RSS

வல்லிபுரம் தமிழீழ வரலாற்றின் திறவுகோல்…


2
‘ஓவ்வாரு சமூகமும் அகநிலையிலும் புறநிலையிலும் எம்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது.இந்த மாற்றத்தைக் கணக்கில் எடுத்து அதற்கேற்றவாறு வியூகங்களை வகுத்து அடுத்த கட்ட இயங்கு நிலைக்கு தாயாராக இல்லாத சமூகம் வரலாற்றில் இருந்து துடைத்தெறியப்பட்டுவிடும்.’
000

தொல் தமிழகம் என்று நாம் அடையாளப்படுத்துகிற தமிழிய நிலப்பரப்பின் ஓர் பகுதியாக குமரி கண்டம் என்ற ஒன்று இருந்ததாகத் தமிழ் வரலாற்று ஆசிரியர்களும் ஆர்வலர்களும் கூறிவருகின்றனர்.இதற்கு ஆதாரமாகச் சங்க இலக்கிய நூல்களில் இடம்பெறும் தகவல்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன.

சிலப்பதிகாரத்தில் ‘பஃறுளியாறும்’, ‘பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும்’ ‘கொடுங்கடல் கொண்டது’ பற்றிக் கூறப்படுகிறது

‘அடியில் தன்னல வாசர்க் குணர்த்தி
வடிவே லெறிந்த வன்பகை பெறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி’ (சிலப். 11:17-22)

பாண்டியனை வாழ்த்தும் பொழுது
‘செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலாவே‘ (புறம் 9)

தொடியோள் பௌவம்’ என்னும் சிலப்பதிகாரத் தொடர்க்கு அடியார்க்கு நல்லார் என்னும் உரையாசிரியர் கொடுத்த விரிவான விளக்கத்தில் ‘தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவத வாரும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்முன்பாலை நாடும், ஏழ்குன்றநாடும், , ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும் நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்ற ரென்றுணர்க.’ என்று குறிப்பிடப்படுகிறது

இரண்டாம் சங்கம் இருந்த காலத்தில் கபாடபுரம் என்ற தலைநகரம் முழுகிய பின்னரும் குமரி ஆறு இருந்ததென்பதைத் தொல்காப்பிய சிறப்புப் பாயிர வரியான , ‘வட வேங்கடந் தென்குமரி’ குறிக்கிறது
தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும்’
‘குமரியம் பெருங்துறை யயிரை மாந்தி‘ (புறம் 6:67)

‘மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட’ (கலித. 104)என்னும் குறிப்பு, பழம் பாண்டிய நாட்டைக் கடல்கொண்டதை குறிக்கின்றது.

இறையனார் அகப்பொருள் உரையில் விரிவாகச் சங்க காலத்தில் தொல் தமிழகத்தை ஆண்ட அரசர்களின் வரிசை, தமிழ் அவையில் இருந்த புலவர்களின் வரிசை முதலியன குறிக்கப்பட்டுள்ளது. இதுபோலச் செய்திகள் தமிழ் இலக்கியத்தில் வேறு எங்கும் இல்லை.

தென்குமரிக்கண்டத்தின் தலைநகராகத் தென்மதுரை விளங்கியதாகவும் மேலும் தென்மதுரையில் தலைச்சங்கம் இருந்ததென்பதும், அதனை அடுத்து மேலும் இரண்டு சங்கங்கள் இருந்தனவென்பதும் சங்க நூல்களில் குறிப்பிடப்படும்; தகவல்களாகும்.

முதற் கடற்கோளால் குமரிகண்டம் என்று கூறப்படும் நிலப்பகுதி அழிவுற்றதென இந்தத்;தகவல்கள் குறிக்கின்றன. இவ்வாறு மொத்தம் நான்கு கடல்கோள்கள் நிகழ்ந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

இறையனார் அகப்பொருள் உரையில் கூறியுள்ளதின் அடிப்படையில் தமிழர்களின் இலக்கிய காலம் சுமார் கி.மு 10,500 ஆண்டுகள் வரை செல்கிறது.

2000 மாம் ஆண்டில் பூம்புகார் கடற்பகுதியில் அகழ்வாய்வு மேற்கொண்ட கிரஹாம் ஹான்காக் என்ற பிரித்தானிய ஆழ்கடல் ஆய்வாளர். தனது முறையான ஆய்வுகளுக்குப் பிறகு இந்திய ஆரிய முதன்மைவாத வரலாற்றைக் கட்டுடைக்கும் பல தகவல்களை வெளியிட்டார்.

கடந்த 2000ஆம் ஆண்டு இந்தியாவிற்குச் சென்ற கிரஹாம் ஹான் காக் பிரித்தானியாவைச் சார்ந்த ”சனல் 4′ என்ற தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் அமெரிக்காவைச் சார்ந்த ”லேர்னிங் சனல்’ என்ற தொலைக்காட்சி நிறுவனம் ஆகியவற்றின் நிதியுதவியுடன் 2001ஆம் ஆண்டு இந்த ஆராட்ச்சியைத் ஆரம்பித்தார்.

இந்த நகரம் கடலில் சுமார் 25 மீட்டர் ஆழத்தில் புதையுண்டிருப்பதைக் ஹான்காக் கண்டறிந்தார். சுமார் 17 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ”ஐஸ் ஏஜ்’ எனப்படும் பனிக்கட்டி காலத்தின் இறுதிப் பகுதியில் காலநிலை மாறுதல்கள் காரணமாக, பனிப்பாறைகள் உருகியதன் விளைவாகப் பல நகரங்கள் கடலுள் மூழ்கியதாக வரலாறு கூறுகின்றது.

இத்தகைய பனிக்கட்டி உருகும்நிலை, சுமார் 7 ஆயிரம் ஆண்டுகாலம் தொடர்ந்திருக்கிறது. பழைய பூம்புகார் நகரம், கடலில் சுமார் 25 மீட்டர் ஆழம் புதையுண்டு கிடப்பதைப் பார்க்கும்போது, இந்த நகரம் சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கியிருக்கக் கூடும் என்று ஹான்காக் கருதினார்.

தனது ஆராய்ச்சியைப் பற்றி விபரங்களை அவர் பிரித்தானியவைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் கிலன்மில்னே என்பவரிடம் தெரிவித்தார். அவற்றை மேலாய்வு செய்த கிலன்மில்னே, ஹான் கக்கின் கருத்து சரிதான் என உறுதிப்படுத்தினார்.

சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல்மட்டம் 25 மீட்டர்உயர்ந்திருக்கக் கூடும் என்றும். அதனை வைத்துப் பார்க்கும்போது இந்த நகரம் 11 ஆயிரத்து 500 ஆண்டுக்கால பழமை வாய்ந்தது என்ற முடிவையும் அவர் அறிவித்தார்.

பூம்புகாரில் கிரஹாம் ஹாக் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படங்கள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில். ”அண்டர்வேர்ல்ட்’ என்ற தலைப்பில் தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பப்பட்டது.

இந்த தொலைக்காட்சித் தொடர், உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் படங்களை பெங்களுரில் நடந்த கண்காட்சி ஒன்றில் கிரஹாம் ஹான்காக் வெளியிட்டார்.

பூம்புகார் அகழ்வாய்வின் மூலம் 7000 ஆண்டுகள் தொடர்ந்து ஏற்பட்ட பனிப்பாறை உருகல் நிகழ்வு, குமரி கண்டத்தை சிறிது சிறிதாக அழித்தொழித்தது உறுதி செய்யப்படுகின்றது.

அத்துடன் தொல் தமிழகமும் இலங்கையும் இக்கால அளவில் இருவேறு நாடுகளாகப் பிரிந்ததும் இன்றைய இந்தியப் பெருங்கடல். வங்க அரபிக் கடல்கள் தோற்றம் பெற்றது,உலக வரைபடம் ஏறக்குறைய இன்றுள்ள அளவில் வடிவம் பெற்றதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை தொல் தமிழகத்தின் தென் பகுதியில் நிலவிய நாகரிகம் மற்றும் பண்பாட்டுக்கு ஒத்தாக வடபகுதியில் சிந்துவெளி நாகரிகம் நிலவியது. இந்தக்காலகட்டத்தில் தென் தமிழகத்தில் நிலப்பிரத்துவ அமைப்பிலிருந்து தோற்றம் பெற்ற பாண்டிய சோழ சேர அரசுகள் அடையாளம் காணப்படுகின்றன.ஆனால் வட தொல் தமிழகத்தில் இவ்வாறான முடியாட்சி அரசுகள் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

சிந்துவெளிப் பகுதியில் கி.மு 6000 ஆண்டளவிலேயே மக்கள் குடியேற்றங்களும், சிறிய நகரங்களும் இருந்ததாகக் கூறப்படுகின்றது. 
பலுச்சிஸ்தானிலுள்ள மெஹெர்கர் பகுதி, ஹரப்பாவின் அடியிலுள்ள ஆதி நகரபடைகள் என்பன இந்தக் கூற்றுக்கான சான்றுகளாகக் காட்டப்படுகின்றன

ஆனால் தற்போது ஹரப்பா நாகரிகம் என்று அறியப்படுகின்ற காலகட்டத்தில் சிந்துவெளி நாகரிகம், முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் அக்காலத்தில் நிலவிய ஏனைய நாகரிகங்களிலும்; பார்க்க அளவிற் பெரிதாக இருந்தது.இது சுமார் 13 இலட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாகப் பரந்து விரிந்திருந்தது.

இங்கே சிறிதும் பெரிதுமாக 200 க்கும் மேற்பட்ட ஊர்களும், 6 மிகப் பெரிய நகரங்களும் இருந்தன. இந்த நகரங்கள், குடியேற்றங்களினது ஒரே தன்மையான அமைப்பு மற்றும் இவையனைத்தும் ஒரு உயர் வளர்ச்சி நிலையில் சமூக ஒருங்கிணைப்பு வல்லமை கொண்ட ஒரே நிர்வாகத்திற்கு கீழ் அமைந்திருந்தமையைக் காட்டுகின்றது. .இவை சுதந்திரமான நிர்வாகம் மற்றும் தன்நிறைவுப் பொருளாதாரம் ஆகியவற்றைக் கொண்ட நகர அரசுகளாகவே இருந்ததை உறுதிப்படுத்தியுள்ளன

.இந்த அரசுகள் மக்கள் மத்தியில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ‘ஆதி குடியரசுகள்’ என்ற கருத்தும் சில ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகிறது.
கணினி மூலம் உருவாக்கப்பட்ட மொஹெஞ்சதாரோ நகரின் ஒரு பகுதியைக் காட்டும், ஒரு தோற்றம், சிந்துவெளி நாகரீகத்தில், உயரிய நகர்சார் பண்பாடு இருந்ததை உறுதிப்படுத்தியுள்ளது.

இங்கே காணப்படுகின்ற நகர அமைப்பின் தன்மை, சுகாதாரத்துக்கு, முக்கியத்துவம் கொடுக்கின்ற உட்கட்டுமான அமைப்பு மற்றும் நகரத் திட்டமிடல் தொடர்பான அறிவு இந் நாகரீக மக்களிடையே நிலவியமையைக் காட்டுகின்றது.

மொஹெஞ்சதாரோ, ஹரப்பா போன்ற முக்கிய நகரங்களின் தெருக்கள், முறையான வலைப்பின்னல் அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளன. சத்தம், துர்நாற்றம், கள்வர் தொல்லை போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் விதத்தில் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஹரப்பா, மொஹெஞ்சதாரோ, மற்றும் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ராக்கிகர்ஹி ஆகியவற்றில் காணப்படுகின்ற சுகாதார அமைப்பு முறைமைகள், உலகிலேயே முதல் நகர்சார் சுகாதார அமைப்பு முறைமைகளாகும். நகரங்களில், வீடுகள் தனியாகவோ அல்லது வேறு அயல் வீடுகளுடன் கூட்டாகவோ கிணறுகளில் இருந்து நீர் பெற்றன. குளிப்பதற்குத் தனியான அறைகள் ஒதுக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. கழிவு நீர், வீடுகளில் இருந்து, தெருக்களில் அமைக்கப்பட்டிருந்த மூடிய கால்வாய்கள் மூலமாக வெளியேற்றப்பட்டது. வீடுகளின் வாயில்கள், உள் முற்றங்களிலோ, சிறிய தெருக்களிலோதான் அமைக்கப்பட்டன.

பண்டைக்காலச் சிந்து வெளியின் செல்வாக்குக்கு உட்பட்ட எல்லா நகரப் பகுதிகளிலும் காணப்பட்ட கழிவு நீரகற்றல் மற்றும் வடிகால் அமைப்பு முறைகள், அதற்குச் சமகாலத்தில் மத்திய கிழக்கு நகரங்களில் காணப்பட்டவற்றிலும் உயர்திறன் மிக்கவையாக இருந்தது.

சிந்துவெளி நாகரீகக்காலக் கட்டிடக்கலை பற்றி, அங்கே காணப்படுகின்ற இறங்கு தளங்கள், தானிய சேமிப்புக் கிடங்குகள், களஞ்சியத் தொகுதிகள், செங்கற் கட்டுமான மேடைகள் மற்றும் பாதுகாப்புச் சுவர்கள் போன்ற இன்னோரன்ன அமைப்புக்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. பெரிய அளவிலான நகர் பாதுகாப்புக் கோட்டைகள் கட்டப்பட்டதற்கான காரணம் இன்னும் விவாதத்துக்கு உரியதாகவே உள்ளது.

மெசொப்பொத்தேமியா, எகிப்து போன்ற, இப் பண்பாட்டின் சமகாலப் பண்பாடுகளில் காணப்படுவதற்கு முரணாக, இங்கே அரண்மனைகளோ, கோயில்களோ இருந்ததற்கான சான்றுகளோ, அரசர், படைகள், சமயக் குருமார் போன்றவர்கள் பற்றிய தகவல்களோ எதுவும் கிடைக்கவில்லை. ஒரு நகரத்தில், பொதுக் குளியல் இடம் எனக் கருதப்படுகின்ற, சிறப்பாகக் கட்டப்பட்ட குளியல் தடாகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோட்டைகள் மதிலால் சூழப்பட்டிருந்தபோதும், இவை பாதுகாப்புக் காரணங்களுக்காகக் கட்டப்பட்டவையா என்பதில் தெளிவு இல்லை. இவை வெள்ள நீர் உட்புகாது தடுப்பதற்காகக் கட்டப்பட்டவையாகவும் இருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது.

பெரும்பாலான நகரவாசிகள், வணிகராகவும், கைவினைஞராகவும் இருந்ததாகத் தெரிகிறது. முத்திரைகள், மணிகள் (டிநயனள) மற்றும் பலவகைப் பொருட்களைச் செய்வதற்காக தொலைதூர இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மூலப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
சில வீடுகள் ஏனையவற்றிலும் பெரியவையாகக் காணப்பட்டபோதிலும், பொதுவாக இவற்றின் அமைப்பு, சிந்துவெளி நகரச் சமுதாயம் பெருமளவுக்கு ஒரு சமத்துவச் சமுதாய அமைப்பைக்(ஆதி பொதுவுடைமை) கொண்டு விளங்கியமையே காட்டுகிறது.

சமயச் சடங்குகளோடு தொடர்புடையவை அல்லது வணக்கத் தலங்கள் என்று சொல்லக்கூடிய கட்டிடப் பகுதிகள் எதுவும் தொல்பொருளாய்வில் அகப்படவில்லை. எனினும், சிறிய உருவச் சிலைகள், மற்றும் முத்திரைகளில் காணப்படுகின்ற உருவங்களையும், அவற்றிலே உருவகப் படுத்தப்பட்டுள்ள காட்சிகளையும் வைத்துச் சமயத் தொடர்புள்ள கருத்துருக்களை ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். எடுத்துக்காட்டாக வேதகால பிராமணிய மதத்தால் இழிவானதாகச் சித்தரிக்கப்பட்ட பெண் தெய்வ வழிபாடு, இலிங்க வழிபாடு, பசுபதி பற்றிய எண்ணக்கரு, பலி பீடங்கள் போன்றவற்றின் அடைப்படைகளுக்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

சிந்து வெளி மக்கள் பேசிய மொழியின் எழுத்து வடிவங்களான குறியீட்டு வடிவங்கள் சிறிய அளவுள்ள முத்திரைகளின் வடிவில் ஏராளமாகக் கிடைத்துள்ளது.

இதேவேளை சிந்துவெளி நாகரிக எழுத்துகள் கொண்ட புதிய கற்காலத்துக்கைக் கோடரி ஒன்று மயிலாடுதுறையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ‘இது மிகப் பெரிய கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது. ஏனென்றால் முதல்முறையாக சிந்து சமவெளி எழுத்துகள் அடங்கியதும், கால வரையறை செய்யக்கூடியதுமான ஒரு தடயம் தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும் ‘இதன் மூலம் தெரிய வரும் உண்மை என்னவென்றால் தமிழகத்தைச் சேர்ந்த புதிய கற்கால மக்கள் ஹரப்பா மொழிக்குடும்பம் சார்ந்த மொழி ஒன்றையே பேசினார்கள் என்பதுதான்’ என்கிறார்; தமிழகத் தொல்லியல் துறை வல்லுநரான ஐராவதம் மகாதேவன். இந்தத் தடயத்தின் காலம் கி.மு. 2000 – 1500 என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை தடயங்களை ஆய்வு செய்தபோது அவற்றில் 4 குறியீடுகள் அல்லது சின்னங்கள் இருப்பதும் அவை சிந்துசமவெளி எழுத்துவகை சார்ந்தவை என்பதும் கண்டறியப்பட்டன. கண்டறியப்பட்ட இரண்டு கோடரிகளில் ஒன்றில் எழுத்துகள் இல்லை. ஒன்றில் மட்டுமே எழுத்துகள் உள்ளன. ஒவ்வொரு கோடரியும் 125 கிராம் எடை கொண்டது.

அந்த 4 குறியீடுகளில்- முதல் குறியீட்டில் விலா எலும்புகள் கொண்ட ஒரு மனிதன் முதுகு கூன் வளைந்து பின்னங்கால் மடித்து முழங்கால் உயர்த்தி அமர்ந்திருக்கும் தோற்றம். இரண்டாம் குறியீடு கைப்பிடி கொண்ட ஒரு குவளை. முதல் குறியீடு ‘முருகு’ என்றும் இரண்டாம் குறியீடு ‘அன்’என்றும் படிக்கப் பட்டன. இரண்டும் இணைந்து ‘முருகன்’ ஆகின்றன. ‘முருகு’ சின்னம் 48 என்னும் சிந்துசமவெளி முத்திரை எண்ணோடும் ‘அன்’ சின்னம் 342 என்னும் எண்ணோடும் பொருந்துகின்றன. மூன்றாம் சின்னம் சூலம் போல் தோன்றுகிறது. அதன் எண் 367. நான்காம் சின்னம் 301. சிந்து சமவெளி எழுத்துகள் பற்றி வெளியிட்டுள்ள பட்டியலில் இவை தரப்பட்டுள்ளன.

‘முருகு’ ‘அன்’ என்னும் இரு சொற்களும் நூற்றுக்கணக்கான இடங்களில் ஹரப்பா வரிவடிவங்களில் இடம் பெறுகின்றன.
இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் ஹரப்பா (வடதமிழகம்), (தென்)தமிழகம் ஆகிய இரு நிலப்பகுதிகளில் மக்கள் ஒரே வரிவடிவத்தை மட்டுமன்றி ஒரே மொழியைத்தான் பயன்படுத்தினார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

முருகு என்னும் சின்னம் தமிழ்நாட்டில் முதன்முதலில் திண்டிவனத்திற்கு அருகிலுள்ள சானூரில் கண்டெடுக்கப்பட்ட மண்பாண்ட ஓவியங்களிலிருந்து அறியப்பட்டது. பி. பி லால் என்னும் அகழ்வாய்வாளர் இதைச் சிந்து சமவெளியின் 47 ஆம் முத்திரை எண்ணோடு ஒப்பிட்டு அடையாளப்படுத்தினார். மாங்குடி (திருநெல்வேலி), முசிறி (கேரளம்) மண்பாண்ட ஓவியங்களிலும் இச்சின்னம் சுட்டி அடையாளம் காட்டப் பட்டுள்ளது.

இலங்கையிலும் வரலாற்றுக்கு முந்திய காலம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பல அகழ்வாய்வுகளில் இலங்கையின், வடக்கு, வடமேற்கு, வடகிழக்குப் பகுதிகளில் வாழ்ந்த கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கருவிகளும், தமிழ்நாட்டில் குறிப்பாகத் திருநெல்வேலிக் கரையோரம் கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளும் ஒரே தன்மையானவையாகக் காணப்படுகிறது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காணப்பட்ட பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய அடக்கக் களங்களை ஒத்த களங்கள் இலங்கையின் வடமேற்குக் கரையோரம் பொம்பரிப்பிலும், கிழக்குக் கரையோரம் கதிரவெளியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தொடக்ககாலப் பாண்டிய இராச்சியப் பகுதியில் காணப்படும் அடக்கக் களங்களோடு குறிப்பிடத் தக்க வகையில் ஒத்துள்ள இக்களங்கள் முறையே கிமு 5ஆம் நூற்றாண்டையும், கிபி 2 ஆம் நூற்றாண்டையும் சேர்ந்தவை. இவற்றோடு பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய அம்சங்கள் இலங்கையில் மன்னார், கந்தரோடை, ஆனைக்கோட்டை, வேலணை, காரைதீவு, புத்தளம், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாரை, பூநகரி, முல்லைத்தீவு, வவுனியா, மாமடு, பறங்கியாறு, அனுராதபுரம் ஆகிய இடங்களிலும் கண்டறியப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் அரிக்கமேட்டில் காணப்பட்டதை ஒத்த கிமு 1300 ஐச் சேர்ந்த மட்பாண்ட வரிசைகள் யாழ்மாவட்டத்தில் கந்தரோடையில் கண்டறியப்பட்டுள்ளன.
இலங்கையின் ஆனைக்கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட பெருங்கற்கால முத்திரை மற்றும் வேலணை சாட்டிப் பிரதேசத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொல்பொருளியல் பிரிவினால் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட மட்பாண்டங்களும் மனித எலும்புகளும் சாட்டியை அண்டிய பிரதேசத்தில் முதற் சங்ககாலம் தொட்டு நாகரீகமடைந்த மக்கள் வாழ்ந்தாக உறுதிப்படுத்துகின்றன.

இவற்றை அடிப்படையாகக் கொண்டு, அக்காலத்தில் இலங்கையில் வாழ்ந்த மக்களும்; தொல் தமிழகத்தில் வாழ்ந்த மக்களும் ஒரே இனக்குழுமத்தை சோந்தவர்கள் என்றும் ஒரே மொழி(தமிழி) ஒரே எழுத்து வடிவம் ,ஒரே நகரிகம் பண்பாட்டைக் கடைப்பிடித்தவர்கள் என்றும் அதாவது ஒரே பண்பாட்டு வலையத்துக்குள் வாழ்ந்தவர்கள் என்றும் நவீன வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.
(தொடரும்)
————————————————————————-

இந்த பகுதியை எழுத உதவிய நூல்கள் மற்றும் ஆவணங்கள்
• குமரிக்கண்ட இடப்பெயரும் மூவேந்தர் குடிப்பெயரும், பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும், தேவநேயப் பாவாணர்
• Sm. Ramasamy, Geomatics in Tsunami, p. 04, “Also in Ayyavazhi mythology the ‘Akilathirattu Ammanai’ tells about a sunken land at about 152 miles sout or south-east to kanyakumari with 16008 streets
• https://youtu.be/PhGeIxdXorg
• The Indus Civiliztion:A Contemporary Perspective:by Gregory L.Possehl
• http://keetru.com/…/…/12013-sp-366/23123-2013-03-01-04-01-34
• Indian History – Important events: History of India. An overview”. History of India. Indianchild.com.
• The Ancient Cities of the Indus Valley Civilization. Oxford University Press
• A Social History of Early India by Brajadulal Chattopadhyaya
• தொடக்க கால ஈழத்து இலக்கியங்களின் வரலாற்று பின்னணி :பேராசிரியர் ஆ .வேலுப்பிள்ளை
• யாழ்ப்பாணத்தின் முற்காலக் குடியேற்றங்கள் – ஒரு தொல்லியல் ஆய்வு : பொன்னம்பலம், இரகுபதி

Advertisements
 

வல்லிபுரம் தமிழீழ வரலாற்றின் திறவுகோல்…


1
“ஒரு இனத்தின் வரலாற்றை எழுதுவதென்பது என்பது ஒரு சிறு குளக்கரையில் இருந்து தூண்டில் போட்டு மீன் பிடிப்பதை போன்றதல்ல.அது ஆர்ப்பரிக்கும் ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுப்பதைப் போன்றது.” 
இலங்கையின் வரலாறு என்பதை நாற்புறமும் கடலால் சூழப்பட்ட ஒரு மூடுண்ட சிறுதீவின் வரலாறாகச் சுருக்கவிட முடியாது.
அதை தொல் தமிழகத்தின் வரலாற்றுடனேயே நாம் இணைத்துபார்க்க வேண்டியுள்ளது.தொல் தமிழகம் என்று குறிப்பிடும் போது,அதை இன்றைய தமிழகம் அல்லது தமிழ்நாட்டு நிலப்பரப்பின் வரலாற்றுடன் குறுக்கிவிடக் கூடாது. அது இன்றைய இந்தியா பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் பங்காளாதேஷ் மற்றும் கடல்கோள்களால் அழிந்து போனதாக குறிப்பிடப்படும் குமரிகண்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பரந்த நிலப்பரப்பாகும்.
நம்முடைய வரலாற்றை எழுதும் ஆய்வு செய்யும் வரலாற்றாசிரியர்கள் பலரும் இந்தியா, இந்தியத் தொடர்பு, இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்கின்ற சொற்களையும் சொற்குறிப்புக்களையும் பயன் படுத்துகிறார்கள். 
இது தவறு.இந்தியா என்பது 19 ம் நூற்றாண்டில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்கள் வைத்த பெயராகும்.இலங்கைக்கு சிலோன் என்று பெயர் வைத்ததைப் போலவே இந்தியா என்ற இந்தப்பெயரும் வைக்கப்பட்டது. 
பிரித்தானியர்களுடைய வருகைக்கு முன்பு இந்தியா என்ற பெயரில் ஒரு நாடு இருக்கவில்லை.இன்று இந்தியா என்று குறிப்பிடப்படும் நிலப்பரப்பு முழுவதும் பிரித்தானியர்களின் ஆட்சி ஆரம்பிப்பதற்கு முற்பட்ட எந்தவொரு காலகட்டத்திலும் ஒரே நாடாக ஒரே அரசின் கீழ் இருந்ததில்லை. 
ஆனால் பெருங்கற்கால பண்பாட்டு காலத்தின் ஆரம்பத்தில் இருந்து அதாவது கி.மு. 600ம் நூற்றாண்டு தொடக்கம் கி.மு.6ம் நூற்றாண்டுவரை இந்த நிலப்பரப்பு முழுவதும் ஒரே பண்பாட்டை கொண்ட மக்கள் வாழ்ந்தார்கள். 
இவர்கள் பேசி மொழி தமிழி என்று அழைக்கப்பட்டது.இது நமது தமிழ் மொழியின் ஆரம்ப வடிவம்.இதிலிருந்தே இன்று திராவிட மொழிகள் என்று அழைக்கப்படுகின்ற ஏனைய மொழிகள் தோற்றம் பெற்றன. 
(திராவிட என்ற சொல் சமஸ்கிரதச் சொல். இது தாசர்கள் இழிவானார்கள் தாழ்ந்தவர்கள் என்ற பொருள்படும்படியாக எம் மீது திணிக்கப்பட்ட ஒன்று.இதை நாங்கள் நிராகரித்து தமிழியர்கள் தமிழிய பண்பாடு தமிழிய நாகரிகம் தமிழிய வரலாறு என்று அழைக்கலாம்.) 
இந்த மொழிக்கென தனியான வரிவடிவம் இருந்தது.ஆரம்பத்தில் இது சித்திர எழுத்து வரிவடிவமாகவும் பின்னர்; தமிழ் பிராமி வரிவடிவமாகவும் இருந்தது. 
இந்த மக்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் உலகின் பிறபகுதிகளில் இருந்த மயன்,எகிப்திய,பபிலோனிய, சுமேரிய, கிரேக்க நாகரீகங்களுக்கு இணையான அல்லது அவற்றை விட மேலான நாகரீகத்தை கொண்டவர்களாக இருந்தார்கள்.குறிப்பாக நாடோடிகளாக இடத்துக்கிடம் நகர்ந்து செல்லும் சமூக அமைப்பைக் கொண்டிருந்த ஆரியர்களைவிட இவர்கள் உயரிய பண்பாட்டையும் நாகரிகத்தையும் கொண்டவர்களாக இருந்தார்கள். 
இந்த மக்கள் வடிகால் கழிவறை நீர் வழங்கல் பொறிமுறைகளுடன் கூடிய பெருநகர கட்டுமானங்களைக் கொண்டவர்களாகவும் பல்வேறு நாடுகளுடன் வணிக தொடர்புகளை கொண்டவர்களாகவும் இருந்தார்கள் என்பதற்கு சிந்துவெளியின் மொஹஞ்சதாரா ஹரப்பா மற்றும் தமிழ் நாட்டின் கீழடியில் கிடைத்த வரலாற்றுத் தடயங்கள் சாட்சியாகும். 
இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது அரசும் இறைமையும் பற்றிய தகவலாகும்.அரசு என்பது கடவுளினுடைய கட்டளைகளை நிறைவேற்ற உருவாக்கப்பட்ட அமைப்பு.அதன் இறைமை என்பது கடவுளுக்குரியது.அரசன் கடவுளின் ஊழியனாயக இருந்து அவரின் கட்டளைகளை நிறைவேற்றுகிறான்.மதகுரு கடவுளின் பிரதிநிதியாக அல்லது தூதுவராக இருந்து அவற்றைக் கண்காணிக்கிறார். இது தான் அன்று உலகின் பெரும்பாலான நாடுகளில் இருந்த அரச ஆட்சி கட்டமைப்பாகும். இந்தக் கட்டமைப்பு மக்களை அரசுக்கு எதிராகவும் அரசனுக்கு எதிராகவும் கிளர்ச்சி செய்யாமல் தடுக்கும் ஒரு பொறி முறையாகும். அவ்வாறு எதிர்;ப்பது அல்லது கருத்துச் சொல்வது, கடவுள் நிந்தனை என்றும் கடவுளுக்கு எதிராகச் செய்யப்படும் குற்றம் என்றும் அச்சுறுத்தி மக்களை அடக்கியாள்வதே இதன் நோக்கமாகும். 
ஆனால் இந்த ஆட்சி முறை தமிழிய நிலப்பரப்பில் இருக்கவில்லை.ஏனென்றால் நிறுவனமயப்படுத்தப்பட்ட கோட்பாட்டு ரீதியான மதம் ஒன்று அங்கு இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.மக்கள் பிற்கால வேத மதத்தவர்களால் இழிவானது என்று தூற்றப்பட்ட லிங்க பாடு,நாக வழிபாடு, இறந்தோருக்கான நடுகல்வழிபாடு முதலான இயற்கை வழிபாட்டு முறைகளையும் கடைப்பிடித்தார்கள்.இந்த வழிபாடுகளைச் செய்வதற்கு பூசாரிகள் இருந்தார்கள்.அந்த பூசாரிகள் கடவுளின் பிரதிநிதிகளாக இருக்கவில்லை.மக்களின் பிரதிநிதிகளாகவே இருந்தார்கள்.மதம் என்ற ஒரு பொது நிறுவனம் அங்கே இருக்காததானால், அந்த நிறுவனத்தின் தத்துவங்களும், கோட்பாடுகளும் இந்த புசாரிகளை ஒருங்கிணைக்கும் வழிநடத்தும் நிலையும் இருக்கவில்லை.எனவே மதமும் மதநிறுவனத்தால் வழிநடத்தப்படும் மதகுருவும் இல்லாத போது அரசு என்பது மதம் சார்ந்ததாக இருக்கவில்லை.அது பலத்தின் அடிப்படையில் அதிகாரத்தின் மீது கட்டமைக்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது. 
இதே நாகரீகமும் பண்பாடும் இலங்கை தீவில் இருந்தது என்பதற்குப் பல தொல்லியல் சான்றுகள் ஆதாரமாகக் கிடைத்துள்ளன.இவை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மானிடவியல் சமூகவியல் ஆய்வுகளும் அவற்றை உறுதிப்படுத்தியுள்ளன.இந்த மக்கள் இடைகற்கால பண்பாட்டுக்கு உரியவர்கள் என்பதை இந்த ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. 
.இலங்கையில் வாழ்ந்த ஆதிக்குடிகள் என்று மகாவம்சம் குறிப்பிடும் இயக்கர், நாகர் ஆகியோர் இந்தப் பண்பாட்டுக்குரிய மக்கள் எனக்குறிப்பிடும் மானிடவியலாளர்கள், இவர்கள் இதே காலப்பகுதியில் தொல்தமிழநாட்டின் தென் பகுதியில் வாழ்ந்த ஆதி ஒஸ்ரலோயிட் மாநிட குழுமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறுகின்றனர். 
இற்றைக்குக் கிட்டத்தட்ட 300,000 முதல் 500,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த home erectus பிரிவைச் சேர்ந்த மனித இனம் இலங்கையில் வாழ்ந்தமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. அத்துடன் 125,000 ஆண்டுகளுக்கு முன்னர் வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட மனிதர்கள் இலங்கையில் வாழ்ந்தமைக்கான உறுதியான சான்றுகளும் கிடைத்துள்ளன. 
இலங்கையில் பலாங்கொடை பகுதியில் கண்nடெடுக்கப்பட்டுள்ள புது மனிதனின் எச்சங்கள் இலங்கையிலும் தொல் தமிழகத்திலும் ; நிலவிய இரண்டாம் கற்காலத்திற்;கு உரியனவாகும். இலங்கையில் நிலவிய இந்த இடைக் கற்காலப் பண்பாட்டுக்கு இலங்கை வரலாற்றாசிரியர்கள் “பலாங்கொடை நாகரிகம்” எனப் பெயரிட்டுள்ளனர். 
நன்கு வளர்ச்சியடைந்த பலாங்கொடை மனிதரில் ஆணின் உயரம் 174 செமீ எனவும் பெண்ணின் உயரம் 166 செமீ எனவும் கணிக்கப்பட்டுள்ளது. பலாங்கொடை மனிதனின் எலும்புகள் மிக உறுதியானவையாகவும், மண்டையோடு தடித்ததாகவும், விலா எலும்புகள் நன்கு வளைந்தனவாயும், மூக்கு உட்குழிவானதாயும், விரலெலும்புகள் பருமனானவையாயும், கழுத்து சிறியதாயும் இருந்துள்ளன. 
பலாங்கொடை மனிதனின் கற்கருவிகள் மிகச் சிறியனவாகவும், கிட்டத்தட்ட 4 செமீ அளவான கூரிய படிகங்களால் ஆனவையாகவும் மும்மூலை வடிவங்களாகவும் காணப்பட்டன. இவ்வாறான கற்கருவிகளே ஐரோப்பாவில் , முதற் கற்காலத்திலும் பயன்படுத்தப்பட்டவையாகும். ஐரோப்பாவிற் காணப்பட்ட முதற் கற்கருவிகள் இற்றைக்கு 12,000 ஆண்டுகளாகும். ஆனால் இலங்கையிற் பயன்படுத்தப்பட்ட கற்கருவிகளின் காலம் அதற்கும் பல ஆயிரம் ஆண்டுகள் முற்பட்டவையாகும். பட்டதொம்பலென என்னுமிடத்திற் காணப்பட்டவை 31,000 ஆண்டுகளுக்கும், பூந்தலவுக்கு அருகில் அமைந்துள்ள கரையோரப் பகுதிகள் இரண்டிற் காணப்பட்டவை 28,000 ஆண்டுகளுக்கும், பெலிலென குகையிற் காணப்பட்டவை 30,000 ஆண்டுகளுக்கும் முற்பட்டவையாகும். 
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் கலாநிதி கா. இந்திரபாலாவின் தலைமையில்; நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வில் கி.மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த மனிதன் ஒருவனுடைய புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப்புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட முத்திரை ஒன்றில் இரண்டு வரியில் எழுத்துக்கள் காணப்பட்டன. இந்த எழுத்துக்களில் ஒரு வரி தமிழ் பிராமியிலும், மற்றது சிந்துவெளிக் குறியீடுகளை ஒத்தும் அமைந்திருந்தன. இதை கோவேந்த, கோவேதான், கோவேதம், எனப் பல்வேறு வகையில் தமிழி மொழிச் சொல்லாக அடையாளப்படுத்தியுள்ளனர்;. இதை அடிப்படையாகக் கொண்டு இது ஒரு தலைவனுடைய புதைகுழியாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. 
இது மட்டுமல்லாமல் வேலனை சாட்டிப் பிரதேசத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொல்பொருளியல் பிரிவினால் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட மட்பாண்டங்களும் மனித எலும்புகளும் சாட்டியை அண்டிய பிரதேசத்தில் கி.மு. 1000 மாம் ஆண்டுதொட்டு நாகரீகமடைந்த மக்கள் அங்கு வாழ்ந்தாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
இவற்றை விட இலங்கை தீவின் வடக்கே பூநகரியில் இருந்து தெற்கே திசமகாராகமை வரை எழுத்துக்களோடு கூடிய பல மட்பாண்டத் துண்டுகள் கிடைத்துள்ளன. இவற்றுள் சிலவற்றில் வேள என்ற எழுத்து காணப்படுகின்றது. இது தொல் தமிழ் நாட்டில் இருந்த வேளிர் குடியைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. இலங்கையில் ஆரம்பக்கால தலை நகரமான தலைநகரமான அனுராதபுரத்திலும்; பிற பகுதிகளிலும், கிமு 2 ஆம் நூற்றாண்டில் தம்மை தமேலா அல்லது தமேதா என அழைத்துக்கொண்டவர்கள் வாழ்ந்ததற்கான பிராகிருத மொழி கல்வெட்டுச் சான்றுகள் கிடைத்துள்ளன. இவ்வாறான ஐந்து கல்வெட்டுக்களில் இரண்டு வவுனியா மாவட்டத்தில் உள்ள பெரிய புளியங்குளத்திலும், ஒன்று திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சேருவிலையிலும், ஒன்று அம்பாறை மாவட்டத்தில் குட்டில் என்னும் இடத்திலும், இன்னொன்று அனுராதபுரத்திலும் கண்டெடுக்கப்பட்டவை.இந்த தமேலா அல்லது தமேதா என்று பிராகிரத மொழியில் குறிப்பிடப்படுவது தமிழி அல்லது தமிழ் மொழி பேசிய மக்களையேயாகும். 
திசமகாராகமையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளின்போது கிமு 2 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 2 ஆம் நூற்றாண்டு காலப் பகுதியில் வெளியிடப்பட்ட உள்ளூர் நாணயங்கள் கிடைத்தன. இவற்றில் சிலவற்றில் தமிழர் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. இது அக்காலத்தில் இலங்கைத் தீவு முழுவதிலும் தமிழர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரமாகவும் அவர்கள் வணிகத்தில் ஈடுபட்டிருந்தமைக்கான சான்றாகக் கருதப்படுகிறது. 
உண்மையில் இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட பெருங்கற்கால பண்பாட்டுச் சின்னங்கள் இலங்கையின் மாநிடவியல் வரலாறு இடைகற்கால பண்பாட்டில் இருந்து பெரும்கற்கால பண்பாட்டுக்கும் அதிலிருந்த நவீன வரலாற்றுக் காலத்திற்கும் ஒரு படிமுறை வளர்ச்சியுடாகவே நகர்ந்திருக்கிறது என்பதை நிரூபித்திருக்கின்றன. 
‘விஜயனின் வருகைக்கு முன் இலங்கையில் நாகரீகமான சமூக அமைப்பு இருக்கவில்லை.விஜயனது வருகையே இலங்கையின் வரலாற்றில் ஒரு முற்போக்கான பாச்சலை ஏற்படுத்தியது’ என்று சிங்கள வரலாற்று நூலான மகாவம்சம் குறிப்பிடுவதை இந்த ஆய்வுகள் பொய் என்று நிரூபித்துள்ளன. 
(தொடரும்)

———————————————————-

இந்த பகுதியை எழுத உதவிய நூல்கள் மற்றும் ஆவணங்கள்.

• Romila Thapar, A History of India,
• V.D.Mahajan Ancient India
• Indian History – Important events: History of India. An overview”. History of India. Indianchild.com.
• The Ancient Cities of the Indus Valley Civilization. Oxford University Press
• A Social History of Early India by Brajadulal Chattopadhyaya
• Biological anthropology of upper Pleistocene hominids from Sri Lanka: Kenneth A. R. Kennedy, 
• http://www.srilankaecotourism.com/caving_home.htm
• http://www.lankalibrary.com/geo/dera1.html
• பொன்னம்பலம், இரகுபதி; யாழ்ப்பாணத்தின் முற்காலக் குடியேற்றங்கள் – ஒரு தொல்லியல் ஆய்வு
• http://www.tamilnet.com/art.html?catid=79&artid=32303
• ஆதி கால இலங்கை தமிழர் வரலாறு .ப .புஸ்பரட்ணம்

 

வல்லிபுரம் தமிழீழ வரலாற்றின் திறவுகோல்…


அறிமுகம்

தமிழீழ தமிழர்களுடைய வரலாறு இன்றுவரை விஞ்ஞான ரீதியான பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதன் உண்மைத் தன்மையை சான்றாதாரங்களுடன் நிறுவி ஒரு முழுமையான வரலாறாக எழுதப்படவில்லை.

மானிடவியல்,சமூகவியல் பார்வைகள் புறந்தள்ளப்பட்டு புராண இதிகாச இலக்கிய தகவல்கள், பகுப்பாய்வுக்குட்படாத தொல்லியல் தகவல்கள்,மதச்சார்பு நிலை என்பவற்றை வைத்து ஊகங்களின் அடிப்படையில் தான் தமிழீழ தமிழர்களின் பொது வரலாறு கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

சில வரலாற்றுப் பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் இதற்கான முயற்சிகளைச் செய்த போதிலும் அவை அவர்களின் சொந்தக் கருத்துக்களாகவும் சொந்த முடிவுகளாகவுமே பார்க்கப்பட்டன.
வரலாற்றை ஆய்வு செய்யும் போது எப்போதும் புறநிலையில் இருந்து பார்க்கவேண்டும் என்பதும் அகநிலைப் பார்வை என்பது பக்கச்சார்புக்கும் புனைவுகளுக்கும் வழிகுத்துவிடும் என்பதைப் பல வரலாற்றாசிரியர்கள் உணரவில்லை.
பௌத்த சிங்கள பேரினவாத சார்புநிலையில் இருந்து சிங்கள மக்களின் வரலாற்றை எழுதிய சிங்கள வரலாற்றாசிரியர்கள் தேரவாத பௌத்தத்தின் வரலாறே இலங்கைத்தீவின் வரலாறென்றும் அந்த மதத்தைக் கடைப்பிடித்த சிங்கள மக்களே இலங்கை தீவின் சொந்தக்காரர்கள் என்றும் அநுராதபுர காலச்சரமும் ஆட்சியுமே இலங்கையின் தொன்ம கலாச்சாரம் என்றும் நிறுவிய போது,சைவம் தமிழ்கலாச்சார சார்பு நிலையில் இருந்து இலங்கைத் தமிழர்களுடைய வரலாற்றைச் சொல்ல முற்பட்ட தமிழ் வரலாற்று ஆசிரியர்களால் பௌத்த மதம் தமிழ் நாட்டில் இருந்த தமிழ் பௌத்தர்களின் உதவியுடனேயே இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது,அது இலங்கையில் பரவிய போது சிங்கள இனம் தோற்றம் பெறவில்லை.தமிழகத்தைச் சேர்ந்த போதி தர்மர், ஆச்சரிய தர்மபாலர், புத்ததத்தர் முதலான 28 மேற்பட்ட தமிழ் பௌத்த துறவிகளாலேயே இலங்கையில் ஆரம்பக்கால பௌத்த மதம் வளர்த்தெடுக்கப்பட்டது, பௌத்த மதத்தில் ஏற்பட்ட தத்துவ பிளவு காரணமாக மகாயான பௌத்தம் மற்றும் தேரவாத பௌத்தத்துக்கு இடையிலான மோதலில் தேரவாத பிரிவு மகாயான (அன்றையதமிழ்) பௌத்தத்துக்கு எதிரான பாளி மொழி சார்பு நிலையை எடுத்ததன் காரமாகவே தமிழ் பாளிக் கலப்பில் சிங்கள மொழி தோன்றியது, தேரவாத ஒருங்கிணைவுச் சிந்தனையே சிங்கள மொழிபேசிய மக்கள் திரள் ஒரு இனமாக உருப்பெற்றது. இது கி.பி.4 ம் நூற்றாண்டில் ஆரம்பித்து 7ம் நூற்றாண்டிலேயே உச்சம் பெற்றது, என்ற உண்மைகளை வரலாற்று ஆதாரங்களுடன் நிறுவ முடியவில்லை.

தொல் பொருள் ஆய்வுக்களங்களிலே சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் பௌத்த தடயங்களைத் தேடுவதை போலத் தமிழ் வரலாற்று ஆசிரியர்கள் சைவ தடயங்களையே தேட முற்பட்டார்கள்.தங்களுடைய சார்பு நிலைக்குள் அடங்காத தடயங்கள் கிடைத்தால் அவற்றை மூடி மறைக்கும் வேலைதான் இரண்டு பகுதியினராலும் செய்யப்பட்டது.விரல் விட்டு எண்ணக் கூடிய வரலாற்றாசிரியர்களும் ஆய்வார்களும் மட்டும் தான் தாங்கள் ஆய்வுக்குட்படுத்திய களப்பகுதியில் வாழ்ந்த மக்களுடைய வாழ்வியல் முறை பண்பாடு சமூக அமைப்பு என்று பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்தார்கள்.
பௌத்த சிங்கள சார்புநிலை வரலாற்றாசிரியர்கள் சிங்கள இனத்தின் தொன்ம ஆட்சியாக அநுராதபுர ஆட்சியைத் திரிவு படுத்திச் சுட்டிக்காட்டி நிறுவுகின்ற போது, நமது சைவம் தமிழ் சார்புநிலை வரலாற்று ஆசிரியர்களால் தமிழினத்தின் தொன்ம ஆட்சியாக 13 ம் நூற்றாண்டில் தோற்றம் பெற்ற ஆரிய சக்கரவர்த்திகளின் ஆட்சியை கை காட்டுவதைத் தவிர வேறு சான்றுகள் எதையும் முன் வைக்க முடிவதில்லை

.சிலர் கி.பி 6ம் நூற்றாண்டளவில் கந்தரோடை என்கிற கதிரமலையில் இருந்து ஆட்சி செய்ய உக்கிர சிங்கனுடை ஆட்சியைப் பற்றி குறிப்பிடுவதுண்டு.ஆனால் அவன் ஒரு தமிழ் பௌத்த மன்னனாக இருந்தான் என்று தெரியவருவதால் அவனது ஆட்சியைப்பற்றி ஆராயவோ,அவனது ஆட்சிக்காலத்தில் இருந்த சமூக அமைப்பை பற்றி ஆராயவோ பலரும் முன்வரவில்லை.அதே போல நாக தீபம் நாக நாடு என்ற சங்க இலக்கியங்களில் தெளிவாக குறிப்பிடுகின்ற நயினாதீவு தங்களுடையது என்று பௌத்த சிங்கள பேரின வாதிகள் உரிமை கொண்டாடுகின்ற போது நாங்கள் 17ம் நூற்றாண்டில் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஒரு பிராமணர் நயினார் தீவு என்று வைத்த சாதிப் பெயர்தான் சரியானது என்று வாதிட்டு 2500 ஆண்டு கால வரலாற்றை தொலைக்கிறோம்.

அநுராதபுரம் தமிழர்களின் வரலாற்றுத் தாயகம்.அந்த நகரத்தின் தொன்மை சமூகம் தமிழ் சமூகம்.அங்கு நிலவிய ஆட்சி தமிழர்களுடைய ஆட்சி.எல்லாளன் துட்ட கெமுனு யுத்தம் என்பது பௌத்தத்துக்கும் பௌத்தர் அல்லாத ஆட்சியருக்கும் நடந்த யுத்தம்.துட்ட கெமுனுவின் காலத்தில் சிங்கள மொழியும் சிங்கள இனமும் தோன்றவே இல்லை.இந்த உண்மைகளை ஆதாரபுர்வமாக நிரூபிக்கும் நேரம் வந்துவிட்டது.அதற்கான திறவு கோலாக முன்னாள் பெரும் தலைநகரமும் இந்நாள் சிறு கிராமமுமான இருக்கும் வல்லிபுரத்தின் வரலாறு இருக்கப் போகிறது.

எனவே புறநிலையில் இருந்து வரலாற்றைப் பார்த்து, தொலைந்து போன அல்லது மறைக்கப்பட்ட எமது தொன்மங்களை கண்டறிந்து அவற்றை ஆய்வு மற்றும் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி எமது உண்மையான வரலாற்றை எழுதுவதற்கான அவசியமுள்ள காலகட்டம் இதை விட வேறு இருக்க முடியாது.
(தொடரும்)

 

பிரான்சில் அரசியல் தஞ்ச கோரிக்கையாளர்களின் எதிர்காலம்…04


autorisation-de-travail-salarie-9782914132626
பிரான்சில் தொழில் முறை விசா பெறுவது இலகுவான விடயம் என்றும் 3 வருட வருமான வரி சான்றிதழ், 6 மாத சம்பளப்பட்டியல், வதிவிடத்தை உறுதிப்படுத்தும் கடிதம்,கடவுச் சீட்டு இவை இருந்தால் அதைப் பெற்றுவிடலாம் என்றும் பலரும் நினைக்கிறார்கள்.
முதலாவது இந்த விசா என்பது ‘ஒருவர் பிரான்சுக்கு வந்து விட்டார்.இங்கு நீண்ட காலம் வாழ்ந்துவிட்டார்’ என்ற காரணங்களின் அடிப்படையில் வழங்கப்படும் ஒரு சலுகை அல்ல.இதுபிரான்சின் தொழிலாளர் சந்தையின் தேவையைப் பொறுத்து வழங்கப்படும் ஒரு வெளிநாட்டுத் தொழிலாளி பிரான்சில் தங்குவதற்கும் வேலை செய்வதற்குமான தற்காலிக அனுமதி மட்டுமே’ என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.இந்த விசாவின் ஆயுட் காலம் முதலில் 3 மாதம் அல்லது 1 வருடம் மட்டுமே.பின்னர் தேவையை பொறுத்து இது பிராந்திய காவல்துறை ஆணையாளரால் புதுப்பித்து கொடுக்கப்படும்.
……….A. Le visa de long séjour valant titre de séjour (séjour compris entre 3 mois et un an), dit VLS/TS
Ce visa a été institué pour certaines catégories d’étrangers (article R311-3 et articles R313-1 et suivants du CESEDA) :
• les conjoints de ressortissant français : visa d’un an ;
• les travailleurs salariés :
– si le contrat de travail est établi pour une durée indéterminée(CDI) : visa d’un an ;
– si le contrat de travail est établi pour une durée déterminée (CDD) : visa modulable en mois : de 4 à 12 mois ……….

இந்த விசாவை பெற்றவர் நீண்ட காலம் வேலையில்லாமல்இருந்திருந்தாலோ,குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தாலோ அல்லது இந்த விசாவை பெற்றுக்கொள்வதற்கு போலியான ஆவணங்களை சமர்ப்பித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலோ பிராந்திய காவல்துறை ஆணையாளர் (Le Préfet ) இந்தவிசாவை மீண்டும் புதுப்பித்துக் கொடுக்க மறுப்பதற்கும் அவரை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கும் உரிமையுள்ளது.
இந்த விசாவை பெற்றுக்கொள்வதற்கு நிரந்த வேலைக்கான ஒப்பந்தம்(Le contrat à durée indéterminée (CDI)) அல்லது காலவரையறைக்குட்பட்ட வேலை ஒப்பந்தம்(Le contrat de travail à durée déterminée (CDD) ஒன்று இந்த விசாவுக்கு விண்ணப்பிப்பவரிடம் இருக்கவேண்டும்.
ஏற்கனவே விசா இல்லாமல் இருக்கும் ஒருவர் இந்த வேலை ஒப்பந்தத்தைப் பெறுவது எப்படி? என்பதும், வேலை செய்து சம்பளப்பட்டியலை பெற்றுக்கொள்வது எப்படி?என்பதும் மிக முக்கியமான கேள்விகள்.
இது அவ்வளவு சுலபமான விடயமல்ல.அநேகமான தொழில் வழங்குநர்கள் பிரான்சில் வசிப்பதற்கான எந்தவிதமான சட்டபுர்வமான ஆவணமும் இன்றி இருக்கும் ஒருவரை தமது நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்த விரும்பமாட்டார்கள்.ஆனால் ‘ஒரு தொழில் வங்குனர் விரும்பினால் தனது தொழில் நிறுவனத்தில் வேலை செய்வதற்கு நீங்கள் தேவைப்படும் ஒருவர்’ என்று அவர் தனது நிறுவனத்தில் உங்களுக்கு வேலை செய்வதற்கு அனுமதிக்குமாறு (Autorisation de travail )தனது நிறுவனம் அமைந்துள்ள பிராந்திய காவல்துறை ஆணையாளர் அலுவலகத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
L’étranger, qui entre en France pour occuper un emploi salarié, doit détenir une autorisation de travail (appelée aussi permis de travail)..
இந்த விண்ணப்பத்தைத் தொழில் வங்குனரின் உதவியோடு நீங்கள் தான் பிராந்திய காவல்துறை ஆணையாளர் அலவலகத்தில் அதில் கோரப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களுடனும் சமர்பிக்க வேண்டும்.இந்த அனுமதி கிடைத்ததும் நீங்கள் சட்ட புர்வமாக வேலை செய்து சம்பளப்பட்டியல்களை பெற்றுக்கொள்ளலாம்.இந்த அனுமதி அநேகமாக 3 மாதத்துக்கு ஒரு முறை புதுப்பித்துக் கொள்ளத்தக்கதாகவே வழங்கப்படும் 6 மாத காலம் சென்ற பின்பு முன்பு குறிப்பிட்டதை போல தொழில் முறை விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்.
பிரான்சில் புதிதாக வந்து அரசியல் தஞ்சம் கோருபவர்களுக்கு முதலில் ஒரு மாதமும் பின்னர் 6 முதல் 9 மாதமும் செல்லுபடியாகத்தக்க தற்காலிக விசா வழங்கப்பட்டுவருகிறது.இந்தக் கால எல்லைக்குள் OFPRAஅல்லது CNDA அவர்களது அரசியல் தஞ்ச கோரிக்கை மனுவைப் பரிசீலித்து முடிக்காவிட்டால் மீண்டும் இந்த விசா புதுப்பித்து கொடுக்கப்படுகிறது.இது வரை காலமும் இந்த விசாவில் வேலை செய்ய முடியாத நிலையே இருந்து வந்தது.ஆனால் கடந்த வருடத்தில் (2016)இருந்து இந்த விசாவோடு Autorisation de travail எனப்படும் வேலை செய்வதற்கான அனுமதியைப் பெற்று வேலை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
(தொடரும்)

 

பிரான்சில் அரசியல் தஞ்ச கோரிக்கையாளர்களின் எதிர்காலம்….03


maxresdefaultcode asileகடந்த வருடம்(2016) பிரான்சில் அரசியல் தஞ்ச கோரிக்கையாளர்கள் விடயத்தில் OQTF (L’obligation de quitter le territoire français)எனப்படும் நாட்டைவிட்டு வெளியேறும் உத்தரவு தொடர்பாக கடந்த காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மென்போக்கு அணுகுமுறையிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டது.
கடந்த காலத்தில் அரசியல் தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் வசிக்கும் பிராந்திய காவல்துறை தலைமையகத்தால் (La Préfecture) ‘ஒரு மாத காலத்திற்குள் பிரான்சை விட்டு வெளியேற வேண்டும்’ என்று குறிப்பிட்டு அனுப்பிவைக்கப்படும் அல்லது நேரடியாக வழங்கப்படும் இந்த நாட்டைவிட்டு வெளியேறும் உத்தரவை பெரும்பாலான அரசியல் தஞ்ச கோரிக்கையாளர்கள் பாரதூரமான ஒரு விடயமாக எடுத்துக்கொண்டதில்லை.அதற்குக் காரணம் கடந்த காலத்தில்,அரசியல் தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களைத் தேடிப்பிடித்து கட்டாயமாக நாடுகடத்தும் நடைமுறை பொது வழக்கமாக ; இருக்கவில்லை.ரூமேனியர்கள் மற்றும் சில ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்தவர்களை தவிர ஏனையோர் விடயத்தில் நெகிழ்வுத் தன்மையே காண்பிக்கப்பட்டது.இதனால் அவர்கள் இந்த உத்தரவைத் தூக்கி வைத்து விட்டு இருந்ததே வழக்கமாக இருந்தது. 3 முதல் 5 தடவைகளுக்கு மேல் நாட்டை விட்டு வெளியேறும் உத்தரவைப் பெற்ற பலர் இருந்தார்கள்.
ஆனால் கடந்த வருட இறுதியில் இருந்து இந்த நெகிழ்வு போக்கு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
தற்போது அரசியல் தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்டவருக்கு நாட்டைவிட்டு வெளியேறும் உத்தரவு வழங்கப்பட்டால் அதில் குறிப்பிடப்பட்ட நிர்வாக நீதிமன்றத்துக்கு (Tribunal Administratif) அதற்கு எதிராக மேல் முறையீடு செய்ய வேண்டும்.இந்த மேல்முறையீட்டைச் செய்வதற்கு முன்பு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது.ஆனால் தற்போது 3 நாட்களுக்குள் அல்லது 15 நாட்களுக்குள் அல்லது ஒரு மாதத்துக்குள் என்று இந்தக்கால அளவு மாற்றப்பட்டுள்ளது.
இந்தக் கால அவகாசத்துக்குள் அவர் மேல் முறையீடு செய்யவிட்டால் அடுத்த தடவை அவர் சோதனை நடவடிக்கை ஒன்றில் கைது செய்யப்பட்டாலோ நிர்வாக நடைமுறை சார்ந்த தொடர்புகளுக்குப் பிராந்திய காவல்துறை தலைமையகத்துக்கு (La Préfecture) சென்றாலோ உடனடியாக கைது செய்யப்பட்டு நாடுகடத்துவதற்குரிய தடுப்பு முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டுத் தடுத்துவைக்கப்படுவார்.OFII இவ்வாறானவர்களுக்கு மீளாய்வு மனுச் (Reexamen) செய்வதற்குச் சந்தர்ப்பம் வழங்காது.இவ்வாறான ஒரு சூழ்நிலையில் ஒரு சட்டவாளரை நியமித்து தனது நாடுகடத்தலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வாதாட வேண்டும்.இப்படிச் செய்யும் போது முன்பு நாட்டைவிட்டுச் செல்லுமாறு கூறிய போது அதை ஏன் மறுக்கவில்லை? என்பதற்குக் காரணம் சொல்லியாக வேண்டும்.அதேவேளை கைது செய்யப்பட்டவர் பாரிசிலுள்ள தனது தாய்நாட்டு தூதரகத்துக்குச் சென்று கடவுச்சீட்டைப் பெற்றுக்கொண்டதன் மூலம் அகதிகளுக்கான ஜெனிவா சட்ட பாதுகாப்பில் இருந்து தானாக விலகிக் கொண்டிருந்தால் அவரை நாடுகடத்தும் நடவடிக்கையை பெரும்பாலும் சட்டவாளரால் தடுத்து நிறுத்த முடியாது.
முதல் தடவை இந்த நாட்டை விட்டு வெளியேறும் உத்தரவு கிடைத்தவுடன் அதற்கு எதிராக மேல்முறையீடு செய்பவர்களின் விண்ணப்பத்தை நிர்வாக நீதிமன்றம் விசாரணைக்கு அழைத்தோ அல்லாது அழைக்காமலோ நிராகரிப்பு செய்தாலும் மறுபடி ஒரு தடவை அரசியல் தஞ்ச கோரிக்கை மீளாய்வு மனுச் செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.
முன்பு ஒருவர் தனது மீளாய்வு மனுவை (Reexamen) ஒப்பராவுக்கு அனுப்பி அது நிராகரிக்கப்பட்டால் மறுபடியும் CNDA(La Cour nationale du droit d’asile) க்கு மேல் முறையீடு செய்யலாம்.இந்த மேல் முறையீடு தொடர்பான முடிவை CNDA எடுக்கும் வரை அவருக்கு நாட்டை விட்டு வெளியேறும் உத்தரவு வழங்கப்படுவதில்லை.ஆனால் தற்போது ஒருவரது மீளாய்வு மனுவை (La Préfecture) ஒப்ரா நிராகரித்துவிட்டால் அவர் CNDAக்கு மனுச் செய்திருந்தாலும் அவரை நாட்டை விட்டு வெளியேறும் படியான உத்தரவைப் பிறப்பிப்பதற்கு பிராந்திய காவல்துறை தலைமையகங்களுக்கு( La Préfecture) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல 3 வருட வருமான வரி சான்றிதழ் 6 மாத சம்பளப்பட்டியல் என்பவற்றை சமர்பித்ததன் மூலம் தற்காலிகமாக 1 வருட அல்லது தொழில் முறை விசா வழங்கப்பட்டவர்களைக் கூட தொடர்ச்சியாக அவர்களுக்கு அந்த விசாவை புதுப்பித்து கொடுக்கத் தகுந்த காரணங்கள் இல்லை என்ற பிராந்திய காவல்துறை ஆணையாளர்(Le préfet) கருதினால் அவர்களை நாட்டை விட்டுச் செல்லும்படியான உத்தரவைப் பிறப்பித்து நாட்டைவிட்டு வெளியேற்றலாம்.இவர்கள் நிர்வாக நீதிமன்றத்துக்கு தங்களது நாடுகடத்தலுக்கு எதிராக மேல் முறையீடு செய்யலாமே தவிர அகதிகளுக்கான ஜெனிவா சட்ட பாதுகாப்பு நிபந்தனைகளின் கீழ் ஒரு போதும் மீளாய்வு மனுவைச் சமர்ப்பிக்க முடியாது.
(தொடரும்)

 

பிரான்சில் அரசியல் தஞ்ச கோரிக்கையாளர்களின் எதிர்காலம்…2


படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரைகடந்த 2016 ஓகஸ்ட் மாதம் வரை பிரான்சிலுள்ள அரசியல் தஞ்சக் கோரிக்கையாளர்களின் நிர்வாக தரவுகள் பிரெஞ்சு அரசாங்கத்தின் தனித்தனி நிர்வாக அலகுகளாலேயே கையாளப்பட்டு பட்டுவந்தன.
ஆனால் கடந்த 2016 செப்டம்பருக்குப் பின்னர் OFII எனப்படும் குடிவரவு ஒருங்கிணைப்பு அலுவலகம் இந்த அனைத்து விடயங்களையும் ஒருங்கிணைக்கும் நிறுவனமாக மாற்றப்பட்டது .அரசியல் தஞ்சம் கோரும் ஒருவர் OFII க்கு ஊடாகவோ தனது நிர்வாக செயற்பாடுகளை செய்ய வேண்டிய கட்டாயம் உருவாக்கப்பட்டது.நிர்வாக வசதிக்காக COALLIA,CAFDA போன்ற நிறுவனங்களுக்கு அரசியல் தஞ்சம் கோருபவர்களின் சில விடயங்களைக் கையாளும் உரிமை வழங்கப்பட்டாலும், அவை OFII யினூடாகவே அவற்றைச் செய்யுமாறு பணிக்கப்பட்டன.ஆக மொத்தத்தில் OFII என்பது பிரான்சிலுள்ள அரசியல் தஞ்ச கோரிக்கையாளர்களின் அனைத்து நிர்வாகத்தரவுகளையும் தன்னகத்தே வைத்திருக்கும் ஒரு நிறுவனமாக உருவாகியுள்ளது.(ஆனால் OFPRA மற்றும் CNDA யில் ஒருவர் தனது அரசியல் தஞ்ச மனுவுக்காக தெரிவித்த விடயங்களையோ, சமர்ப்பித்த ஆவணங்களையோ பார்வையிடும் அதிகாரமும், கையாளும் அதிகாரமும் OFII க்கு இல்லை. இது முக்கியமான விடயம்.)
முன்பு பொதுவாக அரசியல் தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை தேடிக்கண்டுபிடிப்பதற்கு பிரெஞ்சு காவல்துறையின் குடிவரவு பிரிவு பெரும் சிரமத்தை எதிர்நோக்க வேண்டியிருந்தது.அவர்கள் கொடுத்த முகவரி ஒன்றாக இருக்கும் ஆனால் அவர்கள் அந்த முகவரியில் இருக்க மாட்டார்கள்.தேடுதல் நடவடிக்கையில் கைது செய்து நாட்டை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டு விடுதலை செய்தால் அவர்கள் கைது செய்த முகவரியை விட்டு வேறு முகவரிக்குச் சென்று விடுவார்கள்.அவர்களது நிர்வாக தரவுகளை வைத்து அவர்களைத் தேடி கண்டுபிடிப்பது அல்லது அவர்களை குடிவரவு காவல்துறை அலுவலகத்துக்கு வரவழைப்பது சிக்கலானதும் செலவு கூடியதுமான விடயமாக இருந்தது.

ஆனால் இப்போது OFII யின் கீழ் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதால் இது இலகுவாகப்பட்டிருக்கிறது. OFII ஒருவருக்கு தமது அலுவலகத்துக்கு வரும்படி அழைப்பு அனுப்பினால் அதை ஏற்று அவர் அங்கு செல்ல வேண்டும்.அதை உதாசீனப்படுத்தினால்,அடுத்த தடவை அவரால், ‘தான் அந்த அழைப்பை ஏற்காததற்கான ஏற்றுக்கொள்ளத்தக்கக் காரணத்தை தெரிவிக்காமல் எந்த நிர்வாக அலுவல்களையும் செய்ய முடியாது.

அரசியல் தஞ்ச கோரிக்கையாளர்களின் நிர்வாக விடயங்களைக் கையாளும் அதிகாரம் OFII க்கு மாற்றப்பட்ட பின்பு அரசியல் தஞ்ச கோரிக்கை மறுக்கப்பட்டவர்கள் தொடர்பான முடிவு எடுப்பதற்காக, அரசியல் தஞ்ச கோரிக்கையை மீள்பரிசீலணை (Reexamen ) செய்யும் நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.’முன்பு ஒருவர் மீள்பரிசீலணைக்கு ஓப்ராவுக்கு மனுச் செய்ய, அவர்கள் ஒரு ஆறு மாதம் காக்க வைத்த பின் பிராந்திய காவல்துறை தலைமையகத்துக்குச் செல்லும்படி கடிதம் அனுப்ப,அந்தக் கடிதத்தை கொண்டு அவர் பிராந்திய காவல்துறை தலைமையகத்துக்கு செல்ல,அவர்கள் மிள்பரிசீலணைக்கான (ரோஸ் கலர்) படிவம் கொடுக்க பின்னர் அதை நிரப்பி ஒப்ராவுக்கு அனுப்ப அவர்கள் அதை மாதக்கணக்கில் சில நேரங்களில் வருடக்கணக்கில் முடிவெடுக்கமாமல் வைத்திருக்க’ என்று இந்த நடை முறை மிக நீண்டதாகவும் சிக்கலானதாகவும் இருந்தது.
ஆனால் புதிய நடைமுறையின் கீழ் 15 நாள் முதல் 3 மாத காலத்துக்குள் இது தொடர்பான முடிவு கிடைக்கும் படி செய்யப்பட்டது.முதல் தடவை மீள் பரிசிலணை செய்பவர்களுக்குப் புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணம்(விசா அல்ல) வழங்கப்பட்டது.இந்தத் திட்டத்தின் கீழ் அரசியல் தஞ்ச கோரிக்கை மறுக்கப்பட்ட அநேகமானவர்கள் உள்வாங்கப்பட்டார்கள்.அவர்களது அனைத்து நிர்வாக தகவல்களும் OFII யால் உள்வாங்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டது.
அடுத்து தொழில் முறை விசா வழங்கும் நடைமுறையிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டது.3 வருட வருமான வரி பத்திரமும் 6 சம்பளப்பட்டியலும் இருந்தால் தற்காலிக தொழிமுறை விசா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.முதல் கட்டமாக பலருக்கு இந்த விசா வழங்கப்பட்டது.இதற்கான அடிப்படை நிபந்தனையாக இதற்கு விண்ணப்பிவர்கள் பாரிசிலுள்ள தங்கள் நாட்டுத் தூதரகத்துக்கு சென்று கடவுச்சீட்டு பெற்று வரவேண்டும் என்று கூறப்பட்டது.
‘தன்னுடைய நாட்டில் அந்த நாட்டு அரசாங்கத்தாலும் அதன்படைகளாலும் தனது உயிருக்கு ஆபத்து’ என்று கூறி பிரான்சில் அரசியல் தஞ்சம் கோரிய ஒருவர் பாரிசிலுள்ள அந்த நாட்டுத் தூதரகத்துக்கு சென்று கடவுச்சீட்டை பெறுவதன் மூலம் ‘தனது அரசியல் தஞ்சக் கோரிக்கையில் தெரிவித்த ‘அரசாங்கத்தாலும் அதன்படைகளாலும் உயிருக்கு ஆபத்து என்ற முக்கியமான காரணம் பொய் என்பதை ஒப்புக்கொள்கிறார்.இதன் மூலம் பிரான்சிலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் அரசியல் தஞ்சப் பாதுகாப்பை பெறும் தகுதியை அவர் இழக்கிறார்.

தொழில் முறை விசா என்பது அரசியல் தஞ்ச கோரிக்கை விசாவை போலச் சட்ட பாதுகாப்பு உத்தரவாதத்துக்கு உட்பட்டதல்ல.பிரான்ஸ் அரசாங்கம் எப்போது வேண்டுமானாலும் இவ்வாறான விசாவை புதுப்பிக்க மறுத்து அல்லது இரத்துச் செய்து ஒருவரை அவரது தாய் நாட்டுக்கு திருப்பி அனுப்பலாம்.இவ்வாறான சந்தர்ப்பத்தில் எனக்கு எனது நாட்டில் பிரச்சனை நான் அங்கு செல்ல முடியாது என்று இந்த விசாவை பெற்றுக் கொண்டவர் கூறமுடியாது.
இந்தத் தொழில் முறை விசா வழங்கலை இலகுவாகி விட்டதாக கூறப்பட்டாலும் இதற்கு விண்ணப்பித்த அனைவருக்கும் இது வழங்கப்பட வில்லை என்பது மிக முக்கியமான விடயம்.ஆரம்பத்தில் காட்டப்பட்ட இலகுத் தன்மை இப்போது இறுக்கப்பட்டிருக்கிறது.
இந்தத் தொழில் முறை விசாவை பெற முடியும் என்ற நம்பிக்கையில் நிறையப்பேர் தங்களது நாட்டு தூதரங்களுக்கு தங்களது சுய விருப்பத்தின் பேரில் சென்று கடவுச்சீட்டு பெற்றிருக்கிறார்கள்.
ஆக மொத்தத்தில் வதிவிட அனுமதியற்ற அரசியல் தஞ்ச கோரிக்கையாளர்களை நாடுகடத்துவதற்கு அவர்கள் நாட்டு கடவுச் சீட்டை பெற்றுக்கொள்ள வைப்பதற்கு இதுவரை இருந்த செலவு கூடிய அழுத்தத்தைப் பிரயோகிக்க வேண்டிய சிக்கலான நடைமுறைக்கு இலகுவாகத் தீர்வு காணப்பட்டிருக்கிறது.
(தொடரும்)

 

பிரான்சில் அரசியல் தஞ்ச கோரிக்கையாளர்களின் எதிர்காலம்…..


refu
பிரான்சில் புதிதாக பதவியேற்றுள்ள இம்மானுவேல் மக்ரோனுடைய அரசு அகதிகள் விடயத்தில் என்ன கொள்கையை கடைப்பிடிக்கப்போகிறது? என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் இருக்கிறது.
தற்போதைக்கு ‘தங்களது சொந்த நாட்டில் உண்மையில் அரசியல் காரணங்களுக்காக உயிரச்சுறுத்தலுக்கு உள்ளானவர்களுக்கு பிரான்ஸ் எப்போதும் அடைக்கலம் அளிக்கும்’ என்று மட்டும்
இம்மானுவேல் மக்ரோன் கூறியிருக்கிறார்.
குறிப்பாக அவர் பதவியேற்ற நாளில் இருந்து வதிவிட அனுமதியற்றவர்களை கைது செய்வது, தடுத்துவைப்பது நாடுகடத்துவது என்பன மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.
கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து மே மாதம் வரை வதிவிட அனுமதியற்றோரை கைது செய்வது நாடுகடத்துவதும் முன் எப்போதையும் விட அதிகரித்திருந்தது.
கடந்த காலத்தில் பிரான்சில் இருந்து அகதிகளைக் கட்டாயப்படுத்தி நாடுகடத்துவதில் குடிவரவு குடியகல்வு காவல்துறையினர் பெரும் சிக்கலை எதிர் கொண்டனர்.அதாவது வதிவிட அனுமதியற்ற ஒருவர் எந்த நாட்டவர் என்று தெரிந்தாலும் அந்த நாட்டுக்குரிய கடவுச்சீட்டோ அல்லது தற்காலிக பிரயாண பத்திரமோ இல்லாமல் ஒருவரை நாடுகடத்த முடியாது.
வதிவிட அனுமதியற்ற ஒருவரைக் கைது செய்யும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் நிறுத்தி அவரை நாடுகடத்துவதற்கான அனுமதியைப் பெற்றதும் அவருக்குக் கடவுச்சீட்டு அல்லது பிரயாண பத்திரம் எடுப்பதற்காக அவரது நாட்டுத் தூதரகத்துக்கு அழைத்துச் செல்வார்கள்.இவ்வாறு செல்வதற்கு பலர் அடம்பிடிப்பார்கள்.இவ்வாறான சந்தர்ப்பத்தில் அவர்களை விலங்கிட்டு கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்வார்கள்.இப்படிச் செல்பவர்கள் அவர்கள் நாட்டுத் தூதரகத்தில் தாங்கள் அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்லவென்று பொய் சொல்வதுடன் ஆவணங்களில் கையெழுத்திட மறுக்கும் சம்பங்கள் பரவலாக நடந்து வந்தது.ஒரு அகதி தான் ஒரு நாட்டைச் சேர்ந்தவன் இல்லை என்று மறுத்தால் அவருக்குக் கட்டாயப்படுத்தி கையொப்பம் வாங்கி கடவுச்சீட்டு வழங்குவதற்குச் சட்டத்தில் இடமில்லை.(குற்றவாளிகள் சர்வதேச காவல்துறையினரால் தேடப்படுபவர்கள் விடயத்தில் இந்த நடைமுறை வித்தியாசமானது.அவர்களது அனைத்து ஆவணங்களையும் குற்றவியல் காவல்துறையினர் தங்களது பொறுப்பில் எடுத்துப் பெற்றுக்கொண்டு விடுவார்கள்.)
ஆனால் பிரான்சைப் பொறுத்தவரை அகதிகள் விடயத்தில் காவல்துறையினர் நாடுகடத்தப்பட வேண்டிய அகதிகளுக்காக அவர்கள் நாட்டுத் தூதரகத்துடன் தொடர்பு கொண்டு அகதியின் கையொப்பம் இன்றி தாமாக கடவுச் சீட்டை பெறுவதற்குச் சட்டத்தில் இடமில்லை.
இது அகதிகளை நாடுகடத்துவது பொருட் செலவையும் பலப்பிரயோகத்தை செய்ய வேண்டிய நிற்பந்தத்தை ஏற்படுத்தும் ஒரு விடயமாக இருந்தது.இதைத் தவிர்த்து வதிவிட அனுமதியற்றவர்களை மிகச் சுலபமாக நாடுகடத்துவதற்கு ஒரு புதிய திட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.
இது தான் OFII எனப்படும் குடியரவு ஒருங்கிணைப்பு அலுவலகத்துக்கு அரசியல் தஞ்;ச கோரிக்கைக்கான அடிப்படை விடயங்களை கையாளும் அதிகாரம் வழங்கப்பட்டதாகும்.
(தொடரும்)