாக இளையராஜாவுடன் கைகோர்த்தார். பிரதாப் போத்தன் – ஷோபாவின் அற்புத நடிப்பு இந்தப் படத்தை சிகரத்துக்கு கொண்டு போனது. இளையராஜாவின் அற்புதமான இசை படத்துக்கு இன்னொரு பலம். சென்னையில் 250 நாட்கள் ஓடிய படம் இது.

மூன்றாம் பிறை

கமல் – ஸ்ரீதேவியை உச்சத்துக்குக் கொண்டு போன படம் மூன்றாம் பிறை. பாலு மகேந்திராவின் மாஸ்டர் பீஸ் என்பார்கள் பலரும். இளையராஜாவின் இசை தமிழ் சினிமாவை வேறு தளத்துக்குக் கொண்டு சென்றது. கமலுக்கு சிறந்த நடிகருக்கான முதல் விருது கிடைத்த படம் இது. இரு தேசிய விருதுகள், மூன்று தமிழக அரசு விருதுகள் உள்பட 6 விருதுகள் இந்தப் படத்துக்குக் கிடைத்தன. படத்தில் இடம்பெற்ற பொன்மேனி உருகுதே.. பாடலின் இசையமைப்பைக் கேட்டு வியந்து போன இசை மேதை ஆர்டி பர்மன், ‘இப்படி ஒரு இசையை நான் கேட்டதில்லை.. அவர் பெரிய ஜீனியஸ்’ என்று வியந்து போனாராம்!

ஓளங்கள்

பாலு மகேந்திராவின் முதல் மலையாளப் படம் ஓளங்கள். அமோல் பாலேகர், பூர்ணிமா, அம்பிகா ஆகியோர் நடிக்க, பாலு மகேந்திரா ஒளிப்பதிவு செய்து இயக்கினார். இளையராஜா இசையில் ‘தும்பீ வா தும்பக் குளத்தில்… ‘ சாகா வரம் பெற்ற பாடலானது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என 5 மொழிகளுக்கும் போன ட்யூன் இந்தப் பாடலாகத்தான் இருக்கும்.

நிரீக்ஷனா

பாலு மகேந்திராவின் முதல் தெலுங்குப் படம் நிரீக்ஷனா. தெலுங்கின் எவர்கிரீன் க்ளாஸிக் படம் எனும் அளவுக்கு சூப்பர் ஹிட் படம். பானுச்சந்தர், அர்ச்சனா நடித்திருந்தனர். இளையராஜா இசையில் அத்தனைப் பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன.

ஊமக்குயில்

ஒய் ஜி மகேந்திரன், பூர்ணிமா (பாக்யராஜ்), நடித்து மலையாளத்தில் வெளியான இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

சத்மா

தமிழில் வெற்றி பெற்ற தனது மூன்றாம் பிறையைத்தான் சத்மா என்ற பெயரில் இந்தியில் 1983-ல் ரீமேக் செய்தார் பாலு மகேந்திரா. இளையராஜாவுக்கு இதுதான் முதல் இந்திப் படம். தமிழில் நடித்த கமல் – ஸ்ரீதே – சில்க் ஆகியோரையே முக்கியப் பாத்திரங்களுக்கு வைத்துக் கொண்டு, மற்ற பாத்திரங்களில் இந்தி நடிகர்களை நடிக்க வைத்தார். படம் இந்தியில் சரியாகப் போகவில்லை. ஆனால் பாலிவுட்டின் சிறந்த 50 படங்களுள் ஒன்றாக மதிக்கப்படுகிறது. இந்தப் படத்தில் இடம் பெற்ற ‘ஹே ஜிந்தகி கலே லாகாலே…’ இந்தியின் எவர்கிரீன் பாடல்களில் ஒன்று! 

நீங்கள் கேட்டவை (1984)

சத்மா வணிகரீதியாக தோல்வி ஒருபக்கம், பாலு மகேந்திராவுக்கு வெகுஜன ரசனைக்கேற்ப படம் எடுக்கத் தெரியவில்லை என்றொரு குற்றச்சாட்டு மறுபக்கம். ஒரு கோபத்தில் அவர் எடுத்ததுதான் நீங்கள் கேட்டவை. தியாகராஜன் ஹீரோ. சில்க் ஸ்மிதாவையே ஹீரோயினாக்கினார். ஆனாலும் மெயின் ஹீரோ இளையராஜாதான். காதல், மோதல், பழிவாங்கல், சூப்பர் பாடல்கள் என செம மசாலாவாகத் தந்தார் அந்தப் படத்தை. பெரிய வெற்றிப் படமாக அமைந்தது நீங்கள் கேட்டவை. ஆனால் விமர்சகர்கள் மீண்டும் பாலு மகேந்திராவிடமிருந்து இதை எதிர்ப்பார்க்கவில்லை என்றபோது, ‘ஏன்.. நீங்கள்தானே இப்படி வேண்டுமென கேட்டீர்கள்… பிறகு எதற்கு குறை சொல்கிறீர்கள்?’ என்றார் கோபத்துடன்.

உன் கண்ணில் நீர் வழிந்தால் (1985)

ரஜினி நடித்த சில படங்களுக்கு ஏற்கெனவே பாலு மகேந்திரா ஒளிப்பதிவு செய்திருந்தாலும், ஒரு இயக்குநராக அவர் ரஜினியுடன் கைகோர்த்தது உன் கண்ணில் நீர் வழிந்தால் படத்துக்குத்தான். இளையராஜா இசையில் கண்ணில் என்ன கார்காலம் பெரிய ஹிட். ஆனால் படம் படுதோல்வி

யாத்ரா (1985)

தெலுங்கில் வெற்றி பெற்ற நிரீக்ஷனாவை மலையாளத்தில் மம்முட்டி – ஷோபனாவை வைத்து யாத்ரா என்ற பெயரில் எடுத்தார் பாலு மகேந்திரா. இசை இளையராஜா. படமும் பாடல்களும் பெரும் வெற்றி பெற்றன. பாராட்டுகளும் குவிந்தன.

ரெட்டை வால் குருவி (1987)

மோகன் – அர்ச்சனா – ராதிகா நடித்த ரெண்டு பொண்டாட்டிக்காரன் கதை இந்தப் படம். விகே ராமசாமிக்கு கிட்டத்தட்ட ஹீரோவுக்கு சமமான ரோல் என்றாலும் மிகையில்லை. இளையராஜா இசையில் ராஜா ராஜ சோழன் நான்.. இன்றும் அத்தனை இளமையாக உணரலாம். பெரிய வெற்றிப் படம்.

வீடு (1988)

தமிழின் ஆகச் சிறந்த பத்துப் படங்களில் ஒன்று வீடு. அர்ச்சனா, பானுச்சந்தர் நடித்த படம்

சந்தியா ராகம் (1989)

நான் இயக்கியவற்றில் குறைந்த சமரசங்கள் கொண்ட படங்கள் இரண்டு. அவற்றில் சந்தியா ராகம் ஒன்று என முன்பு ஒரு முறை பாலு மகேந்திரா கூறியது நினைவிருக்கலாம். அர்ச்சனா, சொக்கலிங்க பாகவதர் நடித்த இந்தப் படத்துக்கு எல் வைத்தியநாதன் இசையமைத்திருந்தார். சிறந்த குடும்ப நலத்துக்கான தேசிய விருது இந்தப் படத்துக்குக் கிடைத்தது.

வண்ண வண்ணப் பூக்கள் (1992)

மூன்று ஆண்டுகள் இடைவெளி விட்டு, பாலு மகேந்திரா ஒரு புத்தம் புதிய மலர்ச் செண்டோடு வருவது போல இந்த வண்ண வண்ணப் பூக்களை வெளியிட்டார். பிரசாந்த், வினோதினி, மௌனிகா நடித்த இந்தப் படத்துக்கு சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருது கிடைத்தது. ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு தனி ட்யூனையே பின்னணி இசையாகப் போட்டு பிரமிக்க வைத்திருந்தார் இளையராஜா. வணிகரீதியாகவும் பெரிய வெற்றி கிடைத்தது இந்தப் படத்துக்கு.

மறுபடியும் (1993)

இந்தியில் வெளியான அர்த் படத்தின் ரீமேக்தான் இந்தப் படம் என்றாலும், ஒரு அசல் தமிழ்ப் படமாக இதைப் படைத்தார் பாலு மகேந்திரா. இளையராஜாவின் இசை ராஜாங்கம் இந்தப் படத்திலும் தொடர்ந்தது. நிழல்கள் ரவி, ரேவதி, ரோஹினி, அர்விந்த் சாமி நடித்தனர். மிக நுட்பமான உணர்வுகளைக் கூட அற்புதமாக படம் பிடித்தது பாலு மகேந்திராவின் கேமரா. இன்று பார்த்தாலும் ஈர்க்கும் படம், பாடல்கள்…

சதி லீலாவதி (1994)

கமல் ஹாஸனின் தயாரிப்பில் உருவான படம் இது. மறுபடியும் படத்துக்குப் பிறகு பண ரீதியாக சிக்கலில் இருந்த பாலு மகேந்திராவுக்கு, உதவ கமல் எடுத்த படம் இது. இதுவும் இரண்டு பெண்டாட்டிக்காரன் கதைதான். கமல் – கோவை சரளா கவுரவ வேடத்தில் கலக்கினர். சீரியஸ் படம் எடுப்பவர் என அறியப்பட்ட பாலு மகேந்திராவின் உச்ச கட்ட நகைச்சுவைப் படம் இது.

அவுர் ஏக் பிரேம் கஹானி (1996)

தான் எடுத்த முதல் படமான கோகிலாவை, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியில் அவுர் ஏக் பிரேம் கஹானி என எடுத்தார் பாலு மகேந்திரா. இளையராஜா இசையமைத்தார். ரமேஷ் அர்விந்த், ஹீரா, ரேவதி நடித்தனர்.

ராமன் அப்துல்லா (1998)

இந்து – முஸ்லிம் மதங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ஆள்மாறாட்டம் செய்யும் கதை. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தந்து எடுக்கப்பட்ட படம். சிவகுமார், விக்னேஷ், கரண், ஈஸ்வரி ராவ், ருத்ரா நடித்திருந்தனர். அருமையான பாடல்கள் இடம்பெற்றிருந்தன.

ஜூலி கணபதி (2003)

ராமன் அப்துல்லாவுக்குப் பிறகு 5 ஆண்டுகள் கழித்து பாலு மகேந்திரா இயக்கிய படம் ஜூலி கணபதி. திருமணமாகி பின் மீண்டும் நடிக்க வந்த சரிதாவின் மறு பிரவேசம். ஸ்டீபன் கிங்கின் நாவலைத் தழுவித்தான் இந்தப் படம் எடுத்தேன் என டைட்டிலிலேயே நேர்மையாகப் போட்டிருந்தார் பாலு மகேந்திரா. மிகக் குறைந்த செலவில் எடுத்து பெரிய வெற்றியைத் தந்த படம்.

அது ஒரு கனா காலம் (2005)

அன்றைக்கு வேகமாக வளர்ந்த நடிகர் தனுஷை வைத்து பாலுமகேந்திரா எடுத்த படம் அது ஒரு கனா காலம். முதலில் இந்தப் படத்தை அழியாத கோலங்களின் நீட்சியாக எடுக்கத்தான் விரும்பினார் பாலு மகேந்திரா. தனுஷ் – ரம்யா கிருஷ்ணனின் இச்சையை மையப்படுத்தி கதை அமைக்கப்பட்டது. பின்னர் அது வேண்டாம் என முடிவானதால், தனது முந்தைய படமான நிரீக்ஷனாவை ரீமேக் செய்தார். இளையராஜா இசை. அதிகபட்ச கால தாமதம் காரணமாக படம் பெரிதாகப் போகவில்லை.

தலைமுறைகள் (2013)

எட்டு ஆண்டுகள் இடைவெளிவிட்டு பாலு மகேந்திரா இயக்கிய படம் தலைமுறைகள். இயக்குநர் சசிகுமார்தான் தயாரிப்பாளர். பாலு மகேந்திராவே கதையின் நாயகனாக நடித்திருந்தார். ‘தமிழையும் இந்தத் தாத்தாவையும் மறந்திராதப்பா..’ என உருகும் குரலில் சொல்லிவிட்டு மறைந்தார், க்ளைமாக்ஸில். 
 http://tamil.oneindia.in

Advertisements
 
பின்னூட்டமொன்றை இடுக

Posted by மேல் பிப்ரவரி 14, 2014 in Uncategorized

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: